Sunday, March 10, 2013

ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 2

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பத்தைப் பார்ப்போம். சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால், சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வென்றார். அதனால் வன்மம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளின் மீது தீவினையை ஏவி விட்டனர். முருகன் அருளால், அந்தத் தீவினை, ஏவி விட்டவனையே சென்று தாக்குமாறுச் செய்தார் சுவாமிகள்.

இதனை,

“……………. தில்லை பின்னை வாழ்
குடில நாமர்கள் கொடிய சூனியம்
ஊட்டி னார் கொலற் கேயஃதுங் கெடுத்
துவகை செற்றுலா மவர்வ ழக்கெலாம்
ஒட்டி யேயெனக் கீந்த வென்றியிவ்
வுலகு கூறுமே யலகில் வேன்முதால்.”

-என்ற அவருடைய ’குமாரசுவாமியம்’ பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சங்கரர்

சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி, ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். அது போல சமணர்கள் செய்த துன் மந்திரவாதத்தால் பல சைவர்கள் பாதிக்கப்பட்டதையும் நாம் பெரிய புராணம் வழியாக அறியலாம். அவர்களை தனது இறையாற்றல் மூலம் வென்றார் ஞான சம்பந்தர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.

ஆக, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதான் என்பதை இவற்றின் மூலம் உணர முடிகிறது. அதே சமயம் ஏவல் வைக்கிறேன், எடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்தும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

காசு ஒன்றையே குறியாகக் கொண்ட இந்தச் சாமியார்கள், போலி ஆன்மீகவாதிகள், மாந்த்ரீகர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது, ஒருவேளை தனக்கு ஏவல், பில்லி, சூனியம் யாராவது வைத்து விட்டதாகக் கருதினால் அல்லது அப்படி நம்பினால் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையெல்லாம் பின்னால் வேறொரு பதிவில் மிக விரிவாகக் கூறுகிறேன்.

எதுவாக இருந்தாலும் உள்ள உறுதியுடன், தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால் எப்பகையையும் வெல்ல முடியும் என்பது உண்மை.

வள்ளுவர்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி

தாழாது உஞற்றுபவர்

என்று குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.



மன உறுதி கொள்வோம்; மன்பதை வெல்வோம்.

No comments:

Post a Comment