Sunday, March 10, 2013

மறுபிறவி அதிசயங்கள்

கல்பனா சாவ்லாவின் மறுபிறவி…?


கல்பனா சாவ்லா. விண்வெளி வீராங்கனையாக மலர்ந்து அந்த விண்ணிலேயே கருகிப் போனவர். இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர். பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர். அவர் விண்வெளி ஆய்விற்காகப் பயணம் மேற்கொண்ட கொலம்பியா விண்கப்பல் STS-87 தரையிறங்கும் போது பெரும் விபத்தைச் சந்தித்தது. இந்திய மனங்களில் பெரும் சோகம் சூழ்ந்தது. மண்ணில் பிறந்து மண்ணிலே தவழ்ந்த கல்பனா சாவ்லா 2003ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் விண்ணிலே மறைந்தார்.


கல்பனா சாவ்லா

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாடா எனும் கிராமத்தில் வாழும் ஏழு வயதுச் சிறுமியான உபாசனா, தான் தான் முற்பிறவியில் ”கல்பனா சாவ்லா” என்று அறிவித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். உபாசனா கல்பனா சாவ்லா விபத்தில் இறந்த சில மாதங்கள் கழித்து ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் உபாசனா பிறந்தார். சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்ந்த அவர், தனக்கு நான்கு வயதாகும் போது தனது முற்பிறவிகள் பற்றிக் கூற ஆரம்பித்தார். கொலம்பியா விண்கலம் பற்றி, அதில் தன்னுடன் பயணம் செய்த சக விஞ்ஞானிகள் குறித்தெல்லாம் அவள் பல தகவல்களைக் கூற, அதிகம் கல்வியறிவு இல்லாத அவள் பெற்றோர்களுக்கு அவள் சொன்னது எதுவுமே புரியவில்லை.




உபாசனா (கல்பனா சாவ்லாவின் மறுபிறவி என்று கூறப்படும் பெண்)

”உபாசனா குழந்தையாக இருக்கும் போதே எப்போதும் பறப்பது பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்; அவளுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய வீடு இருக்கிறது என்றும், அங்கு நிறைய பணம் இருக்கிறது என்றும் சொல்வாள். தான் ஒரு விமானத்தில் பயணம் செய்தபோது அது ஒரு பனிமலைச் சிகரத்தில் மோதி நொறுங்கி விழுந்து விட்டது என்றும் அதில் தான் இறந்து போய் விட்டதாகவும் சொல்வாள். குழந்தை ஏதோ உளறுகிறது என்று நாங்கள் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய தாய் வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போன போது அங்குள்ள ஒரு செய்தித்தாளில் இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து, அது தான் தான் என்று கூற ஆரம்பித்தாள். அக்கம் பக்கத்தினர் மூலம்தான் அது ‘கல்பனா சாவ்லா’ என்பதும், அந்தப் பெண் ஒரு விமான விபத்தில் இறந்து போய் விட்டாள் என்பதும் தெரிய வந்தது. அதன் பின்னர்தான் குழந்தை சொல்வது பொய்யில்லை, அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து கொண்டோம் என்கிறார் உபாசனாவின் தாய் ஞானேஸ்வரி.

தங்களுக்குக் கல்வியறிவு அதிகம் இல்லாததால் அக்கம் பக்கத்தினருடனான உரையாடல்கள் மூலம்தான் உபாசனா தனது முற்பிறவி பற்றிக் கூறுகிறாள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது என்கிறார் தந்தை ராஜ்குமார்.

அதன் பின் உபாசனா தன் வீடு இதுவல்ல என்று அழுது அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். தான் கர்நாலில் பிறந்ததாகவும் தாய் பெயர் ரேகா என்றும், தந்தை பெயர் பன்சாரி லால் சாவ்லா என்றும் கூறியவள், தான் உடனே அங்கு போக வேண்டும் என்று அழுது அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். விசாரித்ததில் அவள் கூறுவது அனைத்தும் உண்மைதான் என்று தெரிய வந்தது. (ஆனால் தாய் பெயர் ரேகா அல்ல. சன்ஜோக்டா. அதை மட்டும் அவளால் சரியாகச் சொல்ல முடியவில்லை). உபாசனாவிடம் தனியாகப் பல முறை உரையாடிய அவள் தாய் வழிப்பாட்டி குழந்தை நிச்சயமாகப் பொய் சொல்லவில்லை; அவள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை என்று தெரிவித்தாள்.

இந்த விவரங்கள் கல்பனா சாவ்லாவின் தந்தையான பன்சிலால் அவர்களுக்கும் தெரியவந்தது. ஆனால் அவர் இதனை நம்பாததுடன், இதெல்லாம் ஏமாற்று வேலை என்று கூறி உபாசனாவைச் சந்திக்க மறுத்து விட்டார். தாங்கள் ஒரு ஏமாற்றுக்காரர்களாகச் சித்திரிக்கப்படுவதை விரும்பாத உபாசனாவின் தந்தை ராஜ்குமார், அதுமுதல் மகளின் முற்பிறவி பற்றிய விஷயங்களை வெளியாருக்குக் கூறுவதை விட்டு விட்டார். உபாசனா உண்மையிலேயே கல்பனா சாவ்லாவின் மறுபிறவி தானா? விஞ்ஞானிகள் தான் முறையாக ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment