முதலில் இந்த Out of body experince என்றால் என்ன என்பது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இது இறப்பிற்குப் பின் உயிரின் அனுபவத்தைக் குறிக்கிறதா என்றால்.. இல்லை. நாம் உயிரோடு இருக்கும் போதே, நம் உடலை விட்டு சற்று நீங்கிய நம் ஆத்மாவின் அனுபவம் அல்லது பயணமே Out of body experince என்று கருதலாம்.
சரி! உடலுக்கு வெளியே ஆத்மாவின் பயணங்களும் அனுபவங்களும் எங்ஙனம் சாத்தியம்? அப்பொழுது இந்த உடலின் நிலை என்ன?. நாம் இறந்து விடுகிறோமோ?… இல்லை… இயக்கமில்லாமல் இருக்கின்றோமா?. உயிர் வெளியேறுவது உண்மையா?. அப்பொழுது வேறு ஏதாவது உயிர் இந்த உடலை ஆக்ரமித்து விட்டால்….????
உண்மையில் இது நிஜமா? இல்லை.. கற்பனையா?… ஒரு வேளை வெறும் கனவா?
முனிவர்கள், ரிஷிகள் போன்றோருக்கு மட்டும் தான் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இந்த மாதிரி அனுபவங்கள் மனிதர்கள் எல்லோருக்கும் சாத்தியமா? உயிர்கள் என்றால் மிருகங்களும் தானே அவற்றில் அடக்கம். அவற்றுக்கும் இவ்வகை உணர்வுகள், அனுபவங்கள் ஏற்படுமா?…. கேள்விகள்… இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்.. நாம் முதலில் நம் உடலையும், உயிரையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
முதலில் நாம் உடல் என எண்ணும் இந்த சரீரம் வெறும் ஒரே உடல் மட்டுமன்று. இதனுள் மொத்தம் மூன்று அடுக்குகள் உள்ளன. சொல்லப் போனால் மூன்று வகை சரீரம் நமக்குள் உள்ளது என்பதே உண்மை.
அவை
1. தூல உடல் (அன்னமய கோசம்)
2. காரண உடல் (ஆனந்தமய கோசம்)
3. சூட்சும உடல் (பிராணமய, விஞ்ஞானமய, மனோமயகோசம்) -என்பனவாகும்.
தூல உடலானது நம் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒன்றாகும். நம் கண்ணால் மற்றவரின் தூல உடலைப் பார்க்க இயலும். ஆனால் சூட்சும உடலைக் காண இயலாது. இது நம்முள் ஒளிரூபமாக வியாபித்து இருக்கக் கூடிய ஒன்றாகும். சித்தர்கள், முனிவர்கள் போன்றோரால் இந்த சூட்சும உடலையும், அது வெளிப்படுத்தும் ஒளியை வைத்து, அந்த ஆத்மாவின் உண்மை பரிபக்குவ நிலையையும் அறிய இயலும்.
பொதுவாக, கர்மாவாலும், பாவச் சுமையாலும் பாதிக்கப்பட்ட ஆத்மாக்கள் கருமை நிற ஒளியை வெளிப்படுத்தும். புண்ணிய ஆத்மாக்களின் உடலில் இருந்து வெண்மை நிற ஒளிவரும். கோள்களையும், வினைகளையும் வேரறுத்த, தேவ நிலை ஆன்மாக்கள் பொன்னிற ஒளியை வெளிப்படுத்தும் என்பதே உண்மை. இவற்றைச் சாதாரண மனிதர்களால் கண்டறிய இயலாது.
காரண உடல் என்பது காரண, காரியங்களுக்காக, நம்மை செயல்படத் தூண்டி, கர்ம வினைப் படி நம்மை வழிநடத்துவதாகும். காரண உடலே தூல உடலை செயல்படுத்துகிறது. அனைத்து வகைக் காரண காரியங்களுக்கும் காரணமாகிறது. இந்த காரண உடல் பற்றி மனிதன் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றாலும் இது பற்றி ஔரளவேனும் அவன் அறிந்திருக்கிறான் என்பது உண்மை.
