Tuesday, May 27, 2014

தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு



பெரிய கோயில் என்று சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இதன் சிறப்புகளைப் பற்றி அறிவோம்.


சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட ராஜ ராஜ சோழன், அவருக்கு பிரமாண்டமாக கோயில் அமைக்க நினைத்தான். அதன்படி எழுந்ததுதான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயில் கட்டுவதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1004ல் கோயில் கட்டும்பணி ஆரம்பமா ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டடக்கலை முறைப்படி, ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல், தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.

தலைசிறந்த கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் தமிழகத்திலேயே மிக உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. இந்த கல்லை விமானத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் (50 கி.மீ.)வரை மணல் கொட்டி, பாலம் போல் அமைத்து, யானைகளைக் கொண்டு, பிரம்ம மந்திரக் கல்லை கட்டி இழுத்து கொண்டு போய் கோபுரத்தின் உச்சியில் வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். இக்கோயிலின் அமைப்பைப் பார்த்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுனர்கள் வியப்பின் உச்சிக்குச் செல்கின்றனர்.

லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு.

மூலவர் பிரகதீஸ்வரர் அம்மன் பெரியநாயகியுடன் அருள் செய்கிறார். சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 12.5அடி. சுற்றளவு 23 அடி. ஆவுடையார் 55 அடி சுற்றளவு. இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.

சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி. ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான்.

இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பின் தான் தொடங்குகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

பெரிய நந்தி: இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது.

மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. தஞ்சை பெயர்க்காரணம்: புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊரும் உருவானது

இராஜராஜசோழன் சமாதி

“தமிழக வரலாற்றில் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றில் பெருமையாக கருதப்படுபவர் மாமன்னன் இராஜராஜசோழன். கி.பி.985ல் முடிசூடி 1014-வரை பொற்கால ஆட்சி புரிந்த மாமன்னன் இராஜராஜசோழன் தனது வெற்றிகளாலும், இன்றும் உலகமே வியக்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் சிவன் கோவிலை கட்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளான்.

இப்பெரு மன்னனின் சமாதி, குடந்தை அருகே பட்டீஸ்வரம் அருகிலுள்ள உடையாளூர் கிராமத்தில் புதைந்திருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டி முடித்ததும், “சிவபாத சேகரன்” என்ற பட்டத்தையும் பெற்றான். ஆகவே, சிவபாத சேகரன் அதாவது இராஜராஜன் இறுதி காலத்தில் அமரரான இடம் என்பதை குறிக்கும் வகையில் இந்த ஊருக்கு “சிவபாத சேகர மங்கலம்” என்ற பெயர் இருந்திருக்கிறது.

மாமன்னன் இராஜராஜ சோழனின் உடல் உடையாளூரில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் இங்குள்ள “பால்குளத்தி அம்மன்” கோயிலின் முன்புறம் உள்ள கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டில் சிவபாத சேகர மங்கலத்தில் (இன்றைய உடையாளூர்) சிவபாத சேகர தேவர் (இராஜராஜ சோழர்) திருமாளிகை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இதைத்தவிர, 1927-28ல், அரசாங்கம் வெளியிட்ட கல்வெட்டு ஆய்வறிக்கையில் (Annual Report of Epigraphy 1927-28) இந்த இடத்தை “சமாதி கோவில்” அல்லது “பள்ளிப்படை” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உடையாளூர் செல்வ காளியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள வாழைத் தோப்பில் தான் சிறப்பு பெற்ற மாமன்னன் இராஜராஜ சோழனின் சமாதி புதைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமாதியின் மேல்புறமுள்ள பெரிய லிங்கமும் இந்த இடத்தில் புதைந்துள்ளது. . இதே இடத்தில் மாமன்னன் இராஜராஜ
சோழன் மணிமண்டபத்தையும் அமைத்து, அவரின் புகழ் உலகறியச் செய்ய வேண்டும்.


அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.



இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.


மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.


யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.


திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.


எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.


வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.


எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.


மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.


கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.


விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.


இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.






தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் 1,000வது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று, பெருவுடையாருக்கு 20 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தஞ்சை பெரிய கோவில் 1,000வது ஆண்டு நிறைவு விழா, 22ம் தேதி முதல் ஐந்து நாள் நடக்கிறது. இதற்காக தஞ்சை பெரிய கோவிலில் தினமும் மாலை 5.30 மணி முதல், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 22ம் தேதி முதல் நடந்து வருகின்றன. இதன்படி, நேற்று காலை 7.30 மணிக்கு, பெரிய கோவில் வளாகத்தில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு, திருவேற்காடு அய்யப்ப சுவாமிகள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் செல்வம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாஜி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து 8 மணி முதல் 10 மணி வரை பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு விபூதி, தைலக்காப்பு, திரவியப்பொடி, மஞ்சள் பொடி, நெல்லி முல்லிப்பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், பன்னீர், ஏகதாரை, சகஸ்ரதாரை, சிங்கேதனதாரை, வலம்புரி சங்கு, கலசாபிஷேகம், கங்கை ஜலம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருந்தீப வழிபாடு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று, திருமுறைகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதைத் தொடர்ந்து, ஓதுவார்களின் திருமுறை பண், மங்கல இசையுடன் தஞ்சையின் ராஜ வீதிகளில் திருமுறை திருவீதியுலா நடக்கிறது. இந்த உலாவை இன்று காலை 8 மணிக்கு, அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், அறநிலையத்துறை செயலர் சிவகுமார், ஆணையர் சம்பத் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை கோவிலில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு சிறப்பு பூ அலங்காரம் நடக்க உள்ளது.
தஞ்சை பெரிய கோவில் குறித்து மக்கள் அறியும் வகையில், தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய, "திருக்கோவில் நுட்பம்' என்ற நூல் வெளியிடப்படுகிறது.


சிவபாதசேகரனான ராஜராஜ சோழன், ஒப்பற்ற பெருங்கோவிலாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை எடுப்பித்து புகழ் பெற்றான். இக்கோவிலைத் தவிர, பல திருக்கோவில்களை அமைக்க இவன் பங்கு கொண்டதையும், சிறப்பு வழிபாட்டிற்காக தானம் அளித்ததை பற்றியும் ராஜராஜனின் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

திருவையாறு, திருவலஞ்சுழி, திருச்செங்காட்டாங்குடி, திருக்கடையூர், திருப்புகளூர், நாகப்பட்டினம், திருக்களர், திருக்காரவாசல், திருநெடுங்களம், திருமங்கலம், பிரம்மதேசம், எண்ணாயிரம், திருமுக்கூடல், சிவபுரம், அகரம், மரக்காணம், உலகாபுரம், திருமலை, மேல்பாடி போன்ற பல கோவில்களுக்கு ராஜராஜன் தானம் அளித்த செய்தியை அக்கோவில் கல்வெட்டுகள் அளிக்கும் குறிப்பினால் உணர முடிகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். இங்குள்ள கீழையூர் வீரட்டானம் திருக்கோவிலில் கருவறைச் சுவரில் காணப்படும் முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு மிகவும் வரலாற்று சிறப்புடையது. சோழர் அதிகாரியாகத் திகழ்ந்த வீதி விடங்கன் கம்பன் என்பவன் அளித்த கொடையை கல்வெட்டு குறிக்கிறது. அதை கூறும் பொழுது ராஜராஜ சோழனின் தாயார் வானவன் மாதேவியார் பற்றிச் சொல்ல வேண்டும்.

மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். "ராஜராஜன் இந்திரசமானன் ராஜசர்வக்ஞன் என்னும் புலியை பயந்த பொன்மான்' என்று அவரை புகழ்ந்து பேசுகிறது. பாட்டு வடிவில் இக்கல்வெட்டு அமைந்திருப்பதால் இதை, "திருக்கோவிலூர் பாட்டு' எனக் கொள்ளலாம். ராஜராஜ சோழன் தனது பட்டத்தரசி தந்திசக்தி விடங்கியான லோகமாதேவி, திருவையாறு கோவிலில் கட்டிய, "லோகமாதேவீச்சுரம்' என்ற கோவிலுக்கு பல தானங்களை அளித்துள்ளான். திண்டிவனம் அருகே அமைந்துள்ள உலகாபுரம், லோகமாதேவிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கும் ராஜராஜன் தானம் அளித்துள்ளான். இக்கோவிலும் பட்டத்தரசியின் பெயராலே வழங்கப்படுகிறது.இதேபோன்று ராஜராஜனின் மற்றொரு தேவியான சோழ மகாதேவி தஞ்சை பெரிய கோவிலுக்கு, ஆடவல்லான், உமா பரமேசுவரியார், இடப வாகன தேவர், கணபதி ஆகிய திருமேனிகளை செய்து அளித்தும், அதற்குரிய நகைகளை செய்தளித்தும் புகழ் பெற்றாள்.

இத்தேவியின் பெயராலே திருச்சி, திருவெறும்பூர் அருகே, "சோழ மாதேவி' என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கைலாச நாதர் கோவிலின் மீது ராஜராஜ சோழன் மிகுந்த ஈடுபாடு கொண்டு நந்தவனம் அமைக்கவும், இசைக் கலைஞர்களை கொண்டு ஐந்து வகையான இசைக் கருவிகளினால், "பஞ்ச மகாசப்தம்' என்ற இசை வழிபாட்டினை செய்ய தானம் அளித்துள்ளான்.கோவிலில் உமா பட்டாரகிக்கு அமுது படைக்கவும், இறைவனுக்கு, "மெய்க்காட்டு' என்ற வழிபாடு செய்யவும், அங்கிருந்த பெருமாள் கோவிலுக்கும் தானம் அளித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்பொழுது இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை போற்றிப் பராமரித்து வருகிறது.ராஜராஜன் பிறந்த நாளான, "ஐப்பசி சதய நாளை' எண்ணாயிரம் (விழுப்புரம் அருகில்), திருவையாறு, திருவெண்காடு, திருப்புகளூர், திருவிடந்தை, பாச்சூர் (கோபுரப்பட்டி), திருநந்திக்கரை போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற தானம் அளிக்கப்பட்ட செய்தியை அறிகிறோம். தஞ்சை பெரிய கோவிலில் சதயத் திருவிழா 12 நாட்கள் நடைபெற்றதையும் அறிய முடிகிறது.

ராஜராஜன் தன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகள் முழுவதையும் சீராக அளக்கச் செய்தான். இப்பணி ராஜராஜ மாராயன் என்பவன் தலைமையில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளில் இப்பணி முடிவடைந்தது. இதனால் ராஜராஜன், "உலகளந்தான்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினான். இதுபோன்று திருக்கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாப்பதிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினான். அரியலூர் அருகே உள்ள திருமழபாடி கோவிலில் ராஜராஜ சோழனின் 28வது ஆட்சி ஆண்டில் கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. சுவரில் இருந்த கல்வெட்டுகளை ஏட்டில் எழுதிக் கொண்டனர். பின்பு மீண்டும் அவைகள் விமானத்தில் பொறிக்கப்பட்டன என்ற செய்தியை அறிய முடிகிறது.ராஜராஜன் காலத்தில் பல திருக்கோவில்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

கோவில் வழிபாடு, கணக்குகள் ஆகியவை சரியாக நடைபெறுகின்றதா என்பதை கவனிக்க, "ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற' என்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அதை ஆய்வு செய்து, மேலும் பொருள் வேண்டியிருப்பின் அதையும் அளித்து கல்வெட்டாகப் பொறித்தனர்.திருக்கோவில்களை ராஜராஜன் எவ்வாறு போற்றி, வழிபாட்டினை தொடர்ந்து நடைபெற வழிவகை செய்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.மாமல்லபுரம் அருகே உள்ள மரக்காணம் பூமீசுவரர் கோவிலுக்கு, "ராஜராஜ பேரளம்' எனப்படும் உப்பளத்திலிருந்து வரும் வருவாயினைப் பெற உரிய ஆணையிட்டுள்ளான். இன்றும் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள் அதிகம் உள்ளன.சோழர் வரலாற்றில் முதன் முதலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெருமை உடைய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் ஆவான்.

