வானத்தில் தோன்றிய பேய்
பேய், பிசாசு, பூதம் இவையெல்லாம் இருக்கிறதா, இல்லை வெறும் கற்பனையா? அவற்றை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா, அப்படியென்றால் அவை எப்படி, எந்தத் தோற்றத்தில் இருக்கும்? இல்லை, அனைத்துமே ஏமாற்று வேலையா, மூடநம்பிக்கைகள் தானா?- இவையெல்லாம் பரவலாக எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள். இருக்கிறது என்று ஒரு சிலரும், இல்லவே இல்லை என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். சென்னையில் இது பற்றியெல்லாம் ஆராய்வதற்காக விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் தலைமையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஆவியுலக ஆராய்ச்சி மையம்’ செயல்பட்டு வருகிறது. Ghost Lives, Conversations with a Spirit என்று பல தலைப்பினால ஆங்கிலப் புத்தகங்கள் ஹிக்கின்பாதம்ஸிலும், லேண்ட்மார்க்கிலும் குவிந்து கிடக்கின்றன. தமிழிலோ கேட்கவே வேண்டாம், ஆவிகள் பேசுகின்றன, ஆவிகளுடன் நாங்கள், ஆவி உலக அனுபவங்கள் என்றெல்லாம் பல புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. உண்மையில் ஆவிகள் இருப்பது உண்மைதானா? இல்லை மனித மனத்தின் கற்பனையா? இந்தக் கேள்விக்கு விடை தேடும் முன் நமது இலக்கியங்களில், புராணங்களில் அவை பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம்.
சிலப்பதிகாரத்தில் பேயும், பூதமும்
உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினர் என்பர். அச்சிலப்பதிகாரத்தில் இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளாக மோகினி, இடாகினிப் பேய், சதுக்க பூதம் என்றெல்லாம் பல நிகழ்வுகள் சுட்டப்படுகின்றன.
“கழல்கண் கூளி”, எனவும் ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’ எனவும் பேயைப் பற்றிக் கூறுகிறது சிலம்பு. வனசாரினி என்ற வன தேவதையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது. ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும், சாமியாடுதல் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மிகச் சிறப்பானது. கொல்லிப் பாவை பற்றியும் மிக விரிவாக சிலம்பு சுட்டுகின்றது. பாய்கலைப் பாவை மந்திரத்தை உச்சரித்து வனசாரிணியிடமிருந்து கோவலன் தன்னைக் காத்துக் கொள்கிறான் என்கிறது சிலம்பு. யார் இந்த வனசாரிணி, யார் இந்த பாய் கலப் பாவை? வனசாரிணி என்பது மோகினிப்பேய் அல்லது வன தேவதை. பாய்கலப்பாவை என்பது கொற்றவை தான் என பதில் கூறுகிறது சிலம்பு. சிங்கம் மட்டுமல்ல; மானும் கூட அவளுக்கு ஒரு வாகனமாம்.
நரபலி கொண்ட பூதம் பற்றியும், தவறு செய்பவரை அடித்துக் கொன்று தின்னும் சதுக்கபூதம் பற்றியும் சிலம்பில் காட்சிகள் உள்ளன. அரசபூதம், வணிக பூதம், வேளாண்பூதம் மற்றும் நால்வகைப் பூதங்கள் பற்றியும் சிலம்பு பேசுகிறது.
சிலம்பில் ஆவி வழிபாடு
மறுபிறவி பற்றியும், முன் வினை, அதன் விளைவுகள் பற்றியும் கூட சிலம்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் இறந்த தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலையும், சேரன் செங்குட்டுவன் அவற்றை வழிபட்டதையும் சிலம்பு காட்டுகின்றது. அதுமட்டுமல்ல; கண்ணகியே இளங்கோவடிகளுக்கு ஆவியுருவில் காட்சி தந்தாள் என்றும் ஆசி கூறி வாழ்த்தினாள் என்றும் இளங்கோவடிகளே நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாசாண்ட சாத்தன் என்னும் தெய்வம் பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றது. “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” என்று இந்திரனின் ஏவலால் பூதம் வந்து நகரைக் காத்ததை சிலம்பு சுட்டுகிறது. மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் அது குறிப்பிடுகிறது. இன்றைய சிறு தெய்வ வழிபாட்டிற்கு அடிப்படையாக அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இது போன்று பல தகவல்கள் சிலம்பு மட்டுமல்லாது, மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி போன்ற பல நூல்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கியங்களில் காணப்படும் எல்லாமே உயர்வு நவிற்சியால் புனைந்துரைக்கப்பட்ட கற்பனைகள்தான் என்றால் கண்ணகி வரலாறும் கற்பனை தானா?
No comments:
Post a Comment