Sunday, March 10, 2013

டாக்டர் எடித் ஃபையரின் முற்பிறவி, மறுபிறவி ஆராய்ச்சிகள்

முற்பிறவி, மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் டாக்டர் எடித் ஃபையர். உளவியல் துறையில் ஆய்வு செய்து மியாமி பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு மனநல சிகிச்சையாளர் மட்டுமல்ல; ஹிப்னோஸிஸ் மூலம் பாதிக்கப்பட்டவரை உறக்கத்தில் ஆழ்த்தி அவர்தம் முற்பிறவி நினைவுகளைக் கண்டறிந்து கூறுவதில் வல்லவர். தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடாவில் வசித்து வரும் இவர் இத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார். அதிலிருந்து சில சம்பவங்கள்….

ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தண்ணீரைக் கண்டால் பயம். மழையில் வெளியே செல்ல மாட்டாள்நண்பர்களுடன் நீர்நிலைக்குச் செல்லக் கூட அஞ்சுவாள். இந்த நிலை சிறுவயது முதல் அவள் வயதான பின்பும் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. தன் நிலைக்கான காரணம் அறிய அவர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவி பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார். அவர் இரண்டிற்கு மேற்பட்ட தனது முற்பிறவிகளில் தண்ணீராலேயே மரணமடைந்தார் என்பதும், ஒரு பிறவியில் அவர் ஆணாகப் பிறந்திருந்த போது சிறுவயதில், தந்தையுடன் படகில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, படகு கவிழ்ந்து மரணமடைந்தார் என்பதும், மற்றொரு பிறவியில் மீனவராகப் பிறந்து கடலுக்குள் செல்லும் போது மரணமடைந்தார் என்பதும், இன்னொரு பிறவியில் அவர் மாலுமியாகப் பிறந்து கடலில் செல்லும் போது, அப்போது வீசிய பெரும் புயலில் சிக்கி மரணமடைந்தார் என்பதும் தெரிய வந்தது.

அந்த அச்ச உணர்வே அவரது ஆன்மாவில் படிந்து, அவர் மறுபிறவி எடுத்த போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த ஃபையர் அவருக்கு தகுந்த மனோ சிகிச்சை அளித்து அவரது முற்பிறவித் தொடர்பான தண்ணீர் பயத்தைப் போக்கினார்.

**********


டாக்டர் எடித் ஃபையர்

உயரமான இடங்களைக் கண்டால் பயம், அந்தப் பகுதிகளுக்குச் செல்வதென்றால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறி எடித் ஃபையரை அணுகினார் ஒரு தொழிலதிபர். அது ஒரு வகையான ஃபோபியா என்று மருத்துவர்களால் கூறப்பட்டு வந்தாலும், அதற்கும் முற்பிறவிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என ஆராய நினைத்தார் ஃபையர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரை ஹிப்னாடிச உறக்கத்திற்கு ஆழ்த்தினார். அப்போதுதான் அவருக்கு அந்த உண்மை தெரிய வந்தது.

இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அந்த மனிதர் முற்பிறவியில் ஒரு பணியாளாக இருந்திருக்கிறார். ஒருமுறை மாதா கோயிலின் ஓடுகளைச் செப்பனிட்டுப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஓடுகள் உடைந்து கீழே விழுந்து அவர் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து மறுபிறவியிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை அறிந்த டாக்டர் ஃபையர் அந்த மனிதருக்குத் தகுந்த மனோசிகிச்சை அளித்து அவரது எண்ணங்களில் பதிவாகி இருந்த தேவையற்ற பயத்தைப் போக்கினார்.

**********

பாம்புகள் தன்னைக் கடிக்க வருவது போன்றும், துரத்துவது போன்றும் கனவுகள் வருவதாகவும், எப்போதும் பாம்புகளைப் பற்றிய நினைவே தனக்கு அதிகம் இருப்பதாகவும், அந்த அச்சத்தைப் போக்க வேண்டுமென்றும் கூறி ஒரு பெண்மணி எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். எடித் ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டார்.

முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக் காரியாக இருந்த விஷயமும், அப்போது ஒரு சமயம் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொண்டு ஆடும்போது அந்தப் பாம்பு கடித்து மரணமடைந்த விஷயமும் தெரிய வந்தது.

முற்பிறவியில் மூளையில் பதிந்த அந்த எண்ண அலைகளே மறுபிறவி எடுத்த போதும் விடாமல் தொடர்கிறது என்பதைம் அதனாலேயே இந்தப் பெண்ணிற்கு அது பற்றிய அச்சமும், குழப்பமும் ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட ஃபையர் தகுந்த சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை குணப்படுத்தினார்.

அடுத்து அமெரிக்காவின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர், புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் இயான் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்து கூறியுள்ள முற்பிறவி-மறுபிறவிச் சம்பவங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

No comments:

Post a Comment