ராஜராஜனின் பாண்டிய நாட்டு வெற்றி, புகழ் பெற்ற காந்தளூர் சாலை வெற்றிக்கு முன்னர் கிடைத்த வெற்றியாகும். பாண்டிய நாட்டை வென்றதின் அடையாளமாக, "பாண்டிய குலாசனி' எனச் சிறப்பாக அழைத்து கொண்டான்.எனினும், பகைமை பாராட்டாமல் பாண்டிய நாட்டு அரச மகளிரை மணந்து கொண்டான். இப்பகுதியில் ஆட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள், "சோழ, பாண்டியர்கள்' என அழைக்கப்பட்டனர். பாண்டிய மண்டலமானது ராஜராஜ மண்டலம், ராஜராஜ வளநாடு எனப் பெயர் மாற்றம் அடைந்தது.பேராற்றல் நிறைந்த படைப் பிரிவுகளை சேர்ந்த படை வீரர்கள் பாண்டிய நாட்டில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இப்பிரிவுக்கு, "மூன்று கைமாசேனை' என்பது பெயர். இவர்கள் ராஜராஜ சோழன் பாண்டிய நாட்டில் ஏற்படுத்திய வளமிக்க சதுர்வேதி மங்கலங்களையும் சமயச் சிறப்பு உடைய கோவில்களையும் காத்து நின்றதையும், அறப்பணிகளையும் செய்து பாண்டிய நாட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து ராஜராஜனின் நிர்வாகத்திற்கு துணை புரிந்தனர்.இத்தகைய, "மூன்று கைமாசேனை' படைப் பிரிவு இருந்த இடமாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருவாலீசுவரம் திருக்கோவில் விளங்குகிறது.கலையழகு மிக்க சிற்பங்களுடன், கலைப் பெட்டகமாக பசுமையான வயல்களுக்கு நடுவே கடனா ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டில் எடுக்கப் பெற்ற சோழ மன்னர்களின் கலை படைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இக்கோவில் அமைந்துள்ள பகுதி, "முள்ளிநாட்டு ராஜராஜ வளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' எனக் குறிப்பிடப்படுகிறது. இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் சிற்பக் களஞ்சியமாக திகழ்கிறது. பாண்டிய நாட்டு கோவில்களில் தேவகோட்டங்கள் இருக்காது. அதே முறையில் இங்கும் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இருதளம் உடைய விமானத்தில் சிவபெருமானின் கங்காதரர், ரிஷபாந்திகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், அர்த்தநாரீசுவரர், திரிபுராந்தகர், காலாந்திகர், லிங்கோத்பவர், கங்காளமூர்த்தி, கல்யாணசுந்தரர், கஜசம்கார மூர்த்தி போன்ற பல சிற்ப வடிவங்களை காணலாம். மரத்தில் செய்து வைத்தது போல நுண்ணிய வேலைப்பாடுடன் இக்கோவில் காணப்படுகிறது.

இக்கோவிலில் காணப்படும் வட்டெழுத்தில் உள்ள ராஜராஜன் கல்வெட்டால் இக்கோவில் ராஜராஜனின் அரிய கலைப்படைப்பு என அறிஞர்கள் கருதுகின்றனர். இக்கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையில் சீரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், பாண்டிய நாட்டில் திருநெல்வேலி, கங்கைகொண்டான், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், பிரம்மதேசம், ஆத்தூர் போன்ற கோவில்களில் ராஜராஜன் செய்த தானங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழனின் திருக்கோவில் தொண்டினை நிறைவுறுத்துவது போல தமிழகத்தில் உள்ள பல திருக்கோவில்கள் இன்றும் அவனது புகழை பறைசாற்றுகின்றன என்றால் மிகையில்லை!

சிறப்புமிக்க தஞ்சைத்தரணி: சோழநாடு தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்யப்பட்ட பகுதியாகும். தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். பெருகிவரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாகத் திகழ்ந்தது. இவ்வூர் பற்றிய மிக பழமையானகுறிப்புகள் திருச்சி மலைக்கோட்டை பல்லவமன்னன் சிம்ம விஷ்ணுவின்(கி.பி.555- 590) கல்வெட்டில்இடம் பெற்று உள்ளது. தஞ்சையில் பெரியகோயில் கட்டப்படுவதற்குமுன் "தஞ்சை தளிக்குளத்தார்கோயில்' இங்கு இருந்ததாகத் தெரிகிறது. தற்போதும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பெயராலேயே இவ்வூர் "தஞ்சாவூர்' என அழைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.


ராஜராஜனின் கலைக்கோயில்: உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும்வாரி வழங்கி வரும் தமிழகத்திலுள்ள தஞ்சை மண்டலத்தை கி.மு.,இரண்டாம் நூற்றாண்டிலிருந்துகி.பி., 13ம் நூற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சோழ அரச மரபினர் ஆட்சி செய்துவந்தனர். அவர்களின் முதல் 400 ஆண்டு கால ஆட்சிச் சிறப்பைச் சங்ககாலத் தமிழ்இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. காவிரியில் கல்லணை கட்டி, காடு திருத்தி, நாட்டை வளம்பெறச் செய்த கரிகாற் பெருவளத்தான் என்ற சங்க காலச் சோழ மன்னன் கி.பி., முதலாம் நூற்றாண்டில்ஆட்சி புரிந்தான். தொடர்ந்து சோழப் பரம்பரையின் புகழ் சிறிது குன்றி யிருந்தாலும், ஆட்சி தொடர்ந்துநடந்தது. கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச் சிற்றரசனிடம் போரிட்டு 90 விழுப்புண்களை பரகேசரி விஜயாலயச் சோழன் பெற்றான்.இவன் தான் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றி, தனது தலைநகராகக் கொண்டு, தஞ்சைச் சோழப் பரம்பரையைத் தோற்றுவித்தான். பிற்காலச் சோழமன்னர்களின் பரம்பரையில் தோன்றியவரே ராஜராஜ சோழன். இவர் சுந்தர சோழனுக்கும், வானவன் மாதே விக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவன் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் மேலும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றவன்.


பெரிய கோயில் கட்டும் எண்ணத்துக்கு அஸ்திவாரம்: காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்டகயிலாயநாதர் கோயில் ராஜராஜனின் மனதை மிகவும் கவர்ந்தது. அக்கோயிலை ""கச்சிப்பேட்டுப்பெரியதளி'' என்று போற்றி மகிழ்ந்தார். இக்கோயிலின் அமைப்பு அவருக்குள் உணர்ச்சி பெருக்கையும், பக்தியையும் ஏற்படுத்தியது. தானும் ஒரு சிவாலயத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், தஞ்சா வூரில் பெரியகோயில் திருப்பணியைத் தொடங்கினார். காஞ்சி கயிலாயநாதர் கோயிலைப்பார்த்ததன் விளைவே, தஞ்சைப் பெரிய கோயில் கட்டும் எண்ணத்துக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

பிரம்மாண்டமான சிவலிங்கம்: கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடிசுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில்தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாகஇரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகமஅடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள்நடைபெற்று வருகின்றன.

பெரிய லிங்கப் பிரதிஷ்டையின் போது ஏற்பட்ட பெரும் சிக்கல்: தஞ்சை பெரியகோயில்கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தைநிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களைஅழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழன் மனச்சோர்வடைந்தார். அப்போது, ""கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது,'' என்று அசரீரி வாக்குகேட்டது. உடனே மன்னர், "கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது,' எனகேட்டார். போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயில் வந்தடைந்தார். கருவூரார் போகரிடம், ""எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே!, அடியேனை அழைத்தது எதற்காக?'' என்று கேட்டார். போகர், "நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதைஉலகுக்கு அறிவிக்க இவ்வாறு செய்தேன்,'' என்றார். மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி லிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும்சிவசிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும்கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவருக்கு ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.

