Sunday, March 10, 2013

முற்பிறவி – மறுபிறவிகள் உண்மையா?



Life Before Life

முற்பிறவி – மறுபிறவிகள் உண்மைதானா? – இது நீண்ட நெடுங்காலமாகவே மக்களிடம் இருக்கும் கேள்வி. வெகு காலமாகவே விவாதிக்கப்பட்டு வரும் விஷயமும் கூட. உண்மைதான் என்பது ஒரு சிலரது கருத்து. அதெல்லாம் பொய். அப்படி உண்மை என்றால் எனக்கு ஏன் முற்பிறவி ஞாபகங்கள் வருவதில்லை, ஒரு சிலருக்கு மட்டும் வருவது ஏன்? ஆகவே, அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது சிலரது கருத்து.

சிலம்பு, மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும், திருக்குறளிலும் முற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. பல்வேறு புராண வரலாறுகளும் அதுபற்றிக் கூறுகின்றன. இன்றளவும் உலகளாவிய அளவில் அதுபற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

மனிதன் இறக்கிறான். இறந்த பின் ஆவி நிலை அடைகின்றான். அவன் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகிறான். அவற்றில் சிலகாலம் வசித்த பின் எஞ்சிய தனது கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறான் என்கிறது கருடபுராணம்.


கர்மாக்கள் சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்ற மூன்று வகையாக இருக்கின்றன என்றும் அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க ஏதுமில்லை என்ற நிலையை அடைபவர்களுக்கு பூமியில் மறுபிறவி வாய்ப்பதில்லை என்கிறது கடோபநிஷத்.

உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவத்தை வலியுறுத்திய சாக்ரடீஸ் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

மரணத்திற்குப் பின் ஆன்மா ஹேடஸ் என்ற சூட்சும உலகிற்குச் சென்று பல நதிகளைக் கடக்கும். பின் பல்வேறு அனுபவங்களைப் பெற்று மறுபிறவி எடுக்கும் என்கிறார் அவர். இந்நதி இந்து மதத்தில் கருட புராணம் கூறும் வைதஸ்வரணி நதிக்கரையை ஒத்துள்ளது.

ஒருவர் மரணமடையும்போது அவர் பருஉடல் மட்டுமே மரணமடைகின்றது. அவர் நுண்ணுடல் அல்லது ஆவி மரணமடைவது இல்லை. அது குறிபிட்ட கால இடைவெளியில் மீண்டும் பிறக்கிறது. இடைபட்ட காலத்தில் அதன் நிலைப்பாடு என்ன? அதன் உணர்வுகள் என்ன? அது எங்கே, என்னவாக இருந்தது என்பதுபற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக CONVERSATIONS WITH A SPIRIT என்னும் நூலில் ஆய்வாளர் DOLORES CANNON இறந்து போன ஆவிகளுடன் பேசி பல அதிசய சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.

முற்பிறவிச் செயல்களும் வாசனைகளும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவு பெற்று, அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன. அந்தாவது மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனது உண்மையான விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான். அந்த வினைகளினாலேயே அவனுக்கு ’கர்மா’ ஏற்படுகிறது – இது முற்பிறவி பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் கூறும் தகவலாக உள்ளது.

குறிப்பாக டாக்டர் இயான் ஸ்டீவன்ஸன் இதுபற்றி மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சியாளரான அவர், பல நாடுகளுக்கும் சென்று முற்பிறவி, மறுபிறவி பற்றி ஆராய்ந்திருக்கிறார். தனது ஆய்வு முடிவுகளை நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். அவரது நூலான ”Twenty Cases Suggestive of Reincarnation” என்ற நூல் மறுபிறவி ஆய்வாளர்களால் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்டீவன்சன் மட்டுமல்ல; பிரபல ஆராய்ச்சியாளர்களான ஜிம்டக்கர், கரோல் பௌமன், எடித் ஃபையர், எட்கர் கெய்ஸி, டாக்டர் லியான்ஸ், டாக்டர் கார்லிஸ் லூயிஸ், டாக்டர் ஹெரால்ட்ஸ்ன், டாக்டர் ஹெலன் வாம்பாச், பேராசிரியர் எச்.என்.பேனர்ஜி, டாக்டர் ஷிகா, டாக்டர் திரிவேதி போன்றோரும் பல நூல்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றனர்.

இந்தியாவிலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸைச் (NIMHANS) சேர்ந்த [National Institute of Mental Health & Neurosciences], Clinical Psychology துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, முற்பிறவி, மறுபிறவி பற்றிய சம்பவங்களை விளக்கியுள்ளார். பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து முற்பிறவி-மறுபிறவிச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ளனர். அவற்றில் சிலவற்றை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

(தொடரும்)

No comments:

Post a Comment