Sunday, March 10, 2013

ஈ.எஸ்.பி. உண்மையா? – 2


முதன் முதலில் ஈ.எஸ்.பி. பற்றிய ஆய்வுகள் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தொடங்கின. 1923ல் சிகாகோவில் டெலிபதி சோதனைகள்Zenith Broad Casting Company உதவியுடன் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வியப்பைத் தந்தன. 20 பேர்களில் குறைந்த பட்சம் ஒருவருக்காவது ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் இருப்பது தெரிய வந்தது.
 1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் இது போன்ற ஆற்றல்கள் இருப்பதாகக் கூறப்படும் சிலரை ஆய்வு செய்த போது அவர்கள் அனைவரும் ஆல்ஃபா என்னும் அலைவரிசையில் இருப்பதைக் கண்டறிந்தார்.  அதன் பின்னர் மூளையின் ஒருவிதமான திறன் மிக்க அந்தச் செயல்பாடு நிலைக்கு ‘ஆல்பா’ நிலை என்று பெயரிட்டனர். இத்தகைய ஆழ்மன ஆற்றல்களை வளர்ப்பதற்கு பிற்காலத்தில் ஆல்பா தியானமுறை புழக்கத்திற்கு வந்தது. இதை மேலும் ஆராய்ச்சி செய்த வில்லியம் க்ரூக்ஸ் என்பவர், மூளையில் ஏற்படும் ஒருவித ரசாயன மாற்றமே இவ்வகை ஈ.எஸ்.பி. ஆற்றல்களுக்குக் காரணமாகிறது என்பதைக் கண்டறிந்தார். டாக்டர் சேரெய்ல்ன் என்பவர் இது குறித்து விரிவாக ஆராய்ந்தார். அவர் தனது ஆய்வு முடிவில், ”மூளையில் பீனியல் சுரப்பி, பிட்யுடரி சுரப்பி என்று இரண்டு சுரப்பிகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் மாற்றங்களால், அதிர்வுகளால் பல்வேறு மாற்றங்கள் மனித உடலிலும் எண்ணங்களிலும் எழுகின்றன. குறிப்பாக பீனியல் சுரப்பி அதிகமாகச் சுரப்பின் ஈ.எஸ்.பி., டெலிபதி, வருங்காலம் உரைத்த போன்ற ஆற்றல்கள் பெருகக் காரணமாகின்றன” என்று கூறினார்.
இந்த பீனியல் சுரப்பியின் உற்பத்தி நமது நெற்றியின் புருவ மையத்தைத் தூண்டினால் அதிகமாகிறது என்பதும், அதனாலேயே நமது இந்திய யோகிகள் அந்தப் புருவ மத்தியாகிய ஆக்ஞா சக்கரத்தை மையமாக வைத்து தியானம், யோகம் போன்றவற்றைச் செய்து வந்தார்கள் என்பதும் மிக முக்கியமான விஷயமாகும். நாம் நமது மூளையில் சுமார் 8% பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். மீதிப் பகுதிகளையும் தூண்டி, நாம் பயன்படுத்த ஆரம்பித்தோமானால் ஈ.எஸ்.பி மட்டுமில்லாமல், பல்வேறு ஆற்றல்களும் கைவரப் பெற்றவர்களாவோம் என்பது உண்மை.
 இனி ஒரு ஈ. எஸ். பி. சம்பவத்தைப் பார்ப்போம்.
 இங்கிலாந்து நகரத்தில் உள்ளது லங்காஷயர் விகான் என்ற பகுதி. இங்குள்ள சிறப்பு பொருந்திய நகரம் ஆதர்டன். இங்கு ஜெம்மா  லியேனே ஹூட்டன் என்ற இரட்டைச் சகோதரிகள் வசித்து வந்தனர். இருவரும் ஒருவர் மீது மிகுந்த அன்பு உடையவர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வார்கள், வருவார்கள்.