உயரமான கோபுரம்: பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரம். ராஜராஜன் கி.பி.,988 ம் ஆண்டு சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைப் போரில் வெற்றி பெற்றதைப்போற்றும் வகையில் இக்கோபுரத்திற்கு ""கேரளாந்தகன் வாயில் கோபுரம்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோபுரம் 90 அடி உயரமும் 54 அடி அகலத்தில் ஐந்து நிலையுடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிலைக்கால்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி நீளம், மூன்று அடி அகலம், 40 அடி உயரம்கொண்ட ஒரே கல்லால் ஆனவை. கோபுரத்தின் நாற்புறங்களிலும் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலச்சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிச் செல்லும், சிவகங்கைக் கோட்டைஉள்மதில், செவ்வப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கேரளாந்தகன் வாயில் கோபுரத்தில்காணப்படும் சுதைச் சிற்பங்களில் சோழர்காலச் சிற்பங்கள் சில உள்ளன. மற்ற சிற்பங்கள் பிற்காலநாயக்கர், மராட்டியர் மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை. இதில் மகாசதாசிவமூர்த்தி என்னும்சிற்பம் குறிப்பிடத்தக்கதாகும். ஐந்து தலைகள் பத்து கைகள் கொண்ட மூர்த்தியாக பத்மாசனத்தில்அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் இவர், சிவாம்சம் கொண்டவர். இச்சிற்பம் சோழர் கால சிற்பத்திறனுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

முதல் தங்ககோபுரம்: தட்சிணமேரு என்னும் தஞ்சை பெரிய கோயில் விமானம் முழுவதும் செப்புத்தகடுகளைப் போர்த்தி அதன் மேல் பொன் வேய்ந்தான் ராஜராஜன் என்று கல்வெட்டுச் செய்திகள்தெரிவிக்கின்றன. 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததை ஒட்டக்கூத்தர்தக்கயாகப்பரணியில் குறிப் பிட்டுள்ளார். தட்சிணமேருவான தஞ்சை ராஜராஜேஸ்வரத்தை எப்படிராஜராஜன் பொன் மயமாக அமைத்தானோ, அதுபோல, தில்லை நடராஜர் கோயில் விமானத்தைகுலோத்துங்கன் அமைத்தான் என்ற செய்தி சிதம்பரம் வரலாற்றில் இடம்பெற்று உள்ளது. பிற்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளில் இந்த விமானத்தில் வேய்ந்த பொன் முழுவதும்சூறையாடப்பட்டு விட்டது.

22 கிலோ தங்க வைர நகைகள்: தஞ்சை பெரிய கோயிலுக்கு 183 கிலோ தங்கப்பாத்திரங்கள், 22 கிலோதங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள், 65 செப்புத் திருமேனிகள், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலம் நெல் விளையக்கூடிய 44 கிராமங்கள், கோயிலின் 158 திருவிளக்குகள் நாள்தோறும்எரியும் வகையில் தினசரி 158 உழக்கு நெய் வழங்கும் வகையில் நான்காயிரம் பசுக்கள், நான்காயிரம்ஆடுகள் ஆகியவற்றை கொடையாக ராஜராஜசோழனும் மற்றவர்களும் வழங்கியுள்ளதாகக்கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.



