Sunday, March 10, 2013

ஈ.எஸ்.பி. ஆற்றல்கள்



அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் ஈ.எஸ்.பி உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று. சரி,  ,  ஈ.எஸ்.பி ,  E.S.P (Extra Sensory Perception)உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா?
நாம் ஆறறிவு கொண்டவர்கள். ஐம்புலன்களால் செயல்படுபவர்கள். பகுத்தறிவு எனப்படும் அந்த ஆறாம் அறிவு மூலம் நாம் சிந்திக்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம். செயல்படுகிறோம். ஆனால் அதையும் மீறிய ஒன்றாக, புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, ஏழாம் அறிவாக விளங்குவதுதான் ஈ.எஸ்.பி. உலகெங்கிலும் பல்வேறு ஈ.எஸ்.பி. சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ஈ.எஸ்.பி. மனிதர்கள், தங்களது ஆற்றல்களைக் கொண்டு பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்துள்ளனர். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியுள்ளனர்.
சரி, ஈ.எஸ்.பி என்றால் என்ன? பொதுவாக பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.
       வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதில் உள்ள செய்திகளைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி எனப்படுகிறது. எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு -  Precognition என்று பெயர்.  இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர். ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர். ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.
இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி.
இனி ஒரு உதாரண சம்பவத்தைப் பார்ப்போம். இது 1977ல் பிரிட்டனில் நடந்த சம்பவம். ஹில்ஹெட் லார்ட் ஜெக்கின்ஸ் என்பவர் தொழிலாளர் கூட்டமைப்புக் கட்சியின் எம்.பியாக அப்போது இருந்தார். அவர் பணி நிமித்தமாக ரோம் நகரத்துக்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு ஹோட்டலில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவரது சக எம்.பியும், நண்பருமான ஆண்டனி கிராஸ்லாண்ட் என்பவர் தோன்றினார். அவர், இவரிடம், “நண்பா, நான் இன்னும் சற்று நேரத்தில் இறக்கப் போகிறேன்.. விடைபெறுகிறேன். நன்றி” என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.
       திடுக்கிட்டுக் கண் விழித்தார் ஹில்ஹெட். இது வெறும் சாதாரணக் கனவுதானா அல்லது ஏதேனும் முன்னறிவிப்பா என்று புரியாமல் திகைத்தார். சிலமணி நேரங்களில் ஆயிரம் மைல்களுக்கும் அப்பாற்பட்ட ஆக்ஸ்போர்டிலிருந்து அவருக்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது, ஆண்டனி இறந்து விட்டாரென்று.
       தான் இறக்கப் போவதை எப்படியாவது தனது நண்பருக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்று ஆண்டனியின் ஆழ்மனம் நினைத்ததன் விளைவுதான் அந்தக் கனவு என்பதை உணர்ந்து கொண்டார் ஹில்ஹெட்.
மனிதர்கள் மட்டும்தான் என்றில்லை. விலங்குகளுக்கும் கூட இத்தகைய ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் உண்டு. குறிப்பாக மனிதர்களோடு நெருங்கி வாழும் நாய், பூனை போன்றவற்றிற்கு இயல்பாகவே இந்த ஆற்றல்கள் அதிகம். அது பற்றிய சம்பவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment