Sunday, May 11, 2014

செட்டிநாட்டு சிக்கனம்! - கிராமத்துப் பக்கம்


அந்தக் கிராமங்களின் பிரமாண்ட வீடுகள் மட்டுமல்ல, வீட்டைக் காப்பாற்றும் பெண்களின் நிர்வாகத் திறனும்கூட 'அடேயப்பா’ என்று மற்றவர்களை மலைக்க வைப்பவை! செட்டிநாட்டுக் கிராமங்களான கண்டனூர், கானாடுகாத்தான், கோட்டையூர், பள்ளத்தூர் போன்ற கிராமங்களைப் பற்றித்தான் சொல்கிறோம்.


ஆச்சிகளின் ஆட்சி நடக்கும் செட்டிநாட்டுக் கிராமங்களில் ஒரு சுற்று வந்தபோதுதான், அந்தப் பெண்களின் நிர்வாகத் திறமைகளை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.


நீள அகலமாக இரண்டு வீதிகளைத் தொட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பிரமாண்ட வீடுகளில் இன்றும்கூட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு வயதான பெண்மணிதான் குடியிருக்கிறார். மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி என்று இளைய தலைமுறையினர் அந்தக் கிராமங்களைவிட்டு வேலைக்காகவும் பிஸினஸுக்காகவும் வெவ்வேறு ஊர்களுக்குப் போய்விட்டாலும் இந்தப் பெண்கள்தான் ஆள்வைத்து, அந்த வீடுகளை அவ்வப்போது சுத்தம் செய்வதில் ஆரம்பித்து, எப்போதாவது அங்கே ஒன்று சேரும் குடும்பத்தினரை வரவேற்க வீட்டையும் ரெடி செய்து வைக்கிறார்கள்!





''என்ன பெரிய விஷயம்..? பொம்பளைங்க எப்பவும் தைரியசாலிங்கதான். 'சக்தி’ங்கிற வார்த்தைக்கே பொண்ணுன்னுதானே அர்த்தம்..?'' - ஊஞ்சலில் ஆடியபடியே பேசும் நாச்சாள் ஆச்சிக்கு எழுபத்தெட்டு வயதாகிறது! இன்னும் ஜிங்ஜிங்கென்று வீட்டுவேலைகள் முழுசையும் செய்கிறார்! சாதாரணமாக நாம் ஒரு கையால் தூக்கவே சிரமப்படும் பெரிய சாவியைக் கொண்டு வீட்டை காஷுவலாகப் பூட்டித் திறக்கிறார்!


''பொண்ணுங்க நல்லா ஊட்டமா தின்னாலே எந்த நோய் நொடியும் வராது. நான் இந்த வயசிலேயும்கூடச் சாப்பாட்டுல குறை வைக்கிறதில்லே... எந்த சாமி எந்தப் பட்டணம் போனாலும் காலைல ஒன்பது மணிக்கு இட்லி பலகாரம். ஒன்றரைக்கு ரெண்டு காயோட சாப்பாடு, அப்புறம்... எட்டு மணிக்குத் திரும்பப் பலகாரம்னு திருப்தியா இருக்கணும். நானே சமைப்பேன். சமயத்துல, பக்கத்துல குடியிருக்கிற என் பொண்ணு வந்தும் சமைச்சுத் தரும். இந்த வயசிலேயும் காலைல அஞ்சரை மணிக்கே எழுந்திருச்சுடுவேன்னா பார்த்துக்குங்களேன்!'' என்கிறார்.





தனது பத்து வயதில், ஆறு நாட்கள் விமரிசையாக நடந்த கல்யாணம்... அதற்கடுத்த சில வருடங்களில் வயசுக்கு வந்தது... அப்புறம் நான்கு ஆண், ஏழு பெண், பதினோரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டது என்று மலரும் நினைவுகளில் சுவாரஸ்யமாக மூழ்குகிறார்!


