மகாத்மா காந்தி
இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். இன்றோடு அவர் பிறந்து 140 வருடங்கள் ஆகின்றன. எளிய மக்களின் வாழ்க்கை உயர்விற்காகவே தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர், கோட்ஸேவால் சுட்டுக் கொல்லப்பட்டு 61 வருடங்கள் ஆகி விட்டது. காந்தியையும் அவரது கொள்கையையும் இன்று பலர் மறந்து விட்டாலும் இந்தியாவுடனான அவரது பிணைப்பும் உறவும் நேசிப்பும் அஹிம்சை என்னும் உறுதியும் என்றும் நினைவுகூரத் தக்கது.
இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களாக மட்டுமே காந்திஜி அறிமுகமாகியிருக்கிறார். நவநாகரிக யுக இளைஞர்களுக்கோ அவர் ஒரு பிற்போக்குவாதி, மதவாதி, புதுமைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த பிடிவாதக்காரர். அரசியல்வாதிகளுக்கோ, கேட்கவே வேண்டாம் காந்திஜி என்ற பெயர் ஊறுகாய் மாதிரி. அவ்வப்போது தொட்டுக் கொள்வார்கள்.
அவர் செய்த தியாகங்களும், அனுபவித்த கொடுமைகளும், பின்பற்றிய தத்துவங்களும், மேற்கொண்ட எளிமையான வாழ்க்கை முறையும் எல்லோராலும் என்றும் எண்ணிப் பார்க்கத் தக்கவை. அதனால் தான் ஒபாமாவால் கூட காந்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் அவர் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது.
டாக்டர் வால்டர்
மகாத்மாவின் வாழ்க்கையை, அவர் போராட்டத்தை, அவர் தத்துவத்தை, அவரது கொள்கைகளை உலகெங்கிலும் உள்ள பலர் ஆராய்ச்சி செய்துள்ளனர். இன்னமும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்களுள் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு அதிரடியான ஒரு முடிவைத் தந்திருப்பவர் வால்டர் செமிகேவ்.
அவர் சொல்வது இதைத்தான். “மகாத்மா காந்தி மீண்டும் மறுபிறவி எடுத்திருக்கிறார். அமெரிக்காவில் பிறந்திருக்கும் அவர், இப்பிறவியிலும் சமூக சேவை, மனித நலத்திலேயே ஆர்வம் காட்டி வருகிறார்”
வால்டர் செமிகேவ் ஒரு வித்தியாசமான மனிதர். தனது இளமைப் பருவத்தில் கிட்டத்தட்ட நாத்திகராக வாழ்ந்த அவருக்கு அதிசயமான வகையில் முற்பிறவி நினைவுகள் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற் கொண்ட அவர், முற்பிறவியில் தான் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வாழ்ந்த ஜான் ஆடம்ஸ் என்பதைக் கண்டறிந்திருக்கிறார். தனது வாழ்க்கைச் சம்பவங்களும், குணாதிசயங்களும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் ஆடம்ஸூடன் பெருமளவு ஒத்துப்போவதைக் கண்ட அவர் மேலும் தீவிரமாக தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
சென்னையில் வால்டர்
சிகாகோவின் புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் வால்டர், தொடர்ந்து டென்வரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றினார். அப்போது இது போன்ற சம்பவங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1996ல் இருந்தே இது போன்ற முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் தனித்து ஈடுபட்டு வந்த இவருக்கு, பின்னர் கெவின் ரியர்ஸன் என்ற புகழ்பெற்ற மீடியமுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தலைமை மருத்துவராக வாழ்ந்த ’அதுன் ரே’ என்ற மதகுருவின் ஆவியுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த ’மகா ஆவி’ யையே தனது வழிகாட்டும் ஆவியாகக் கொண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு விடை கண்டறிந்து வருகிறார் டாக்டர் வால்டர்.
