Sunday, March 10, 2013

ரசவாதம் – 1


ரசவாதம் என்னும் இரும்பைப் பொன்னாக்கும் வித்தை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதானா, விஞ்ஞானப்படி அவை சாத்தியம் தானா, சாத்தியம் என்றால் எப்படி என்பது ஆய்வுக்குரியது. ஆனால் நம் பாரம்பரிய இந்திய சித்தர்கள் இரும்பைப் பொன்னாக்கும் வித்தையை அறிந்தவர்கள். அதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தவர்கள். அதில் வெற்றியும் பெற்றவர்கள். ஆனால் அந்த ரகசியங்களை அறிந்து சாதாரண மனிதர்களும் அது போல் செயல்பாடுகளி; இறங்கினால் அது விபரீத விளைவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர்கள், அவற்றை பரிபாஷையாக, சங்கேதக் குறிப்புகளாகப் பாடல் வடிவில் ஓலைச்சுவடிகள் எழுதி வைத்தனர்.
 
அதில் இருந்து சில பாடல்களை இங்கே பார்ப்போம்.
 ”கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே…”                    

என்றும்

பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே”         

என்றும்

எண்ணான வேதைகோடி
உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்
உண்மையாம் சான்றோர்க்கும்
தயை குணம் உள்ளோருக்கும்
தன்மையாம் மொழிகள் கூறி
உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்
வண்மையாம் மனமுள்ளோர்க்கும்
மேன்மையாம் பலிக்கும் தானே…
என்றும் கூறி எச்சரித்திருப்பதன் மூலம் ரசவாதம் என்பது ஆசையற்றவர்களுக்கே சாத்தியம் என்றாகிறது.
வள்ளலாரும் ரசவாதமும்
வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகள் இந்த ரசவாத வித்தையில் தேர்ந்தவர். அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
வேம்பையர் என்பவர் எப்பொழுதும் வள்ளலாரின் கூடவே இருப்பார். அதனால் அவரால் வள்ளலாரின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்க முடிந்தது. வள்ளலார் ‘இரும்பைப் பொன்னாக மாற்றுதல், மூலிகைகளைக் கொண்டு அரிய செயல்கள் செய்தல்’ போன்றவற்றைச் செய்யும் பொழுது உடன் இருந்து வந்ததால், இவருக்கு ரச வாதத்தின் மீது ஆசை ஏற்பட்டது. ஒரு நாள் யாருமறியாமல் வள்ளலார் செய்வதைப் போன்ற செயல்களில் இரகசியமாக இவர் ஈடுபட்டார். விளைவு. கண் பார்வை பறி போனது. இறுதியில் வள்ளலாரைச் சந்தித்து, தனது தவற்றை மன்னிக்குமாறு வேண்டினார்  அண்ணலின் அருளால் பார்வை திரும்பப் பெற்றறார். அதுபோல தேவ நாயகம் பிள்ளை என்பவரும் ரச வாதத்தின் மீது பித்துக் கொண்டு அலைந்து பொருள் எல்லாம் இழந்தார். பின்னர் வள்ளலார் இவருக்கு புத்திமதி கூறி தடுத்தாட் கொண்டார்.
ஒருமுறை பக்தர் ஒருவர் வள்ளலாரிடம் “நீங்கள் இரும்பைப் பொன்னாக்கும் வித்தை அறிந்தவராமே அதை எங்களுக்குச் செய்து காட்டுங்களேன்” என்றார். உடனே அவர் கையில் இருந்த சொம்பை வாங்கி வள்ளலார், அதைச் சிறிது நேரம் தம் கையில் வைத்திருந்து பின்னர் மீண்டும் அந்த அன்பரிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சொம்பு தங்கமாக மாறியிருந்தது. அது கண்டு அந்த அன்பர் ஆச்சரியமுற்றபோது, அந்தச் சொம்பை வாங்கிய வள்ளலார், “இந்தக் கலை ஆசைப்படாதவர்களுக்கே, இச்சையுடையோர்களுக்கு உதவாது” என்று கூறி அருகில் உள்ள கிணற்றில் எறிந்து விட்டார்.
(தொடரும்)

No comments:

Post a Comment