''எங்க வீட்டு செட்டியாரு அப்போ மயிலாடுதுறையில் ஏவாரம் பண்ணிட்டு இருந்தாரு... அப்பப்போ இங்க வந்துட்டுப் போவாரு.. குடும்ப நிர்வாகம் எல்லாம் நான்தான்.. இத்தனைக்கும் எனக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கவோ, கணக்கு எழுதிப் பார்க்கவோ தெரியாது. எல்லாம் வாயாலேயே மனக்கணக்கா போடறதுதான். நான் சொல்லச் சொல்ல, கணக்குப்பிள்ளை எழுதிடுவாரு...'' என்று சொல்லும் நாச்சாள் ஆச்சி, தியேட்டரில் கடைசியாகப் பார்த்த படம் 'திருவிளையாடல்’ - அதுவும் ரிலீஸின்போது.





அதிகம் வெளியே வராத இந்தப் பெண்கள், ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக்கொள்வது கோயில்களில்தான்! பெரும்பாலும் இந்தக் கிராமங்களில் ஊருக்கு ஒரு கோயில் இருக்கிறது. மாலைப்பொழுதானால் அங்கே போய்விடுகிறார்கள்.


'சிக்கனம்’ என்ற வார்த்தையை செட்டிநாட்டுப் பெண்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள்.


''சிக்கனமாக இருக்கிறதோட ரகசியமே, கணக்கு எழுதிப் பார்க்கிறதுதான். ஒவ்வொரு பைசான்னாலும் அதுக்கு என்ன செலவழிச்சோம்னு கணக்கு எழுதிப் பார்க்கிறப்போதான், அந்தச் செலவுகளை எப்படி மிச்சம் பிடிக்க முடியும்னு திட்டம் போட முடியும்!'' என்று சொல்லும் எண்பது வயது காவேரி ஆச்சி... மகன், மருமகளுடன் வசித்தாலும் இன்னமும்கூட அவர்தான் கணக்கு எழுதுகிறார்!


பெண்கள் தனியே இருக்கும் செட்டிநாடு வீடுகளில், வேலைக்கு வருபவர்களை எவ்வளவு ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பற்றி சொன்னார் சீதை ஆச்சி.


''வேலைதேடி வர்றவங்களோட நாணயத்தையும் நேர்மையையும் சோதிக்கிர மாதிரி சில பரீச்சைங்களை வைப்போம்! அவங்க கண்ணுல படுறமாதிரி சில்லறைக் காசுகளை வைப்போம். அவங்க அதை எடுக்குறாங்களா, கண்டுக்காமப் போறாங்களாங்குறதுதான் பரீச்சையே... அதுமாதிரி, சமையக்கட்டுக்கு வேலைக்கு வர்றவங்களைச் சோதிக்குறதுக்காக அரிசி, பருப்பு அத்தனையும் கரெக்டா அளந்து கொட்டி வெச்சுப்போம். இதனால கிராம் கணக்குல கொறைஞ்சாகூட தெரிஞ்சு போயிடும். தப்பான ஆள்னு தெரிஞ்சா, உடனே நாலு பேரைக் கூட்டிவெச்சு, அந்த வேலைக்காரங்க செஞ்சதைச் சொல்லி வெளியே அனுப்பிடுவோம். அப்புறம், அவங்க வேற எந்த செட்டியார் வீட்டுலயும் வேலைக்குப் போக முடியாதபடிக்கு ஆயிடும். ஆனா நாங்க வைக்கிற பரீச்சையில் பாஸாகி, எங்களுக்கு நம்பிக்கையா நடந்துக்கிறவங்களை நாங்க உன்னதமா வெச்சுருப்போம். அவங்க பரம்பரைக்கே நாங்க சோறு போடுவோம்...''


''ஆச்சிகள்கிட்டே புள்ளைங்க வளர்ந்தா கட்டு செட்டா குடும்பம் நடத்தக் கத்துக்கும்” என்ற எண்ணத்தில் முன்பெல்லாம் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த குடியானவர்களே கொண்டுவந்து ஆச்சிகளிடம் 'குருகுல வாசம்’ போல விட்டுவிடுவார்களாம்.


