Sunday, May 11, 2014

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள்









பொன்விழி, அன்னூர்.


''பெரியாரை உங்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்?''


''முதலில் என் தந்தையார்... கடுமையான வாய்மொழி விமர்சனத்தின் மூலம். பின்பு, என் மூத்த சகோதரர் சாருஹாசன்... பகுத்தறிந்த பாராட்டுக்களின் மூலம்.


பெரியார் என்ன சொல்கிறார், ஏன் அப்படிப் பேசுகிறார் என்று எடுத்துச் சொல்ல யாரும் இன்றி நானாக உணர ஆரம்பித்தபோதுதான், உண்மையான முதல் அறிமுகம் அவருடன் ஏற்பட்டதாகவும் கொள்ளலாம்!''





புதூர் பாலா, நாமக்கல்.


'' 'எந்திரன்’ படத்தில் நாம் நடிக்கவில்லையே என்று எப்போதாவது நினைத்தீர்களா..?'' (ஹானஸ்ட்டாகப் பதில் கூறுபவராச்சே கமல்.)


''நினைத்திருந்தால், நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''பரமக்குடியில் பிறந்தீர்கள் அவ்வளவுதான். ஆனால் வளர்ந்தது, வாழ்வது சென்னையில். ஆனால், நீங்கள் ஒருபோதும் சென்னையைப்பற்றிக் குறிப்பிடுவது இல்லை. 'நான் இன்னும் பரமக்குடிக்காரன்தான்’ என்று அழுத்திச் சொல்கிறீர்கள். ஒரு சென்னைக்காரனாக மிகுந்த கோபத்தோடு இந்தக் கேள்வி?''


''நான் வாழ்ந்து அனுபவித்த எல்லா மண்ணிலும் என்னை ஊன்ற விரும்பாது, நாடோடிக்கொண்டு இருக்கும் கலைஞன் நான். நான் பரமக்குடிக்காரன் என்பதோடு, சென்னை வாழ் தெலுங்கு மலையாளி எனவும் கொள்ளலாம். To put it succinctly... INDIAN..''


மலைஅரசன், அருகந்தம்பூண்டி.


''அக்பருக்கு பீர்பால்... கிருஷ்ண தேவராயருக்கு தெனாலிராமன். கமல்ஹாசனுக்கு..?''


''மனசாட்சி!''


பிரசன்னா, சேகரை.


''உங்களின் முதல் முத்த அனுபவம் எப்போது?''


''நான் என் குடும்பத்தில் கடைக்குட்டி. அதனால், நினைவு தெரிந்த நாள் முதல் முத்த மழைதான். முதலே நினைவில்லாத அளவுக்கு!''





ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''சமீபகாலமாக தமிழக முதல்வரை மேடைகளில் ஏகமாகப் புகழ்கிறீர்களே? கொச்சையாகச் சொன்னால், 'ரொம்ப ஜால்ரா’ அடிக்கிறீர்களே... ஏங்க?''


''அது சமீப கால நிகழ்வல்ல. குழந்தைப் பருவம் முதல் பழக்கம். அவர் முதலமைச்சர் ஆனதற்கு நான் மட்டும் பொறுப்பல்லவே. தவிர, சமீப கால மேடை ஒன்றில் கலைஞரின் பெருமகனாரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகமாக வெளிவந்தபோது, பெரும் பத்திரிகைகளின் ஆசிரியர், உரிமையாளர் பலரும் என்னுடன் மேடையில் இருந்து பாராட்டினார்கள். சிலர் அதிகமாகவே பாராட்டினார்கள். நான் கலைஞரின் ரசிகனாக அவர் ஆட்சியில் இல்லாதபோதும் இருந்திருக்கிறேன். அதைக் கொச்சைப்படுத்துவது உங்கள் குணாதிசயம். நான் எதை அடித்தாலும் தாளம் தப்பாது!''


இ.பு.ஞானப்பிரகாசம், சென்னை-91.


''அடுத்த பிறவி என்று ஒன்று இருப்பதாக (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)வைத்துக்கொள்வோம். தாங்கள் எங்கே, எப்படி, என்னவாகப் பிறக்க விருப்பம்?''


''இதுவும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.


இந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைகதையாக நிரூபிக்கும் நல்லறிவாளியாக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளனாக!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''


''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''


பி.விஜயலட்சுமி, வேலூர்.


''நமது தேசியப் பறவை மயில், தேசிய விலங்கு புலி, தேசிய மலர் தாமரை, தேசிய குணம்..?''


''சமரசம்!''


பி.எஸ்.ஜனார்தன், மதுரை.


''தமிழ் நடிகர்களில் மிகவும் துணிச்சலானவர் விஜயகாந்த்தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''


''அதற்கென்ன? ஒப்புக்கொண்டால் போச்சு!''