ராஜராஜனை வணங்கிய அலுவலர்: ராஜராஜசோழன் காலத்தில் பெரிய கோயிலில் நிர்வாகஅலுவலராக இருந்தவர் தென்னவன் மூவேந்த வேளாளன். இந்தப் பணியை அக்காலத்தில் "ஸ்ரீகார்யம்' என்று கூறுவர். இவர் ராஜராஜசோழன் மற்றும் அரசி லோகமாதேவி ஆகியோருக்கு செப்புப்படிமங்கள்செய்து பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்தார். அந்தச் சிலைகளுக்கு தங்க ஆபரணங்களும்அளித்தார். மன்னனையே தன் தெய்வமாகக் கருதி விளக்கும் ஏற்றி வந்தார். அந்த படிமத்தின் முன்திருநீறு மடல் வைத்து வழிபட்டார். இச்சிலைகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சாவூரில்இருந்து குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆமதாபாத் கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில்வைக்கப்பட்டுள்ளது.
செப்புத்தகடு கொடிமரம்: நந்திமண்டபம் அருகில் மேற்குப் புறத்தில் செப்புத்தகட்டால் மூடப்பட்டகொடிமரம் உள்ளது. இம்மண்டபம் சிறந்த கலை வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. இது நாயக்கர்காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இரண்டாம் சரபோஜி மன்னர் இந்த கொடிமரத்தூணுக்கு கொறடு(ஒட்டுத்திண்ணை என்னும் பிடிமானம்) ஒன்றைப் புதிதாக அமைத்துள்ளார். அத்து டன் நந்திமண்டபத்தின் கிழக்கே ஒரு செங்கல் மேடை அமைத்து, அதில் சித்திரைத் திருவிழாவின் 9ம் நாள், "சரபேந்திர பூபால குறவஞ்சி' என்னும் நாடகம் நடக்கச் செய்துள்ளார். அதன் எதிரில் வட்டமானமேடை அமைத்து, அதில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்துள்ளார்.
மிக உயரமான மதிற்சுவர்: கோயிலை சுற்றி சுமார் 28 அடி உயரத்தில் அமைந்துள்ள மதில்ராஜராஜனின் தலைமை அமைச்சரான சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டுவெண்ணாட்டு அமன் குடியான கேரளாந்தகச்சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ணன் ராமன் என்னும்மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் மன்னனின் ஆணைப்படி கட்டப்பட்டது. மதிற்சுவர் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மதிற்சுவரின் வெளிப்புறத்தின் கீழ்பகுதியில் சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக 800 அடி நீளமும், தெற்கு வடக்காக 400 அடி அகலமும் கொண்டுள்ளன. கோயிலின் பிரகாரச்சுற்றில் கருங்கற்களினாலும், செங்கற்களினாலும் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி கி.பி., 1803ல், தளம் அமைத்தார்.
மிகப்பெரிய சண்டிகேஸ்வரர்: புகழ்மிக்க இப் பெரிய கோயிலில் எல்லாமே பெரியவை என்ற வகையில் விமானத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரர் சன்னதியும் மிகப்பெரிதாக உள்ளது. இந்த சன்னதியின் வெளிச்சுவர்களிலும், தூண்களிலும் சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
லிங்க வடிவில் நவக்கிரகங்கள்: பெரிய கோயிலின் மேல்புற வடபகுதியில் லிங்கவடிவில் நவக்கிரங்கள் உள்ளன. இவற்றை அடுத்து 108 லிங்கங்களும், அடுத்து வரிசையாக லிங்கங்களும் மன்னர் இரண்டாம் சரபோஜியால் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 252 லிங்கங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகையின் மேற்குப் புறத்தின் தென்பகுதியில் "பரிவார ஆலயத்து கணபதியார்' சன்னதி உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு ராஜராஜனும், மற்ற மன்னர்களும் அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளனர்.
தங்க மலர்: ராஜராஜ சோழன் வழிபாடு செய்துவந்த செப்புத் திருமேனிக்கு "தெட்சிணமேரு விடங்கரான ஆடவல்லார்' என்று பெயர். மேலை சாளுக்கிய மன்னர்களை வென்றபோது இந்த ஆடவல்லாரின் திருப்பாதத்தில் தங்கத்தாலான மலர்களை இட்டு பூஜை செய்து தன் நன்றியை தெரிவித்தான்.ராஜராஜன் உருவாக்கிய நந்தி எது?: நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசைநோக்கியபடி உள்ள நந்தியே ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதுவே முதலில் பெருவுடையாருக்கு எதிரில் இருந்தது. பின்னாளில் நாயக்கர்கள் மூலவருக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்தது. பிற்காலத்தில் திருச்சுற்று மாளிகைக்கு மாற்றப்பட்டது.