தற்போது பெரும்பாலான அந்த பிரமாண்ட வீடுகள் பூட்டியே கிடக்க, ஆச்சிகள் அவுட்ஹவுஸில் அல்லது வீட்டின் ஒரு மூலையில்தான் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இதனால் திருட்டும்கூட அந்தப் பகுதியில் அதிகமாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், கோட்டை போன்ற வீட்டுக்குள் நுழையும் திருடர்கள், அந்த வீடுகளுக்குள் நாள்கணக்கில்.. சமயத்தில் மாதக்கணக்கில் கூட தங்கியிருந்து, சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டே... வீட்டின் ஒவ்வொரு மூலையாக ஆராய்ந்து, கிடைத்ததை நிதானமாகச் சுருட்டிக்கொண்டு வெளியேறுகிறார்கள்! 'இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் அசிங்கம்’ என்று நினைத்துப் பெரும்பாலானவர்கள் இதை வெளியில்கூடச் சொல்வதில்லை!


உமையாள் ஆச்சி - அறுபது வயதைக் கடந்துவிட்டாலும் குடும்ப நிர்வாகத்தை ஒரு பக்கமும் பள்ளத்தூர் பஞ்சாயத்து போர்டு தலைவியாக அதன்
நிர்வாகத்தை மற்றொரு பக்கமுமாகச்
சளைக்காமல் கவனித்து வருகிறார்! செட்டிநாட்டு வீடுகள், கோட்டை போல் பெரிது பெரிதாகக் கட்டப்பட்டதற்கு சுவாரஸ்யமாக ஒரு விளக்கம் கொடுக்கிறார் உமையாள் ஆச்சி.


''காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து உப்பு கொண்டு விற்க பர்மாவுக்குப் போனவர்கள்தான் எங்க செட்டியார்கள். எங்கள் சமூகத்து ஆண்களெல்லாம் பர்மாவில் இருந்தப்போ காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் தாக்கி அழிச்சுட்டது. அப்போ, ஆச்சிமார்கள் எல்லாம் பெரும் அவஸ்தைப்பட்டுப் போயிருக்காங்க. இந்த விஷயத்தை கேள்விப்பட்டுத் துடிச்சுப்போன செட்டியார்கள், பர்மாவில் வியாபாரம் பண்ணிச் சம்பாதிச்ச பணத்துக்கு, அங்கேயே தேக்கு மரங்களை வாங்கிக்கொண்டு வந்து, கடல் தாக்காத இந்த மேட்டுப் பகுதியில் கோட்டை மாதிரி இப்படி உசரமான வீடுகளைக் கட்டிப் போட்டுட்டாங்க... குடும்பம் கலையாமல் இருக்கணும்னு வீடுகள்ல ஏகப்பட்ட அறைகளை வெச்சுக் கட்டியிருக்காங்க. அவர்கள் அப்படித் திட்டமிட்டுக் கட்டினதால்தான் இன்றைக்கு சில இடங்கள்ல ஒரே வீட்டுக்குள் முப்பத்திரண்டு குடும்பங்கள் பிரியாம வாழ்ந்துட்டிருக்காங்க!'' என்று பெருமையாகச் சொன்னாலும் உமையாள் ஆச்சிக்குச் சில வேதனைகளும் இருக்கின்றன.


''அன்றைக்கு பர்மாவில் செழிப்பாக பிஸினஸ் செஞ்சு, பெரிய பெரிய வீடுகள் கட்டிய குடும்பங்களில் பல... இன்றைக்கு குடிக்கக் கஞ்சிக்குக்கூடக் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. இருந்தாலும், அந்தக் கஷ்டம் வெளியே தெரியறதில்லை. பிரமாண்டமா நின்னுட்டிருக்க வீடுகளை இடிச்சு, பர்மா தேக்கு மரங்களை வித்துக் கஞ்சி குடிச்சிட்டிருக்கு பல செட்டியார் குடும்பங்கள். ஆனா, செட்டியார் சமூகத்தில் ஒருசிலர் வசதியா இருக்கிறதை மட்டும் சிலர் கணக்கிலெடுத்துட்டு ''அது பணக்கார சமூகம்’னு ஈஸியா சொல்லிடறாங்க. அரசாங்கமும் அப்பிடித்தான் நினைக்குதுங்கிறது இன்னும் ரொம்ப வேதனை...'' என்கிறார் பெருமூச்சுடன்.

No comments:

Post a Comment