Monday, November 28, 2011





வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.




வர்மம் என்றால் என்ன?

உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.




குண்டலினியும் வர்மக்கலையும்

வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.




வர்மத்தின் அதிசயங்கள்




வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ, மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு




* ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.




* வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் இரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.




* ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவு முறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.




* ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.




* நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.




* மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர் நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

Wednesday, November 2, 2011





தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை மிக்க தியாகராஜ பாகவதர் (உண்மையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அன்றைக்கு அவர் பெயருக்கு முன் யாரும் போடவில்லை. பின்னாளில் சினிமா ஆய்வாளர்கள் அப்படி அழைக்கின்றனர்!) நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.




தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மக்களை தனது இனிய குரல் மற்றும் நடிப்பால் மயக்கியவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்றும் பாகவதர் என்றும் அன்றைய நாட்களில் அவரை மக்கள் அழைத்து மகிழ்ந்தனர்.




திருச்சி பாலக்கரைதான் அவரது சொந்த ஊர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், நல்ல இசைஞானம், கணீர் குரல் வளம் அவருக்கு. எனவே பவளக் கொடி என்ற படத்தின் மூலம் கடந்த 1934-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.




தொடர்ந்து நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட 14 படங்களில் நடித்து பிரபலமானார்.




அன்றைக்கு பாகவதர் மேலிருந்து அபரிமிதமான ஈர்ப்பு, நாடகத்தைத் தவிர மாற்று பொழுதுபோக்கே இல்லாத சூழல் காரணமாக அவரது ஹரிதாஸ் படம் 3 வருடங்கள் சென்னையில் ஓடி சாதனைப் படைத்தது.




சந்திரமுகி படம் வரும் வரை, தமிழில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை பாகவதர் படத்துக்கே இருந்தது.




ஆனால் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்குப் பிறகு, புகழ் வெளிச்சம் மங்கிய நிலையில் பாகவதர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். ஆனால் வறுமையிலும் பெருமையை காத்தார். கம்பீரத்தை இழக்காத வாழ்க்கை வாழ்ந்தார். தன்னைத் தேடி வந்த வாய்ப்புகள், பண உதவிகளை மறுத்துவிட்டார்.




1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உடல் நலிந்து சென்னை பொது மருத்துவமனையில் இறந்தார். திருச்சிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க இறுதி ஊர்வலம் நடந்தது. திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.




இப்போதும் ஒரு சாமானிய மனிதனின் கவனிக்கப்படாத சமாதியாகவே பாகவதர் அடக்கம் செய்யப்பட்ட இடம் காட்சி தருகிறது.




மூன்றே பேர்...




இந்நிலையில், தியாகராஜ பாகவதரின், 53வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவஞ்சலிக்கு தமிழ் சினிமாவிலிருந்து மட்டுமல்ல, அக்கம்பக்கத்திலிருந்தும் கூட யாரும் வரவில்லை.




தியாகராஜ பாகவதரின் சின்னம்மா சம்பூரணத்தம்மாளின் மகள் ஆனந்தலட்சுமி, அவரது கணவர் தெட்சிணாமூர்த்தி, இவர்களது மகன் தனபால் ஆகிய மூவர் மட்டுமே பாகவதர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த நேற்று வந்தனர்.




1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ராஜமுத்தி சினிமாவில் இடம் பெற்ற, "மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ' என்ற பாடலை உரக்கப் பாடி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.




தமிழ் சினிமாவில் ஒரு பெரும் மன்னரின் கம்பீரத்தோடு ஆட்சி செலுத்திய முதல் சூப்பர் ஸ்டார் பாகவதரின் நினைவு நாளை அனுசரிக்கவும் நேரமின்றி திரையுலகம் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாத குடும்பத்தினர், அவரவர் பணி அவரவருக்கு... யாரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று கூறி தங்கள் அஞ்சலியை முடித்துச் சென்றனர்!




மேன் மக்களல்லவா!