Wednesday, November 26, 2014

சித்தன் ரகசியம் (4)





மனதை அடக்க அடக்க அதற்கு எப்படிப்பட்ட சக்தியெல்லாம் வரும் என்பதை, மனதை அடக்கிப் பார்க்காமல் உணரவே முடியாது. இந்த உலகில் ஆயிரக்கணக்கான மொழிகளும், அதில் இலட்சோபலட்சம் வார்த்தைகளும் உள்ளன. இவற்றை பயன்படுத்தியே மனித சமுதாயம் மனதில் உள்ளதை பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இத்தனை வார்த்தைகள் இருந்தும், சில அனுபவங்களையும், அதன் உணர்வு நிலைகளையும் மிகச் சரியாக நம்மால் விவரிக்க முடிவதில்லை. “அதைப்போல், இதைப்போல்” என்று நமக்கு தெரிந்த உதாரணங்களை கொண்டு புரிய வைக்க முயற்சிக்கிறோம். ஆகாயத்தில் பறந்தது போல் இருந்தது, தேன் போல தித்தித்தது என்றே உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறோம்.காரணம்....சில உணர்வு நிலைகளை விளக்க வார்த்தைகளே இல்லை. அதிலும், சித்த யோகத்தில் அதன் அனுபவங்களை விவரிப்பது என்பது ஆகாத காரியம். ஒரு குறிப்பிட்ட யோகசனமோ, இல்லை மூலிகையோ அல்லது சித்த புருஷர் ஒருவரின் பார்வைத் தீண்டலோ நம்முள் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் விவரிக்கவே முடியாது.

மனதைத் துளியும் எண்ணங்களின்றி வெறுமைக்கு ஆளாக்க வேண்டும். சிலருக்கு தலையில் அடிபட்டு மூளைச் செல்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விபத்தில் கோமா நிலைக்கு சென்றவர்கள், எந்தவித எண்ணங்களும் இன்றி இருப்பார்கள்.
இது சித்த யோக நிலையல்ல..! மனதின் மீது பிரக்ஞையோடு ஆதிக்கம் செலுத்தி எண்ணங்களை அப்படியே அடக்கியும், கட்டிப்போட்டும் எண்ணங்கள் அற்று இருப்பதே சித்த யோக நிலை. இப்படி ஒரு நிலையின் போது உடலில் நிலவும் மின்சாரகதியில் இருந்து உடம்பை சுற்றி தவழும் ஆரா அலை வெளிப்பாடு வரை சகலத்திலும் மாற்றம் ஏற்படும். ரத்த ஓட்டத்திலும், இதய துடிப்பிலும் கூட மாறுபட்ட தன்மை இருக்கும்.

இப்படி ஒரு நிலையில் தான் ஒரு பூ பூக்கும் ஓசையில் இருந்து குண்டூசி விழும் சப்தம் வரை அனைத்தையும் துல்லியமாக கேட்க முடியும். இங்கே தான் நம் எதிரில் இருப்பவர்களின் மனதில் உள்ள எண்ண ஓட்டங்களையும், அவர்கள் கூறாமலே கேட்கும் ஆற்றல் நமக்கு ஆரம்பமாகிறது.

No comments:

Post a Comment