காந்தி
டாக்டரின் ஆராய்ச்சி தனித்துவமானது. முதலில் முற்பிறவியில் வாழ்ந்த மனிதரைப் பற்றிய தரவுகளைத் திரட்டுவார். அவர் வாழ்க்கை முறை, குணாதிசயம், உருவ அமைப்பு, நடை, உடை, பாவனைகள், தனிப்பட்ட செய்கைகள், முக்கியமான வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவற்றைக் குறித்துக் கொள்வார். பின்னர் அவரது மறுபிறவியாகக் கருதப்படும் நபரின் வாழ்க்கையையும் அதே போன்று ஆய்வுக்குள்ளாக்குவார். அவருடன் பேட்டி காண்பார். இரண்டு நபர்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திப்பார். பல தகவல்களைத் திரட்டுவார். பின்னர் இரண்டையும் ஒப்பிட்டு சோதனைக்குள்ளாக்குவார். அப்படியும் தனக்குச் சந்தேகம் தோறும் போது வழிகாட்டி ஆவியான ’அதுன் ரே’விடம் பேசி, உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டு ஆய்வு முடிவுகளை உலகுக்கு அறிவிப்பார். சமயங்களில் ’அதுன் ரே’வே சில பிரபலமான மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி வால்டரிடம் கூறி ஆய்வுகள் மேற் கொள்ளச் சொல்வதும் உண்டு.
வான் ஜோன்ஸ்
இம்மாதிரி ஆய்வு செய்து அவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் டாக்டர் வால்டர் செமிகேவின் நூல்களுக்கு முக்கிய இடமுண்டு.
இந்தியாவில் வாழும் பிரபல மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கும் டாக்டர் வால்டர் மகாத்மா காந்திஜியின் மறுபிறவியாகக் குறிப்பிட்டிருப்பது அமெரிக்காவில் வாழும் சமூக ஆர்வலரான வான் ஜோன்ஸ் என்பவரை. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலராக விளங்கும் ஜோன்ஸ் சமீபத்தில் தான் புகழ்பெற்ற டைம் பத்திரிகையால் ‘சுற்றுச்சூழல் நாயகன்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.
ஜோன்ஸின் நடை, உடை, பாவனை, உடல் மொழிகள், முக அமைப்பு என அனைத்தும் காந்தியை ஒத்திருப்பதாகக் கூறும் வால்டர், காந்திஜி 1930ல் தென் ஆப்பிரிக்காவில் எதுபோன்ற பணிகளை மேற்கொண்டாரோ அதே போன்ற பணிகளைத் தான் இன்று ஜோன்ஸ் செய்து வருவதாகக் கூறுகிறார். காந்திஜி 1930ல் எப்படி இதே ’டைம்’ பத்திரிகையால் அந்த ஆண்டின் ’மிக முக்கியமான மனிதர்’ என்று போற்றப்பட்டாரோ அதே போன்று இன்று ஜோன்ஸூம் போற்றப்படுகிறார் என்று கூறுகிறார்.
காந்தி-ஜோன்ஸ்
இது போன்ற சம்பவங்களையும், இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகளையும் தனது “Born Again” நூலில் தெரிவித்திருக்கும் வால்டர், சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது தமிழ் நாட்டிற்கும் வருகை தந்திருந்த அவர், முற்பிறவி-மறுபிறவி பற்றிய தனது புதிய நூலான “Origin of the Soul: And the Purpose of Reincarnation”-ஐ லேண்ட் மார்க் புத்தக கடையில் வெளியிட்டார்.
இந்த நூல்களில் காந்திஜியின் மறுபிறவியைப் பற்றி மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ரேகா, ஜெயா பச்சன், ஷாருக்கான், அப்துல்கலாம், மேனகா காந்தி, ஜவஹர்லால் நேரு, விக்ரம் சாராபாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என பலரது முற்பிறவிகளைப் பற்றி ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள லேண்ட மார்க் கடைகள் அனைத்திலும் இந்த நூல்கள் கிடைக்கும்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
(கடவுள் வாழ்த்து, திருக்குறள்)
“பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே”
(இரண்டாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்)
No comments:
Post a Comment