Sunday, March 10, 2013

மரணம் – ஆவி – மறுபிறவி – 1



இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அது புல், பூண்டு, புழு பூச்சியாக இருந்தாலும் சரி. மனிதனாக இருந்தாலும் சரி. ஆனால் ஒருவர் மரணமடையும்போது அவர் பருஉடல் மட்டுமே மரணமடைகின்றது. அவரது நுண்ணுடல் அல்லது ஆவி மரணமடைவது இல்லை. அது குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் பிறக்கிறது. இடைபட்ட காலத்தில் அதன் நிலைப்பாடு என்ன? அதன் உணர்வுகள் என்ன? அது எங்கே, என்னவாக இருந்தது என்பதுபற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக CONVERSATIONS WITH A SPIRIT என்னும் நூலிலும், RETURN FROM HEAVEN என்ற நூலிலும் ஆய்வாளர் DOLORES CANNON இறந்து போன ஆவிகளுடன் பேசி பல அதிசய சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.




எடித் ஃபையரின் ஆய்வு நூல்

அவரது ஆய்வின் படி, முற்பிறவிச் செயல்களும் வாசனைகளும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன என்பதுதான். அந்தாவது மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனது உண்மையான விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான். அந்த வினைகளினாலேயே அவனுக்கு ’கர்மா’ ஏற்படுகிறது. அதனால் தான் கீதை, ’பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்; பற்றற்று வாழ்க்கை நடத்து’ என்கிறது. பகவான் ரமணர் போன்ற மகரிஷிகளும் புதிதாக வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றனர். ஆகவே ஒருவனின் மறுபிறவி என்பதில் அவனுடைய முந்தைய பிறவிகளின் நடத்தைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.

ஒருவன் செய்யும் செயல்களின் விளைவுகள் இப்பிறவி தப்பினும் எப்படியாவது அவனை வந்தடையவே செய்கின்றன. டாக்டர் எடித் ஃபையர் குறிப்பிட்டிருக்கும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.


டாக்டர் எடித் ஃபையர்

துரத்தும் பாம்புகள்

பாம்புகள் தன்னைக் கடிக்க வருவது போன்றும், துரத்துவது போன்றும் கனவுகள் வருவதாகவும், எப்போதும் பாம்புகளைப் பற்றிய நினைவே தனக்கு அதிகம் இருப்பதாகவும், அந்த அச்சத்தைப் போக்க வேண்டுமென்றும் கூறி ஒரு பெண்மணி மறுபிறவி ஆய்வாளர், உளவியலறிஞர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். எடித் ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டார்.

முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக் காரியாக இருந்த விஷயமும், அப்போது ஒரு சமயம் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொண்டு ஆடும்போது அந்தப் பாம்பு கடித்து மரணமடைந்த விஷயமும் தெரிய வந்தது.

முற்பிறவியில் மூளையில் பதிந்த அந்த எண்ண அலைகளே மறுபிறவி எடுத்த போதும் விடாமல் தொடர்கிறது என்பதையும் அதனாலேயே இந்தப் பெண்ணிற்கு அது பற்றிய அச்சமும், குழப்பமும் ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட ஃபையர் தகுந்த மனோசிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை குணப்படுத்தினார்.

அதன்பின்பு அந்தப் பெண்ணுக்கு அந்தப் பாதிப்புகள் தொடரவில்லை என்கிறார் எடித் ஃபையர்.

(தொடரும்)

No comments:

Post a Comment