உத்தரப் பிரதேசத்தில் உள்ள பசௌலி என்ற கிராமத்தில் 1969ம் ஆண்டில் பிறந்தவள் மஞ்சு சர்மா. மிகவும் ஏழைக் குடும்பம். அவளுக்கு மூன்று வயதான போது தன் முற்பிறவிகளைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். தன் ஊர் இதுவல்ல என்றும், அருகில் உள்ள சௌமுலா என்றும் கூறியவள், தன் தாய், தந்தையர் அங்கே உள்ளனர் என்று கூறி, அவர்களது பெயர் மற்றும் அடையாளங்களையும் கூறி அழ ஆரம்பித்தாள். தனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் என்றும், அவன் தன்மீது மிகவும் பாசமாக இருப்பான் என்றும் கூறியவள், தனக்கு 9 வயதாக இருக்கும் போது ஒருநாள் பள்ளி விட்டு வரும் வழியில் உள்ள கிணற்றிற்குச் சென்றதாகவும், விளையாட்டாக எட்டிப் பார்த்தவள் அதில் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் கூறினாள். முதலில் இவற்றை பெற்றோர் நம்பவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து தெருவின் வழியாக ஒரு நபர் சென்ற போது, அவரைப் பார்த்த மஞ்சு, ’சித்தப்பா, சித்தப்பா’ என பின் தொடர்ந்து ஓடினாள். பெற்றோருக்கும், அந்த நபருக்கும் ஒரே அதிர்ச்சி.
கிணறு
பின்னர் அவரிடம் விசாரித்தபோதுதான் மஞ்சு கூறியது அனைத்தும் உண்மை என்றும், அந்த நபர் மஞ்சுவின் முற்பிறவித் தந்தையான லடாலி சரணின் சகோதரரான பாபுராம் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து மஞ்சுவின் முற்பிறவித் தாயார், சகோதரர் என பலரும் வந்து அவளைப் பார்த்து விசாரித்து அவள் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் முற்பிறவியில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவள்தாம் என்றும் உறுதிப்படுத்தினர். பின் மஞ்சு சர்மாவின் தற்போதைய பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அவளைத் தங்களுடன் தங்கள் ஊரான சௌமுலாவிற்கு அழைத்துச் சென்றனர்.
மஞ்சு சர்மா
மஞ்சு அங்கு சென்றதும் முந்தைய பிறவியில் தான் வசித்த வீடு, தான் பயன்படுத்திய பொருட்கள், தனது பள்ளி ஆகியவற்றை அடையாளம் கண்டு நினைவு கூர்ந்தாள். முற்பிறவி நண்பர்களைக் கண்டு அவர்களை நலம் விசாரித்தாள். அத்துடன் முற்பிறவியில் தான் தவறி விழுந்து இறந்த, கைப்பிடிச் சுவர் இல்லாத கிணற்றையும் கண்ணீருடன் அடையாளம் காட்டினாள். அதன்பிறகுதான் மஞ்சு கூறுவது முற்றிலும் உண்மை என ஊர்மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதுபற்றிக் கேள்விப்பட்ட பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா மஞ்சுவைச் சந்தித்து உரையாடி, அவள் கூறுவது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்.
தற்போது மஞ்சுவிற்குத் திருமணமாகி விட்டது. குழந்தைகளும் பிறந்து விட்டன. ஆனால் இன்றும் தனது முற்பிறவி உறவுகளை அவ்வப்போது சந்தித்த வண்ணம்தான் இருக்கிறார். ஆனால் வயதாகி விட்டதாலும், கால மாற்றத்தாலும் முற்பிறவி பற்றிய நினைவுகள் பலவும் மறந்து விட்டன என்றும், ஆனால் அந்தக் கிணற்றைத் தம்மால் இன்றும் மறக்க முடியவில்லை என்றும், இன்றும் எந்தக் கிணற்றைப் பார்த்தாலும் தனக்கு மிகவும் படபடப்பாக இருப்பதாகவும், அருகில் செல்வதைத் தவிர்த்து விடுவதாகவும் கூறுகிறார்.
முற்பிறவியில் தண்ணீர் மூலம் விபத்து ஏற்பட்டு இறந்தவர்கள் தண்ணீரைக் கண்டு அஞ்சுவதும், நெருப்பினால் இறந்தவர்கள் அதைக் கண்டு அஞ்சுவதுமாக அந்த அதிர்ச்சி நினைவுகள் ஒரு வித போபியாவாக மறுபிறவியிலும் தொடர்கிறது என்கின்றனர் மறுபிறவி ஆய்வாளர்கள். அதற்கு மஞ்சு சர்மா ஓர் உதாரணம்.
No comments:
Post a Comment