ஆனால் சூட்சும உடலை ஒருவன் இந்தத் தூல, காரண உடல் நிலையைத் துறந்து அல்லது முற்றுமாக அவை பற்றி அறிந்த பின்னரே அறிய முடியும். இந்த சூட்சும சரீரத்தையும் துறப்பதே ஜீவன் முக்தி.
மேலும் இந்தத் தூல உடல் மூலம் தனது கர்மவினைகளைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் எஞ்சிய சூட்சும சரீரத்தால், சூட்சும உலகங்களில் சஞ்சரித்து பரிபக்குவ நிலை எய்திய பின்னரே ஜீவன் முக்தி எனப்படும் பிறவா நிலையை எய்த முடியும்.
விளக்கமாகச் சொல்லப் போனால், இந்த சூட்சும உடலே ஒருவனது அந்தராத்மா. அதற்கு எல்லாமும் தெரியும். இப்பிறப்பு, இதற்கு முற்பிறப்பு என அனைத்தையும் அறியும். ஆனால், சாதாரண நிலையில் மனிதனால் இது பற்றி எதுவும் அறிய இயலாது. அது இவனுள் மறைந்து, அனைத்தையும் ஔர் சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது. தூல மற்றும் காரண உடல்களின் செயல்பாட்டால் கர்மவினைகளுக்கும் காரணமாகிறது.
ஒருவன் பிரம்ம நிலையை அல்லது முற்றும் துறந்த ஞான நிலையை அடையும் பொழுது தனது சூட்சும உடலைத் தானே காண்கிறான். இதற்கு நமது யோக முறைகளும் பெருமளவு உதவுகின்றன. தியாச·பிகல் கூறும் ஏழு உலகங்களுக்கும், ஏழு அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மனிதருக்கும், யோக சாத்திரங்களின் ஏழு சக்கரங்களுக்கும் ஒரு விதமான தொடர்பு உள்ளது என்பதே உண்மை.
பொதுவாக தூல உடல் அனுபவம் என்பது நனவு நிலையில் புலன்கள் மற்றும் எண்ண ஔட்டத்தினால் ஏற்படுவது. ஆனால் சூட்சும உடல் அனுபவம் என்பது கனவா இல்லை நனவும் கனவுமற்ற விழிப்பு நிலையில் ஏற்படுகிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை. ஒருவிதமான குழப்பம் நிலவுவதாலும், ஆழ்மனம் அதனைக் கனவு என நினைப்பதாலும், அவற்றின் படிமங்கள் நினைவில் இருந்து புறமாக இருப்பதாலும் மனிதனால் இது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை.
Out of body experince பற்றிய ஒருவரின் அனுபவம்…
”நான் சிறு பெண்ணாயிருந்த போது (பதிமூன்று வயதிருக்கும்) ஒருவருட காலமாக, இரவு படுக்கச் சென்றவுடன், நான் உடலிலிருந்து வெளிப்படுவதாகத் தோன்றும். வெளிவந்தவுடன் வீட்டின் மேலும், பிறகு நகரத்தின் மேலும் மிக உயரத்தில் சென்று விடுவேன். அச்சமயங்களில் நான் ஒரு தூய பொன்னாடையை அணிந்தவளாகவும், மிக உயரமானவளாகவும் என்னைப் பார்ப்பேன். நான் உயரே போகப் போக, எனது ஆடையானது பெரிதாய் விரிந்து, வட்டமாகி என்னைச் சுற்றி விரிந்து, ஒரு கூரையைப் போல நகரைக் கவிந்து கொள்ளும். பிறகு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துயரமடைந்தோரும் எனப் பலரும் பல திசைகளிலிருந்தும் அந்த ஆடைகளின் எல்லைக்குள் வந்து, என்னிடம் தங்களது குறைகளை முறையிடுவதைக் கண்டேன். அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, அவ்வாடையானது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல், உயிர்ப்புடனும், துடிப்பனும் நீண்டு சாந்தி அளித்தது. அவர்களும் தங்கள் குறைகளும் துயரங்களும் நீங்கப் பெற்று, மனத் திருப்தியுடன் தத்தம் உடல்களுக்குத் திரும்புவதைக் கண்டேன்.”