Sunday, November 30, 2014

ஏழை மனிதனின் தாஜ்மஹால்!

தாஜ்மஹால்னா, அது ஆக்ராவில் உள்ளது என்றுதானே சொல்வீர்கள். அது, ஷாஜஹான் தன் காதல் மனைவிக்குக் கட்டிய நினைவுச் சின்னம். ஆனால், மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத்தில் இருக்கும் தாஜ்மஹாலோ, மன்னர் ஆஜம்ஷா, தன் அம்மாவுக்குக் கட்டிய நினைவுச் சின்னம்.

மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மகன்தான் இந்த ஆஜம் ஷா. 1651 முதல் 1661 வரை மன்னராக இருந்த காலத்தில், தாத்தா ஷாஜஹான் மும்தாஜுக்குக் கட்டிய தாஜ்மஹாலைப் பார்த்து ரொம்பவும் அசந்துபோய், அதேபோல் அச்சு அசலாக, தன்அம்மாவுக்குக் கட்ட ஆசைப்பட்டார். அந்தக் கல்லறைக்கு பீபீ கா மக்பாரா (Bibi Ka Maqbara) என்று பெயர் சூட்டினார். (இதற்கு, 'லேடி கல்லறை' என்று அர்த்தம்).

தாஜ்மஹாலைப் போலவே இருக்கும் என்று எண்ணிய ஆஜம் ஷாவிற்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. திறமையான தொழிலாளர்கள் அமையாததால், தாத்தாவின் தாஜ்மஹால் போல அழகாக அமையவில்லை. பளபளப்பாக தோன்றவில்லை. காரணம், தாஜ்மஹாலுக்கு உபயோகித்த தூய வெள்ளை சலவைக் கற்களை, இந்த பீபீ கா மக்பாராவிற்கு உபயோகிக்கவில்லை.
மக்பாரா கட்ட, அப்போது ஆன செலவு, 7,00,000 ரூபாய். ஆனால், தாஜ்மஹால் கட்ட ஆன செலவு, 32 மில்லியன். அதனால்தான் இந்த மக்பராவை, 'ஏழை மனிதனின் தாஜ்' என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால்,தாஜ்மஹாலுக்கு இணையாக சொல்லமுடியாவிட்டாலும் கூட இந்த நினைவுச் சின்னத்தின் உள்ளே இருக்கும் அழகிய வடிவங்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. அங்கு அமைந்துள்ள தோட்டம், மொகலாயர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது.

No comments:

Post a Comment