சுகந்தி, சிவகங்கை.

''சமீபத்தில் பாதித்த புத்தகம்?''


''பல!


அதில் குறிப்பிடக் கடமைப்பட்டது 'The Last Lecture’ என்ற ஆங்கிலப் புத்தகமும், 'இன்றைய காந்தி’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளும், நண்பர் அய்யனார் தந்த தமிழாக்கப்பட்ட சாதத் ஹசன் மன்ட்டோ (Sadat Hassan Munto) கதைகளும்!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.

''ஒரு நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கையை எழுத அவனுடைய அந்தரங்கத்தை அறிந்துகொள்ள ஏன் பத்திரிகைகள் (உலகமெங்கும்) ஆவல்கொள்கின்றன? அதைவிட, அவற்றைப் படிக்க வாசகன் ஏன் பெரிதும் ஆர்வம்கொள்கிறான் என்று நினைக்கிறீர்கள்? ஒரு நடிகனாக உங்களை மிகவும் பாதித்த... உங்களைப்பற்றிய செய்தி என்று எதைச் சொல்வீர்கள்?''


''அது திரைச் சீலையாக இருந்தாலும், வெறுஞ்சீலையாக இருந்தாலும் விலக்கிப் பார்க்கும் ஆதார குணம் உள்ளவர் அதிகம் இருப்பதும் ஒரு காரணம்.


ஒரு திருடன் பிடிபடும்போது, பிடிபடாத திருடன் பரிகசிப்பதுபோன்ற குணாதிசயமும் காரணம்.


நீங்கள் கேட்ட கேள்வியும் அந்தரங்கம் ஆராயும் ஒரு கேள்விதான். நானா நேரடி பதில் சொல்வேன்? இஸ்கு... இஸ்கு!''


முகமது அலி, மதுரை.


''திருமணத்துக்குப் பிறகுதான் நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்ணைச் சந்திக்கிறோம் என்பது சரியா?''


''இந்த வம்புனாலதான், நான் இனி மணம் முடிப்பதாக இல்லை - போதுமா?''


எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

''வறுமையின் நிறம் என்ன?''


'' 'பஞ்ச’வர்ணம்!''


கி.சித்ரா, மதுரை.


''ஸ்ரீவித்யாவின் அந்திமக் காலத்தில், உங்களை மட்டும் சந்திக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும், நீங்கள் சந்தித்ததாகவும் கேள்விப்பட்டேன். அந்த நட்புபற்றி..?''


''அவள் இறந்தாலும் இறவா நட்பு!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.

'' 'உலக நாயகன்’ என்று உங்களை அழைக்கும்போது நீங்கள் அடைவது ஆனந்தமா, பரவசமா, கர்வமா, அருவருப்பா, கூச்சமா அல்லது அவமானமா?''


''உலகளவு புரிந்த யாருக்கும் கூச்சம்தான். ஆனால், ஒருவகையில் நாம் எல்லோருமே உலக நாயகர்கள்தான். அவரவர் உலகுக்கு அவரே நாயகர்!''




எம்.பாரதி, ஆழிவாய்க்கால்.

'' 'கலவி முடிந்த பின் கிடந்து பேசினாளாயின் காதலாய் மாறலாம் எச்சரிக்கை!’ - அனுபவம் பேசுகிறதா கமல்?''


''சும்மா கிடந்து அலையாதீங்க. அனுபவம் இல்லாமலா ரெண்டு பிள்ளைகளும்... காதலிகளும்?''


எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

''நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்... இப்போது கலைஞர் குடும்பம் சினிமா வைத்தத்தெடுத்து இருப்பது ஆரோக்கியமான விஷயம்தானா?''


''யார் நெஞ்சைத் தொட்டு என்று முதலில் சொல்லுங்கள்!''


அனுசூயா, தூத்துக்குடி.

''உங்கள் ரசிகர்கள் உங்கள் தனிப் பட்ட வாழ்க்கையைப் பார்த்து, அவர்களும் பின்பற்ற மாட்டார்களா?''


''காந்தி, கோட்ஸே, ஹிட்லர், புத்தர், இயேசு போன்றோரைப் பார்த்துக் கற்காத அவர்களின் ரசிகர்கள் போல்தான் என் ரசிகர்களும். நல்லது கெட்டது தெரிந்தவர்கள்!''





இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.

''சமீப காலமாக நிறையப் புதிய இயக்குநர்கள், நல்ல கதை அம்சம் உள்ள அதே சமயம், வியாபாரரீதியாக நன்றாக வசூலாகக்கூடிய படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் படங்களில் நடிக்காமல், சீனியர் இயக்குநர்களின் படங்களிலேயே ஏன் நடிக்கிறீர்கள்?''


