Wednesday, November 26, 2014

ஆண்கள் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு

தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான். அவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன கேள்விப் பட்டதே இல்லையே என்கிறீர்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இவை. பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், அவளிடம் ஆசையாய் பேசி, காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.

ஆனால் மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள்.மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய்,பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் மாயமாய் மறைந்து போகும் கோழைகளாய், ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயல்வது, டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகளாய். துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக, கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறப்பவர்களாக, பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், ஜொள்ளு விடும் சபலகாரர்களாக உள்ளனர்.

ஏன் ஆண்கள் இப்படி இருக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை? என்று நீங்கள் பார்க்கும் ஆண்களை எல்லாம் உங்கள் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள ஆதர்ஷ ஆண்மகனோடு ஒப்பிட்டு, `சீ, இவன் தேறமாட்டான்” என்று மட்டம் தட்டி, மீண்டும் மீண்டும் மனம் நொந்து போகாதீர்கள்.

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப்பெரிய சமூகப்பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை. நீங்கள் எந்த பேராண்மைமிக்கமனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே.

பெரும்பாலான ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இதுதான் யதார்த்தம் என்பதால், ஆண்களை ஹேண்டில் செய்ய விரும்பும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், acceptance. அதாவது, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை. ஆண்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப் பழகினால் தான், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர முடியும்.

No comments:

Post a Comment