இரட்டைச் சகோதரிகள்
அது மார்ச் மாதம், 2009ம் ஆண்டின் ஒருநாள்… மாடியறையில் குளித்துக் கொண்டிருந்தாள் லியானே. வீட்டின் கீழ்ப்பகுதியில் ஏதோ வேலையாக இருந்தாள் ஜெம்மா. அப்போது ஜெம்மாவுக்கு திடீரென ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டது  ”லியானே ஏதோ பெரிய ஆபத்தில் இருக்கிறாள். உடனடியாகச் சென்று அவளைக் காப்பாற்ற வேண்டும்“ என்ற குரல் தன் மனதுக்குள் ஒலிப்பதாகத் தோன்றியது.
 பதட்டத்துடன் மாடியை நோக்கி ஓடினாள் ஜெம்மா. உள்ளே லியானே நீர்த் தொட்டிக்குள் விழுந்து, தன்ணீரில் மூழ்கியபடி மயக்கமாகக் கிடந்தாள். அவள் உடல் நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது.
 லியானேவுக்கு வலிப்பு நோய் உண்டு. அது அவ்வப்போது தலை காட்டும். அதனால்தான் இப்போதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த ஜெம்மா, உடனடியாக அவளை நீரிலிருந்து எடுத்து, தனக்குத் தெரிந்த ஆரம்ப கட்ட முதலுதவிகளைச் செய்து பின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாள். டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கண் விழித்தாள் லியானே.
 ஜெம்மா மட்டும் சரியான சமயத்திற்கு அவளுக்கு முதலுதவி அளித்து இங்கே அழைத்து வராவிட்டால் லியானேவைக் காப்பாற்றியிருக்கஏ முடியாது என்கிறார் சிகிச்சை அளித்த டாக்டர் ஸ்டீவ் பியர்சன்.
 ”ஆம். எனக்குள் ஏதோ ஓர் குரல் ஒலித்தது. ’லியானேவுக்கு ஆபத்து. அவள் உன் உதவியை எதிர்பார்க்கிறாள்’ என்று. சந்தேகப்பட்டு நான் சென்று பார்த்தபோது தொட்டியில் தண்ணீருக்குள் மூழ்கியபடி அவள் இருந்தாள். முதலில் அவள் தலையை அலசிக் கொண்டிருக்கிறாள் அல்லது ஏதேனும் விளையாட்டு செய்து கொண்டிருக்கிறாள் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் உடலில் எந்த அசைவுமில்லை. மெல்ல மெல்ல உடலும் நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. மிக மிக  ஆபத்தான நிலையில் அவள் இருந்தாள் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. எப்படியோ விரைந்து செயல்பட்டு இறைவன் அருளால் அவளைக் காப்பாற்ற முடிந்தது” என்கிறாள் ஜெம்மா.
 இது போன்ற சம்பவங்களை ஆராய்ந்து வரும் டாக்டர் லின்னே செர்காஸ் கூறுகிறார்.  “டெலிபதி எனப்படும் இவ்வித உள்ளுணர்வு இரட்டைப் பிறவிகளிடம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இவர்களில் பல பேருக்கு உள்ளுணர்வுகள் ஒத்துப் போகின்றன. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்க்க முடியாமல் எங்கோ வெகு தொலைவில் இருந்தாலும் இந்த டெலிபதி உள்ளுணர்வு மிக தீவிரமாகச் செயல்படுகிறது. அதில் எந்தத் தடையும் இருப்பதில்லை” என்கிறார்.
இரட்டைப் பிறவிகளில் ஒருவர் நோயுற்றால் மற்றவருக்கும் நோய் வருவதும், ஒருவர் உள்ளம் சோர்ந்தால் மற்றவரும் அது போன்று சோர்வடைவதும் இது போன்ற காரணங்களினால் தான் இருக்கும் என்கின்றனர், சில ஆராய்ச்சியாளர்கள்.
Lyon Playfair என்ற ஆராய்ச்சியாளர் இது பற்றி ஆய்வு செய்து, Twin Telepathy: The Psychic Connection என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் இது பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார்.
அதுசரி, உங்களுக்கு ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் இருக்கிறதா? 

No comments:

Post a Comment