''நடிக்கவைக்கிறார்கள், வியாபாரம் தெரிந்தவர்கள். இன்னும் சில வருடங்கள் கடந்தால், எனக்கும் சீனியரான இயக்குநர்கள் கிடைப்பது கடினம் என்ற ஒரு காரணமும்கூட!''


பெ.பச்சையப்பன், கம்பம்.

''உங்களின் பேச்சு, கவிதை, திறமையை வெளிப்படுத்தும் விதம், எல்லாமே ஒரு முறைக்குப் பல முறை உன்னிப்பாகக் கவனித்தால்தான் புரிகிறது. இது உங்களுக்குத் தெரியுமா? ஏன், எதையுமே 'சட்’டென்று மற்றவர்கள் புரியும்படி செய்யக் கூடாதா சார்?''


''பல முறை கவனிக்கப்படுவதே வெற்றி தானே. உங்களுக்குப் புரியாமல் போனதற்கு வருந்துகிறேன். நன்றி, மீண்டு வருக!''


கே.ஜியாவுதின், நாகப்பட்டினம்.

''உங்களைக் கவர்ந்த பெண் யார்?''


''என் தாயில் துவங்கிப் பலர்!''


சி.ராணி, தஞ்சாவூர்.

''கட்டிப்பிடி வைத்தியத்தில் தங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை உண்டா? அது ரீலா... ரியலா?''


''ரீலைப் பொறுத்தவரை ரியல். பொது இடங் களில் ட்ரை பண்ணால்... வேலைக்கு ஆவாது!''


எம்.கே.ராஜ், திருப்பூர்.


'' 'லேட்-சைல்டு’ என்கிற வருத்தம் இப்பவும் தங்களிடம் இருக்கிறதா?''


'' 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கறதுனால... இல்ல!’ பஞ்ச் வசன உபயம்: நண்பர் ரஜினி!''


கே.அன்பு, சென்னை91.

'' 'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''


''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''


மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

'' 'விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை வேண்டாம் என்ற கருத்தைச் சொன் னீர்கள். உயிர்களைக் கொல்பவனுக்கு வேறு என்ன தண்டனைதான் உச்சபட்சமாகத் தர முடியும்?''


''இது நான் தானம் பெற்ற கருத்து. இதை எனதாகவும் ஏற்கிறேன். பிழையாப் பெருமை சட்டத்துக்கு இல்லாதபோது, திருத்த முடியாத தீர்ப்பை வழங்கும் அருகதை அதற்கு இல்லை. காந்தியார் வாக்கில் சொன்னால், 'கண்ணுக்குக் கண்’ என்று வெகுளும் சட்டங்கள், ஒரு நாள் உலகையே குருடாக்கும்!''


என்.ரத்னகுமார், தஞ்சாவூர்.

''நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நல்ல சமூக அக்கறையாளர், உண்மையான பகுத்தறிவுவாதி, இதில் எதிர்கால சமுதாயம் உங்களை எப்படி நினைவுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?''


''சமூக அக்கறைதான் என்னைப் பகுத்தறிவுவாதி ஆக்குகிறது. எதிர்காலத்துக்கு என்னைப்பற்றி நினைவுகொள்ள நேரம் இருந்தால், சமூக அக்கறைகொண்ட பலரில் ஒருவனாக, தனிப் பெயர் இல்லாத கூட்டமாக நினைத்தால்கூடப் போதுமானது!''


வி.புபேஷ், கானாடுகாத்தான்.

''நீங்கள் ஏன் இன்னும் ரகசியக் கவிஞராகவே இருக்கிறீர்கள்? உங்கள் கவிதைத் தொகுப்பு எப்போது வரும்?''


''இந்துக்களின் அனுமதியுடன் விரைவில்!''


ஹரிநாராயணன், செம்மஞ்சேரி
.


''ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகள் உங்களை இமிடேட் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''


''நானே ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுதானே. ஒரு கதை நினைவு வருகிறது. ஆர்வத்துடன் திரு.ராஜாஜியைப் படம் வரைந்த ஒரு சிறுவன், தான் அவரைத் தத்ரூபமாக வரைந்ததாய் நினைத்துக்கொண்டு, அதில் அவர் கையெழுத்து வாங்க முண்டியடித்து அவரிடம் நீட்ட. அதில் ராதாகிருஷ்ணன் என்று கையெழுத்திட்டாராம் ராஜாஜி. 'இது உங்க கையெழுத்து இல்லையே’ என்ற சிறுவனிடம், 'படமும் என்னுதில்லயே’ என்றாராம் ராஜாஜி. சில சமயம் மிமிக்ரிக்களும் அப்படி ஆவது உண்டு.''


பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.


'' 'மருதநாயகம்’ என்கிற மாமனிதரைச் சந்திக்கவே முடியாதா?''


''சினிமாவில் முடியும்!''


பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.


''ஓட்டு போட விருப்பமா... வாங்க விருப்பமா?''


''எதுவுமே வாங்காமல் ஓட்டுப் போடவே எப்போதும் விருப்பம்!''


'அலொபஸ்’ கணேசன், மந்தைவெளி.


''நீங்கள் கண்ட கனவு நிஜமானது உண்டா... அந்தக் கனவு என்ன?''


''நான் நடிகனானது, இயக்குநரானது, சினிமாவுக்குப் பாட்டு எழுதியது, திரைக்கதை எழுதியது, உங்கள் பாராட்டுக்கள் கிடைத்தது எல்லாமே நான் கண்ட கனவுகளே!''


எம்.வினோதினி, கோயம்புத்தூர்.


''உங்களை எப்போதாவது ஸ்ருதியிடம் கண்டிருக்கிறீர்களா?''


''பலமுறை. என் மழலையை, என் கோபத்தை, என் அன்பை அவள் உருவில் பிம்பமாய்!''


இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.


''நீங்கள் நடிக்காத படங்களில் பிடித்த படம்... சந்திக்காத நபர்களில் பிடித்த நபர்... உங்களை இயக்காத இயக்குநர்களில் பிடிக்காதவர்..?''


''நான் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போன பல நூறு படங்களின் பட்டியல் கைவசம்.


சந்திக்காத நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு ரங்கா ராவும் அடக்கம்.


என்னை இயக்க மறந்த பல நல்ல இயக்குநர்கள் உள்ளனர். அந்தக் காரணத்துக்காகவே அவர்கள் அனைவரையும் பிடிக்காது!''





ச.வினோத், சென்னை84


''நண்பர்கள்போல நட்புடன் ஓர் இயக்குநரிடம் சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியாதா? உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறதே?''


''அடிமைகளாக யாரும் இருக்கக் கூடாது. சினிமா கற்றுக்கொள்ள பள்ளிகள் இருக்கின்றன. டாக்டரிடம் கம்பவுண்டராக இருந்து, நட்புடன் மருத்துவம் கற்பது அபாயம். உங்களுக்கும் நோயாளிக்கும்!''


சா.கணேஷ், வேலூர்.


''பெரியார், காந்தி... உங்களுக்கு நெருக்கமானவர் யார்?''


''குஜராத்... கொஞ்சம் தூரம். ஈரோடு... பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்!''


கே.வெங்கடேசன், தோட்டப்பாளையம்.

''சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான் எல்லோரும் நல்லவர்கள் என்கிற வாதத்தில் நீங்கள் நியாயம் காண் கிறீர்களா?''


''அது எல்லோருக்கும் பொருந்தாது. சந்தர்ப்பத்தை மறுத்தவர்கள் பலர் உண்டு... நான் உள்பட!''


ந.வந்தியக்குமாரன், சென்னை41


''இப்போதுதான் 200 கோடி செலவழித்து, தமிழ்ப் படம் எடுக்கிறார்களே? 'மருதநாயகம்’ எடுக்க முடியாததற்குக் காரணம் பணமா, அல்லது வேறு எதுவும் சொல்ல முடியாத காரணமா? 12 வருட தமிழ்நாட்டின் கேள்வி இது?''


'' 'மருதநாயகம்’ - ஒரு தமிழ்ப் படம் மட்டும் அல்ல; அது ஒரு ஃபிரெஞ்ச் - ஆங்கிலப் படமும்கூட. உலக அரங்கில் அதை ஒளிரவிட இயலும் பங்காளி தேவை. அது எல்லைகள் தாண்டும் படம். வேலிக்கு உள்ளே சஞ்சரிப்பவர்களுக்கு, அதன் வியாபார மகிமை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை!''


ஆர்.சுஜாதா, சென்னை.


''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''


''நான் எழுதிய படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மற்றபடி கோடம்பாக்கத்துக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால் பறித்துச் சூடிக்கொள்வது பழக்கம்!''


எம்.பாஸ்கரன், மயிலாடுதுறை.


''நாகேஷ் தனது வாரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. நீங்கள் இப்போது சொல்லுங்கள்... தமிழ்த் திரையுலகில் உங்கள் வாரிசு யார்?''


''நான் அப்படிச் சொல்லவில்லை. என் வாரிசுகளே என் கண்ணுக்குத் தெரியும் அவர்களையும் விஞ்சும் திறமையை உணர நேர்ந்தால் உடனே சொல்லிவிடுவேன்!''





எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


''உண்மையைச் சொல்லுங்க கமல் சார், நீங்க நல்லவரா... கெட்டவரா?''


('தெரியலப்பா’னு சொல்லக் கூடாது!)


''எல்லோரையும் மாதிரி ரெண்டும்தான்!''


ஆர்,ஜேஸ்மின் ரமேஷ், மதுரை.


''முதல் துரோகம் ஞாபகத்தில் உள்ளதா... என்ன என்று பகிர்ந்துகொள்ள முடியுமா?''


''பகிர்ந்துகொள்ள முடியாத பல துரோகங்கள் உள்ளன. பகிர்வதாக இல்லை!''


எம்.மோகன், வேலூர்-2.


''உங்களால் மறக்க முடியாத ரசிகர் யார்?''


''திருமதி ராஜலட்சுமி, திரு சீனிவாசன். இருவரும் தம்பதியினர். என் தாய், தந்தையரும்கூட!''


அ.யாழினி பர்வதம், சென்னை-78.


''அந்த மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கை சுஜாதா உங்களிடமாவது சொன்னாரா?''


''சொன்னாரே... ஆனா, யார்கிட்டேயும் சொல்லாதேனு சத்தியம் வாங்கிட்டுப் போயிட்டார்!''


ஆர்.ராமகிருஷ்ணன், போடிநாயக்கனூர்.


''சுஜாதா இருந்திருந்தால்...''


''இன்னும் நிறையக் கதைகளும் கதைப்பதும் தொடர்ந்திருக்கும்!''


ந.சின்னசாமி, அன்னதானபட்டி.


''சப்பாணிக்கும் ராஜ மன்னாருக்கும் உள்ள உறவு?''


''இரண்டு பேருமே என் தூரத்து உறவுகள்!''


எஸ்.பி.சுப்பராகவன், திருப்பூர்.


'' 'என்னைப்போல் ஒருவன்’ என்று யாரையாவது நினைத்திருக்கிறீர்களா?''


''எஸ்.பி.சுப்பு உள்பட எல்லோரையும்!''


''நீங்கள் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களைச் சிறந்த நடிகராக நீங்கள் உணர்ந்த தருணம் எது?''


''இன்னும் உணரவில்லை. நான் வெறும் வதந்திகளை நம்புவது இல்லை!''


ஜி.சிவக்குமார், பழனி.


''சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா?''


''இல்லை. பிறர் சரிதைதான் சந்தோஷம்!''


சா.பிரேமா, செங்கல்பட்டு.


''தாயின் அன்பு - மனைவியின் அன்பு... எது பெரிது?''


''ஒன்று, Unconditional. மற்றொன்று, Conditional. ஆனால், சில சமயம் தாயுள்ளம் கொண்ட மனைவியரும் அமையப் பெற்றவர் உண்டு!''


எம்.சங்கர், செய்யாறு.



''அடுத்த 10 வருடங்களில் தமிழ் சினிமாவில் உங்களுக்கு நம்பிக்கை தரும் நபர்களைக் குறிப்பிடவும்?''


''என் பெயர் உட்பட, யாருக்கும் அடித்து ஆரூடம் சொல்ல முடியாத தொழில் இது. எங்களில் யாரெல்லாம் விபத்து, வியாதி இல்லாமல் உயிர்த்து இருக்கிறார்களோ, 'அனைவரும் முயல்வோம்... சிலர் வெல்வோம்’. survival of the fittest!


சு.அருளாளன், ஆரணி.


''உங்கள் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவத்தை நினைத்தால், அடக்க முடியாத சிரிப்பு வரும்?''


''பத்துப் பதினைந்து நிகழ்வுகள் இருக்கின்றன. நான் நடிகனானது உட்பட!''


கே.பாபு, சென்னை-75.


''தமிழ் சினிமா அடுத்த பரிணாமத்துக்குச் சென்றுவிட்டதாகக் கருதுகிறீர்களா? ஏனென்றால், இன்னும் ஐந்து பாட்டு, குத்துப் பாட்டு, ஹீரோ - ஹீரோயின் டூயட் டிரெண்ட் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலப் படத்தைப் பார்த்தால் 90 நிமிடங்கள்தான். ஏன் இன்னும் நாம் அந்த அளவுக்கு முயற்சிக்கவில்லை. 'உலக நாயகன்’ படங்களிலும் குத்துப் பாட்டு, தேவையற்ற சண்டைக் காட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன?''


''இல்லை. விரிவான பதில் உங்கள் கேள்விக்குள் அடக்கம்!''


க.ராஜன், தஞ்சாவூர்.


