Wednesday, November 26, 2014

சித்தன் ரகசியம் (7)

சராசரி மனிதர்களுக்கு, எப்போதுமே உடலுக்கும் மனதுக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே தான் இருந்திருகிறது. உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போது “எல்லாம் சாதித்துவிடலாம்” என்ற எண்ணமும், உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டால் மனம் சோர்ந்து குன்றிப்போய்விடுவதும்.. இதனை கொண்டே அந்த மனதிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பை உணரலாம். இதனால் தான், ஆரோக்கியமே பெரிய செல்வம் என்றனர் சான்றோர்கள். சித்த புருஷர்கள், தன் உடம்பை பேணிக்காக்க இருவித முறைகளில் அணுகினர்.

காயகல்பம், எனப்படும் கல்பமூலிகைகளை கொண்டு நோய் நொடிகள், உடல் உபாதைகளை விடுப்பது ஒரு விதம்.உடலில் எப்பேர்ப்பட்ட உபாதைகள் ஏற்பட்டாலும், அதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவது இன்னொரு விதம்.

இந்த இரண்டு விதமான போக்கிற்கும் சான்றுகள் கூட உண்டு...

“அல்லமர்” என்றொரு சித்தர், காயகல்ப மூலிகையால் தன் உடல் மொத்தம் வென்றுவிட்டார். இவரை ஒருவர், கத்தியால் குத்தினார், ஆனால் குத்து விழுந்த இடம், அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் குணமாகிவிட்டன. அவ்வளவு வேகமாக உடல் குணமடைந்ததை அனைவரும் ஒரு மாயை போல தான் பார்த்தார்கள்.

இவருக்கு நேர் எதிரானவர், “பிராந்தர்” என்கிற சித்தர். பிராந்தரை யானைக்கால் நோய் ஆட்கொண்டிருந்தது. ஆனால், அதை போக்கிக்கொள்ள இவர் மருந்தேதும் எடுக்கவில்லை மாறாக, அந்த வியாதியின் வலியையும் வேதனையையும் அனுபவிக்கவே விரும்பினார்.

பிராந்தர் முன், மயானகாளியே பிரசன்னமாகி, யானைக்கால் வியாதியை குணப்படுத்த முன் வந்த போதும் தடுத்துவிட்டார். உன் அருளால், குணமானது என்பதை விட, பிராந்தன் அதை சகித்துக்கொண்டான் என்பதும், அனுபவித்து என் கர்மக்கணக்கை தீர்த்தேன் என்பதும் தான் எனக்கு உகந்தது என்றார்.

சித்தர்களின், இப்படிப்பட்ட போக்கைதான், “சித்தம் போக்கு சிவன் போக்கு” என்றார்கள்.

No comments:

Post a Comment