Sunday, March 10, 2013

ஈ.எஸ்.பி. உண்மையா? – 1


அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று. சரி,  E.S.P (Extra Sensory Perception) என்பது உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா?
 பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். அல்லது போன் வரலாம். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் ஒருவித எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.
 பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல்  டெலிபதி (Telepathy) எனப்படுகிறது.
 எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு –  Precognition என்று பெயர். 
 இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance  என்று பெயர்.
 ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தது போல் மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர்.
 ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.
 இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி. அதே சமயம் விஞ்ஞானிகளால் இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதை அவர்கள் நம்பினாலும் விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் Para-Psychology மற்றும் Para Normal என்ற வகையில் இதனை உள்ளடக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
 பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance  எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான்.
 ஆதிசங்கரர் சன்யாசம் ஏற்கும் தறுவாயில் அன்னை ஆர்யாம்பாள், தனது அந்திமக்காலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள், சங்கரரும் அதற்குச் சம்மதிக்க, பல ஆண்டுகள் கழித்து ஆர்யாம்பாள் நோய் வாய்ப்பட்ட போது மகன் சங்கரரை நினைக்க, உடனே பல மைல் தொலைவில் தவம் செய்து கொண்டிருந்த போதும் சங்கரர் அன்னையின் அழைப்பை உணர்ந்து, இறுதித் தறுவாயில் உடன் இருப்பதற்காக விரைந்து வந்தார். இந்தத் தகவல் பரிமாற்றம் தான் ’டெலிபதி’ எனப்படுகிறது.
 நாஸ்ட்ரடாமஸ் எதிர்காலத்த்தில் இந்த சமயத்தில், இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை கணித்துக் கூறியதும் ஒரு விதத்தில் Precognition எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலின் உதவியோடுதான். ஒரு சில ஜோதிடர்கள் அல்லது ஆரூடம் சொல்பவர்கள், தங்களைக் காண வரும் நபரின் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் கூறுவதுRetrocognition என்ற ஈ.எஸ்.பி. ஆற்றலால் தான்.
 ஒருமுறை பகவான் ரமணரை கேரளாவின் புகழ் பெற்ற நாராயண குரு சந்திக்க வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். வெகு நேரம் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனர். ஆனால் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. பின் இறுதியாக “அங்ஙனே ஆவட்டே…” என்று கூறி நாராயண குரு விடை பெற்றார். ரமணரும் தலைசயைத்தார். அதன் பின்னர்தான் பக்தர்களுக்கு அவர்கள் இருவரும் பேசாமலே பேசிக் கொண்டது – தங்கள் எண்ணங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டது – புரிந்தது. இதைத் தான் ஆன்மப் பரிமாற்றம் என்பர். இது கூட ஒருவிதத்தில் ஈ.எஸ்.யைச் சேர்ந்ததுதான். இதே போன்ற சம்பவங்கள் சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சிப் பெரியவர், யோகி ராம்சுரத்குமார், மாயம்மா என பல ஞானிகளது வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
 உலகெங்கிலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் மிக்கவர் பலர் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முன் அவர்கள் தங்கள் ஈ.எஸ்.பி ஆற்றலை நிரூபித்தும் காட்டியுள்ளனர். தமிழகத்திலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் உள்ள பலர் இருந்திருக்கின்றனர். இன்னமும் இருக்கின்றனர்
 (தொடரும்)

No comments:

Post a Comment