''உங்களுக்குப் பிடித்த டி.வி நிகழ்ச்சி?''


''செய்திகள், National geographic, Discovery channel, பழைய படங்கள். மற்றவற்றை எல்லோரையும்போல் பரிவுடன் பொறுத்துக்கொள்கிறேன்!''


ஆ.சசிக்குமார், உடுமலைப்பேட்டை.


''பாரதியின் கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது... ஏன்?''


'' 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ எனக் கேட்டு வீரத்துக்கு வயது இல்லை என்ற நம்பிக்கையைச் சிந்திப்பவர்க்கு ஊட்டிடும் வரிகள்!''


ராஜலக்ஷ்மி பாலாஜி, சென்னை-33.


''ஒரு கமல் ரசிகனுக்கு நீங்கள் தரும் அதிகபட்ச மரியாதையாக எதைக் கருதுகிறீர்கள்?''


''அவர் ரசனையுடன் அவரையும் உயர்த்தும் கலையை அவருக்கு ஊட்டும் தாய்மையையே!''


ச.சிவா, வந்தவாசி.


''புது வருடத்தில் இருந்து ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால், எந்தப் பழக்கத்தை விட்டுக்கொடுப்பீர்கள்?''


''கேள்விக்குப் பதில் அளிப்பதை. கேட்பது நானாக இருக்கும்பட்சத்தில், என் அறிவும் வளரும் அல்லவா?''


சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர்.


''தொண்டன், பக்தன், ரசிகன் யார் முதல் ஏமாளி?''


''ரசிகன் ஏமாறத் தேவை இல்லை... ரசனையை மேம்படுத்திக்கொள்ளும் வரை!''


என்.ரகு, காஞ்சிபுரம்.


''தமிழ்ப் பட உலகத்தைப் பிடித்து ஆட்டுகிற நோய் என்ன... அதைப் போக்குவது எப்படி?''


''ரசனைக் குறைவுதான். அதைப் போக்குகிறேன் பேர்வழி என்று ரசிகர்களையே தொலைத்துவிடக் கூடாதே என்ற பயமும் உண்டு. பயம்கூட ஒரு வகை நோய்தான்!''


சி.ரவி, அரக்கோணம்.


''கமல் - ஸ்ரீதேவி, கமல் - ஸ்ரீபிரியா, கமல் - த்ரிஷா... ஜோடிப் பொருத்தம் ஒப்பிடுக?''


''காலம் தந்த கோலம் இது. ஒப்பிடல் சரியாகாது. எனக்கு மூவரும் வேண்டியவர்கள்!''


பி.கமல் செல்லப்பா, திருநெல்வேலி.


''உங்களுடைய இயக்கத்தில் வேறு ஒருவர் நடிக்கும் படத்தை எப்போது இயக்குவீர்கள்? யாரை இயக்க விருப்பம்?''


''வேறு நடிகர்கள் பலரும் நடிக்க... இயக்கி உள்ளேன். இன்னும் பலரை இயக்கவும் விருப்பம். கதைக்குத்தான் நடிகர் என்ற நிலை வர விருப்பம்!''


கே.ஆதி, சென்னை-74.


''சினிமாவால் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?''


''பெற்றது உம்மை. இழந்தது (கொஞ்சம்) என்னை.''


எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.


'' 'மன்மதன் அம்பு’ படத்தில் நீங்கள் எழுதிய, 'கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்’ பாடலுக்கு 'தெய்வ நிந்தனைப் பாடல்’ என எதிர்ப்புக் கிளம்பி உள்ளதே?''


''அவர்களுக்கு நிந்தனை புரியாததால் ஏற்பட்ட குழப்பமே. இதைவிட நிந்தனைகள் நிறைந்த வரிகள் வந்துள்ளன. இனியும் வரும். அது நான் எழுதிய வரிகளாக இருக்காது, பாருங்களேன்!''


சி.சரஸ்வதி, திண்டிவனம்.


'' 'சர்ச்சை’க்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம்?''


''சர்ச்சைதான்!''


கே.ராமஜெயம், சென்னை24


'' 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கமல்ஹாசா!’ என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா?''


''அப்படி நினைப்பதற்குள் அடுத்த ஆசை வந்துவிடுவதால்...''


என்.ராகவன், கோயம்புத்தூர்.

''கற்பு பற்றி உங்கள் கருத்து என்ன?''


''கடவுள் பற்றிய கருத்து போலதான்!''


ஸ்ரீதர்ஸ்ரீனிவாசன், கோயம்புத்தூர்.

'' 'சத்தியாகிரகம் என்ற ஆயுதம் மூலம், காந்தி தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார்’ என்கிறேன் நான். உங்கள் கருத்து...''


