Sunday, March 10, 2013

முற்பிறவி, மறுபிறவி ஆராய்ச்சிகள்முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் மறைமலை அடிகள். அவர் பல துறைகளில் ஆய்வு செய்து தொலைவில் உணர்தல், மரணத்தின் பின் மனிதர் நிலை போன்ற பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ’சென்ற பிறவியின் நினைவுகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான முற்பிறவி, மறுபிறவிச் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

“ஒரு பெரிய மிருகத்தின் கால்களிடையே குடைந்து செய்யப்பட்ட ஒரு கோயிலையும் அக்கோயிலில் நடைபெறும் கிரியைகளையும், அதனைச் சூழ்ந்த நிலத்தோற்றத்தையும் ஒருவர் தெளிவாக நினைவு கூர்ந்தார்; அவர் இப்பிறவியில் அத்தகைய கோயிலையும் அதனோடு சேர்ந்த பிறவற்றையும் எங்கும் கண்டவர் அல்லர். நூல்களில் படித்தாயினும் பிறர் மூலம் கேட்டாயினும் உணர்ந்தவருமல்லர். கனவிலும் நனவிலும் இவர் அடிக்கடி நினைவு கூர்ந்து வந்த அவ்வமைவுகள் எங்குள்ளன என்று ஆராயப் புகுந்த துரை மகன் ஒருவர், அவற்றைப் பழைய எகிப்து நாட்டினில் இருப்பனவாக அறிந்து வியப்புற்றார்.

முன்னொரு பிறவியில் அவ்வெகிப்து நாட்டில் பிறந்திருந்தமையால், இவர் அப்போது அங்கு கண்ட அமைவுகளை இப்பிறவியில் தெளிவாக நினைவு கூர்ந்து வந்தார். இவர் இங்ஙனம் நினைவு கூர்ந்த அவ்வமைவுகளை ( EGYPTIAN SPHINX) இப்போதும் எகிப்து நாட்டுக்குச் செல்பவர் கண்டு உணரலாம்.

காசிக்குச் சென்றவர் காஞ்சி மாநகரை இல்லாத பொய்ப் பொருள் என்று மறுத்தலும், காஞ்சிக்கு மீண்ட பின் அவர் காசி மாநகரை இல் பொருளென்று கூறுதலும் சிறிதேனும் பொருத்தம் இல்லாத பித்த உரை ஆதல் போல, ஒரு நிலையில் உள்ளோர் பிறிதொரு நிலையின் உண்மை உணராமல் அதனைப் பொய்யென்றுரைத்தல் பெரியதோர் அறியாமையும், மயக்க உணர்ச்சியுமாகும். கனவில் தோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை முற்பிறவியின் அனுபவங்களாகும்.”

முற்பிறவி – மறுபிறவி பற்றி மதுரை ஆதினகர்த்தரின் ஆய்வு

மதுரை ஆதீனகர்த்தராக விளங்கியவர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அவர் ஆவிகள் உலகம் பற்றி ஆராய்ந்து ‘இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்’ என்ற விரிவான ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.

ஆதினகர்த்தர் ஒருசமயம் மதுரையில் உள்ள அம்மையநல்லூர் எனும் பகுதியில் தங்கியிருந்தார். அப்போது, அந்த ஊருக்கு அடுத்துள்ள நிலக்கோட்டையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பதவி வகித்து வந்த ஒருவர், பதினாறு வருடங்களுக்கு முன், தன் பதிமூன்றாம் வயதில் மரணமடைந்த தனது மகனுடன் பேச வேண்டும் என்று சொல்லி ஆதினகர்த்தரைத் தொடர்பு கொண்டார்.

ஆதினகர்த்தர், தமது வழிகாட்டும் ஆவியான தனது தந்தையின் ஆவியைத் தொடர்பு கொண்டு அந்தச் சிறுவனின் ஆவியை வரவழைக்க முயற்சி செய்தார். பெரிதும் முயன்றும் அச் சிறுவனின் ஆவியுடன் அவரால் தொர்பு கொள்ள முடியவில்லை. பிறகு தந்தையின் ஆவி, அச்சிறுவனின் ஆவியை ஆவியுலகத்தின் பல அடுக்குகளிலும் தேடி, இறுதியாக அவன் ஐந்து வருடங்களுக்கு முன் தனக்கு விதிக்கப்பட்ட காலகெடு முடிந்து மறுபிறவி எடுத்துவிட்டதை அறிந்து அவர்களிடம் அறிவித்தது. அதுமட்டுமல்ல, அச்சிறுவன் தனது மறுபிறவியில் நிலக்கோட்டை அருகிலுள்ள ஐயம்பாளையம் என்னும் கிராமத்தில், பொடிக்கடை நடத்தும், சுப்பையாப் பிள்ளை என்பவருக்கு மகளாகப் பிறந்துள்ளதாகவும், அவளுடைய பெயர் ‘லட்சுமி என்றும் தெரிவித்தது.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடனடியாகச் சென்று அதைச் சரிபார்த்த்தில் அங்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சில மறுபிறவிச் சம்பவங்கள்


சாக்‌ஷி தனது முற்பிறவி மகனுடன் (இப்பிறவி தந்தை)

01-12-1985 தேதியிட்ட இல்லஸ்ட்ரேடட் வீக்லி வார இதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் புது தில்லியைச் சார்ந்த கீர்த்திநகர் என்னும் பகுதியில் வசித்து வரும் சாக்ஷி எனும் சிறுமி, ஷ்யாம் மித்ரா என்னும் பெரியவரை தனது முற்பிறவி மைந்தன் என்று அறிவித்துள்ள செய்தி இடம் பெற்றுள்ளது. தனது கூற்றை மெய்ப்பிக்க அச்சிறுமி தமது முற்பிறவிப் பெயர் ’போலி பாய்’ என்றும், ஷ்யாம் மித்ரா அப்பிறவியில் தன் மகன் என்றும், தான் தற்போது மறுபிறவி எடுத்து வந்திருப்பதாகவும் கூறியதோடல்லாமல், முற்பிறவியில் தம்மோடு இருந்தவர்களுடன் தான் பேசிய முக்கியமான, அந்தரங்கமான, குடும்பத் தொடர்புடையவர் மட்டுமே அறிந்த செய்திகளையும் கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளாள். மேலும் அதற்கு முந்தைய பிறவியைப் பற்றியும் அவள் கூறியிருக்கிறாள். அப்பிறவியில் தான் சிறு குழந்தையாக இருந்ததாகவும், தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து தாம் மரணமடைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள், பின் போலி பாயாகத் தாம் மறுபிறவி எடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள். போலி பாயாகத் தான் வாழ்ந்த காலத்தில் தன் கணவர் முரளிதருடன் ஹரித்வார் சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு குரங்கு தன்னைக் காதருகே கடித்து விட்டதாகவும் கூறும் சாக்ஷி, தற்போது மறுபிறவியிலும் அத்தழும்பு இருப்பதாகவும் கூறுகிறாள்.

இனி ஆய்வாளர்கள் கூறும் சில மறுபிறவிச் சம்பவங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

No comments:

Post a Comment