உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப் பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான்.
ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும் தெரிவித்தார்.
ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை விடப் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.
பிரமிடுகளின் மர்மங்கள் தொடர்கின்றன.
No comments:
Post a Comment