''அவர் நாட்டிய நிலையை அகற்றும் உரிமை உள்ளபோது... சர்வம் ஏது? அதிகாரம் ஏது? அவர் செத்துட்டாரு. விடுங்க, சுட்டுக்கிட்டே இருக்காதீங்க!''


வே.கல்பனா, அரவக்குறிச்சி.



'' 'மய்யம்’ என்ற பெயரில் நீங்கள் நடத்தி வந்த இதழ் பாதியில் நின்று, பிறகு மீண்டும் ஆன்லைனில் வருவதாகச் செய்தி வந்தது. 'மய்யம்’ மீண்டும் வருமா?''


''கண்டிப்பாக - விரைவில்!''


'சின்ன சேலம்’ ரா.ரவி, நாமக்கல்.


''நேற்றைய நண்பர்களைத் திடீரெனச் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?''


''நட்பைப் பாராட்டுவோம். இந்த ஒரு விஷயத்தைத் தனியாகச் செய்ய முடியாது!''


பொன்விழி, அன்னூர்.

''ரீ-மேக் படம் எடுப்பதாக இருந்தால், எந்தப் படத்தை தற்போது எடுப்பீர்கள்?''

''திரு. ஆர்.எஸ்.மனோகரின் 'இலங்கேஸ்வரன்’ என்ற நாடகத்தை, சிறிய மாற்றங்களுடன்!''

எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

''ஒரு மனிதனின் பலம் பலவீனமாவது எப்போது?''

'' 'சரிவில் யானை’ ஓர் உதாரணம். நமக்குச் சரிவுகள் பல உண்டு. பீடு நடைஎல்லாம் அக்கம் பக்கம் பார்த்துத்தான் போட வேண்டும்!''

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?''
''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

''நீங்களும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?''

''நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக, மீண்டும் நடித்தால் தப்பில்லைதானே.

இருவருக்குமே அந்தத் தற்காப்பு தற்போது தேவை இல்லாமல் செய்த தங்களைப்போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!''

பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர்.

'' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?''

''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''

ஞான.தாவீதுராஜா, பழவேற்காடு.

''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?''
''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''

எம்.எஸ்.கோவிந்தராஜன், சுப்ரமணியபுரம்.

''தங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது வெளிவரும்? அதில் இடம் பெறவிருக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லுங்களேன்... இங்கே எங்களுக்காக!''

'' 'ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை
இறந்த பின், சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு!’ ''

சியாமளா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

''கடவுளைத் துதி பாடி, கலையுலகத்தில் அடிவைத்த தங்களுக்கு (களத்தூர் கண்ணம்மா) கடவுள் மீது பற்றில்லாமல் போனது ஏன்?''
''மழலை மாறியதுபோல, உயரம் கூடியதுபோல, உருவம் மாறியதுபோல, பகுத்தறிய பற்று வேறு பக்கம் திரும்பியது. என்னைப் பயிற்றுவித்தவர்களுக்கு நன்றி!''

என்.குமார், தஞ்சாவூர்-8.

''விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன?''

''அது அவரவர் தீர்வு. இதில் என் கருத்துக்கு ஏது இடம்?''

லீலா ராம், தக்கலை.

''ஒபாமாவைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?''

''வெள்ளை மாளிகையின் விக்கிரமாதித்ய சிம்மாசனம் என்ன என்ன பாடுபடுத்துகிறது என்று பரிவுடன் விசாரிப்பேன்!''

ப.தங்கமணி, சூசைபாளையம்.

''நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை?''

''எனினும்.''

பொன்விழி, அன்னூர்.

''பாலசந்தர் - பாரதிராஜா ஒப்பிட முடியுமா?''

''அப்பா - அண்ணன்!''

சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர்.

''ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் என்ன?''

''நட்புதான்!''

சிவக்குமார், திண்டுக்கல்.

''தற்போது தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?''

''எப்போதும் நாகேஷ். அதற்குப் பிறகுதான் நாங்கள் எல்லோரும்!''

பாரதி, சேலம்-9.

''உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் முரண்படும் ஒரு விஷயம்? அவரைப் பாராட்டும் ஒரு விஷயம்?''

''முரண்பாடுகள் உள்ளதாலேயே, எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு, சாதாரணமாக இருக்க முயல்வதால்...உன்னதமானவர்!''

எஸ்.சந்தோஷ், சென்னை-75.

''பழம்பெரும் திறமையான நடிகர் நடிகைகளுடன் (காகா ராதாகிருஷ்ணன், எஸ்.வரலட்சுமி) சேர்ந்து நடித்தவர் நீங்கள். ஆனால், ஏன் மறைந்த கலைத் திறன் மிகுந்த நடிகர் ரகுவரனுடன் இணைந்து நடிக்கவில்லை? தனிப்பட்ட காரணம் ஏதேனும் இருந்தால், மறுக்காமல் பதில் கூறவும்!'

