Monday, June 16, 2014

சேலம் மாடர்ன் தியேட்டர் இப்போது...!







சமீபத்தில் ஒரு வேலை நிமித்தமாக சேலம் செல்ல நேரிட்டது. நகரத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்ததில் ஏற்காடு செல்லும் வழியில், வலது பக்கமாக ‘தி மாடர்ன் தியேட்டர் லிட்’ என்று அரண்மனை முகப்பு தோற்றமுடைய ஒரு வளைவு மட்டும் தென்பட்டது.


அப்போது சட்டென நினைவுக்கு வந்தது, ‘ஆஹா...ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை, குறிப்பாக தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்ட ஜெய்சங்கரை வைத்து பல துப்பறியும் மற்றும் க்ரைம் கதை படங்களை தயாரித்து வெளியிட்ட ஸ்டுடியோவாச்சே மார்டன் தியேட்டர்...இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், உள்ளே போய் பார்த்துவிடுவோம்' என எழுந்த ஆவலில் பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கிவிட்டேன்.


மாடர்ன் தியேட்டர் முகப்பை நோக்கி நடக்கும்போதே சிஐடி சங்கர்', வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, குமுதம், கைதி கண்ணாயிரம், வண்ணக்கிளி போன்ற மார்டன் தியேட்டர் தயாரிப்பில் வெளிவந்து ரசித்து பார்த்த படங்களின் காட்சிகள் மனத்திரையில் ஓடியது.


அந்த முகப்பு பகுதிக்கு சென்றால் ‘வழி அடைக்கப்பட்டுள்ளது’ என்கிற தகவலோடு தகர பலகை ஒன்று வரவேற்றது. அந்த முகப்பு சுவரை தவிர வேறு அடையாளங்கள் பின்பக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் அந்த வாசல் குப்பை கொட்டும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறியிருந்ததால் மேற்கொண்டு அந்த இடத்தில் நிற்கவும் முடியவில்லை. எதிரே இருந்த ஒரு வீட்டில் விசாரித்தால், "ஓ அதுவா...?கொஞ்சம் அந்த பக்கமா போனீங்கன்னா பெரிய கேட் வரும்; உள்ளே போய் பாருங்க!" என்று வலதுகையை காட்டி வழி சொன்னார்.








அவர் கை காட்டிய பக்கமாக சென்று பார்த்தால் பெரிய நுழைவு வாயில். அடுக்கு மாடி குடியிருப்புக்கான வாசல்போல தென்பட்டது. வாசலில் தடுத்து நிறுத்தினார் காவலாளி. ‘‘சார் அந்த பக்கம் மார்டன் தியேட்டர் என்று ஒரு அடையாளத்தைப் பார்த்தேன். வழி அடைக்கப்பட்டுள்ளது. அங்கு போக வழியுண்டா? என விசாரித்தேன். ‘நீங்க நின்னுகிட்டு இருக்குறதுகூட மார்டன் தியேட்டர் இருந்த இடம்தான்" என்றார். அதிர்ந்து விட்டேன்.


எதிரே பார்த்தால் கிட்டத்தட்ட பலநூறு தனித்தனி பங்களா வீடுகள். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் உலாவி திரிந்த இடம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாதச்சம்பளத்துக்கு வேலைபார்த்த இடம், இன்று ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் மூலம் மினி நகரமாக உருமாறியிருந்தது.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என பல மொழிகளிலும் சுமார் 150 க்கும்மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த நிறுவனம். 1930லிருந்து 1935 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் திரைப்பட தயாரிப்பில் இறங்கிய இந்த நிறுவனத்தின் முதல் வெற்றிப்படம் 'நல்லதங்காள்'. பிறகு தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்கள்.

1982 வரை மார்டன் தியேட்டர் சினிமா கம்பெனி மூலம் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.


அதற்கு பிறகும் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து 1999 ல் மம்முட்டி நடித்த 'ஜனநாயகம்' என்கிற படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்துள்ளதாக சொல்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள்.


தமிழ் சினிமாவின் முதன் இரட்டை வேட படமான உத்தமபுத்திரன் (1940), முதல் கலர் படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956) மலையாளத்தில் முதல் பேசும்படமான பாலம் (1938) மற்றும் தமிழின் மிகப்பெரிய வெற்றிப்படமான மனேகரா போன்ற பல திரைப்படங்கள் மாடர்ன் தியேட்டரால் எடுக்கப்பட்ட காலத்தால் அழியாத காவியங்கள். நமது ‘ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர், மார்டன் தியேட்டரின் ஆஸ்தான நடிகராக இருந்த காலங்களும், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி மார்டன் தியேட்டரில் மாத சம்பளத்துக்கு கதை வசனம் எழுதியதும், கவிஞர் கண்ணதாசன் இங்கு மாத சம்பளத்துக்கு பாடல்கள் எழுதியதாகவும் இருக்கிறது வரலாறு. இந்த ஸ்டூடியோ மூலம் யானை, சிங்கங்களை வைத்து சாண்டோ சின்னப்பா தேவரும் பல படங்களை எடுத்திருக்கிறார். .


இங்கிலாந்தில் படித்த டி.ஆர்.சுந்தரத்தால் ஆரம்பிக்கப்பட்ட மார்டன் தியேட்டர் கம்பெனி கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன்,

ஜி.ராமநாதன், மற்றும் ஆந்திர திரை துறையின் பல வெற்றியாளர்களை உருவாக்கியதும், ஊக்கப்படுத்தியது வரலாற்றுப் பதிவுகள்.


1963 ல் டி.ஆர்.சுந்தரம் மறைந்த பிறகு அவரது மகன் ராம சுந்தரம் அதை தொடந்து நடத்திய நிலையில், ஜெய்சங்கரை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தது மார்டன் தியேட்டர். 60 களின் இறுதியில் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முழுவதுமாக சென்னை ஸ்டுடியோக்களுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் ஸ்டுடியோக்களிலிருந்து கிராமங்களுக்கு இடம்பெயர, மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில், படப்பிடிப்பு மட்டுமல்லாது பட தயாரிப்பும் நின்றுபோனது.


இன்று மார்டன் தியேட்டர் அதன் அனைத்து சுவடுகளையும் இழந்து, முகப்பை மட்டுமே தாங்கி நிற்கிறது. எல்லாத்தையும் கடந்துபோகச் செய்துவிடும் காலத்தால், மனதில் தேங்கிப்போன நினைவுகளை விரட்ட முடிவதில்லை...அந்த நினைவுகள் தந்த ஏக்கத்துடன் மார்டன் தியேட்டர் முகப்பை பார்த்துக்கொண்டிருக்கையில், " சார் கொஞ்சம் தள்ளிக்கிறீங்களா...?" எனக் கேட்டு விட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல், கம்பெனியின் பழைய வாசலில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை குவித்து தீ வைத்துக்கொண்டிருந்தனர். எரிந்த குப்பை எதையோ உணர்த்தியது.
                                                                                                         -Source from vikatan

No comments:

Post a Comment