''இன்னும் நேரம் இருக்கிறது. பாத்திரம் கூடி வரும்போது செய்யலாம் என்று எண்ணித் தவறவிட்டது தவிர, வேறு காரணம் இல்லை!''

ப.தங்கமணி, சூசைபாளையம்.

''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக?''

''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!

வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்! ''

எம்.மாலதி, நன்னிலம்.

''எப்போதும் உங்களைச் சுற்றி வதந்திகளும் செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. கேள்விகள் உங்களைத் துரத்திக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எல்லோரும் அமைதியான முறையில் உங்களை எதிர்கொள்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''எம்மில் யாரோ ஒருவருக்குப் பக்குவம் வந்துவிட்டதாகச் சந்தேகிப்பேன்!''

சூரியகுமார், திருப்பூர்-4.

''உங்கள் தமிழ் அற்புதமாக இருக்கிறது. ஆனால், உங்கள் மகள்கள் தமிழ் பேசத் தடுமாறுகிறார்களே! அதோடு, உங்கள் மகள்களைப்பற்றிப் பேசும்போது, நீங்கள் ஸ்ருதியைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். அக்ஷராவும் அதீதத் திறமைகள் நிரம்பியவராகத் தெரிகிறார். அவரைப்பற்றியும் இனி பேசலாமே?''

''பேசினால் போச்சு. அக்ஷராவும் ஸ்ருதி அளவு தமிழ் பேசுவார். துணை இயக்குநராகப் பணி புரிகிறார் மும்பையில். அற்புதமான நடனக் கலைஞர்!''

சா.தேவதாஸ், திருச்சி-2.

''உங்கள் திரைக்கதைகள் எங்களைப்போன்ற கமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இனிமேலாவது, வருடத்துக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க முற்படுவீர்களா?''

''இரண்டு கண்டிப்பாக நடக்கக்கூடியது.''

வி.பவானி, திருவாரூர்.

'' 'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?''

''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''

ஆர்.பார்த்திபன், சென்னை-91.

''சமீபத்தில் 'ஆளவந்தான்’, 'உன்னைப்போல் ஒருவன்’ படங்களை அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது. 'ஆளவந்தான்’ படத்தில் 'ஞாபகம்... அதுதானே உன்னுடைய வியாதி!’ என்று ஒரு வசனம். 'உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் 'மறதி... ஒரு தேசிய வியாதி!’ என்று ஒரு வசனம். என்ன சொல்ல வருகிறீர்கள் கமல் சார்?''

''அது 'கல் பேசாது!’ என்று வெகுண்ட அதே நடிகர் திலகம், பக்திப் பரவசத்தில் மிதக்கும் வசனங்கள் பேசவில்லையா? அதேபோல்தான்! ஒரு பாத்திரத்தின் மனோபாவம் வாக்கியமாகிறது. நான் சொல்ல வருவது குணாதிசயங்கள்!''

வி.மலர், செங்கல்பட்டு.

''நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''
''பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''

ப.ராகவன், சேலம்-4.

''உங்கள் படங்களில் புற்று நோய் வந்ததாக ஒரு பாத்திரம் வந்துகொண்டே இருக்கிறது. நண்பர்களின் பாதிப்பா?'' (மகேஷ், ஸ்ரீவித்யா, கௌதமி.)

''இருக்கலாம்!''

கிருத்திகா அரசு, தஞ்சாவூர்.

''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?''

''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''

கி.சம்பத், வேதாரண்யம்.

''சார், நீங்கள் ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குவது இல்லை. உங்களின் அதிதீவிர ரசிகனாக அங்கு உங்களை ஃபாலோ செய்ய விருப்பம்... சாத்தியமா?''

''உங்கள் விருப்பம் நிறைவேற வேறு ஒரு திட்டம் இருக்கிறது. விரைவில் சொல்கிறேன்!''

எம்.கே.ராஜா, மன்னார்குடி.

''காமம் இல்லா காதல் சாத்தியமா?''

''எதுக்கு கஷ்டப்படுறீர்கள்.Try அன்பு!''

எஸ்.ராதாமணி, ராமநாதபுரம்.

''நரை கூடிக் கிழப் பருவமெய்திய பின் என்ன செய்வதாக உத்தேசம்?''

''எல்லோரும் செய்வதை சற்று வித்யாசமாக. ஒத்திகையெல்லாம் பார்த்தாகிவிட்டது பல வேடங்களில்!''

No comments:

Post a Comment