25 டன் எடையுள்ள நந்தி: தஞ்சாவூர் கோயில் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் எல்லோர் நினைவிலும் வரும். ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிகப் பெரிய நந்திகளுள் இதுவும் ஒன்றாகும். (திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்நந்தி தஞ்சாவூர் நந்தியை விடப் பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இதுதான்) திருச்சி அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 25 டன் எடை உடையது. 19 அரை அடி நீளம், எட்டேமுக்கால் அடி அகலம், 12 அடி உயரம் கொண்டது. விஜயநகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டதாகும். நந்தி, நந்தி மண்டபம் ஆகியவற்றை கி.பி., 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத் தூண்களில் உள்ளன. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில், மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.
சித்திரக்கூடம்: தஞ்சாவூர் கோயில் கருவறையை அடுத்துள்ள உட்பிகாரத்தில் 13 சித்திரக்கூட பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிக்கு அந்தராளம் என்று பெயர். இந்த ஓவியங்களின் மூலம் சோழர் கால மக்களின் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைமுறை, ஆடை ஆபரணங்கள், இசைக் கருவிகள், நாட்டியமுறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
தேவியருடன் ராஜராஜன்: பெரியகோயிலின் ஒன்பதாவது ஓவிய அறைப்பகுதியின் மேற்கு நோக்கிய சுவரில் சோழர்கால பாணியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சிறப்பானவை. ராஜராஜன் காலத்திய சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு நுழைவாயில்கள், முதலாம் பராந்த கனால் பொன்வேயப்பட்ட மண்டபத்தின் நடுவில் சிவனின் ஆனந்த தாண்டவம், காலருகில் ஒரு புறம் காளி, மறுபுறம் காரைக்கால் அம்மையார் காட்சியளிக்கின்றனர். இந்த தொகுப்பிற்கு இடப்புறம் எளிய அடியவரைப் போல மாமன்னன் ராஜராஜன் மீசை, தாடி யுடன், கூப்பிய கரங்களுடன் நடராஜரை வணங்குவது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அருகில் மாமன்னனின் தேவியரில் மூவர் மட்டும் நின்ற கோலத்தில் உள்ளனர். அருகில் மெய்க் காவலர்கள் நிற்கின்றனர்.
ராஜராஜனின் விட்டுக்கொடுக்கும் குணம்: ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி என்பதாகும். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் பாட்டி செம்பியன் மாதேவியார், சகோதரி குந்தவை ஆகியோரின் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டார். அவருடைய மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார். நாட்டுமக்கள் அனைவரும் இளையவன் அருள்மொழியே நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினர். ஆனால், ராஜராஜனின் சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனுக்கு, தானே சோழநாட்டின் மன்னராகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராஜராஜனும் அரியணையை விட்டுக்கொடுத்து அவரை மன்னனாக்கினார். மதுராந்தகச் சோழன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருடைய மறைவுக்குப்பின், தஞ்சைச் சோழர் வரலாற்றில் பொற்காலத்தைப் பதித்தான் ராஜராஜசோழன். கி.பி.,985ம் ஆண்டு தஞ்சைச் சோழ அரசுக் கட்டிலில் அமர்ந்த இவனுக்கு, பட்டம் சூட்டும் வரை அருள்மொழி என்ற பெயரே இருந்தது.
மாமன்னனின் மாபெரும் குடும்பம்: ராஜராஜனுக்கு 10 மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்திவிடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக இருந்தார். இவரைத் தவிர, சோழமாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன் மாதேவி, அபிமானவல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மாதேவி ஆகியோர் இருந்தனர். வானவன் மாதேவிக்குப் பிறந்த ஒரே பிள்ளையே புகழ்மிக்க ராஜேந்திரச் சோழன். இவனுக்கு ராஜராஜனால் இட்ட பெயர் மதுராந்தகன். இது ராஜராஜனின் சித்தப்பா நினைவாக வைக்கப்பட்டதாகும். மதுராந்தகனுக்கு இரு சகோதரிகள். மூத்தவள் மாதேவ அடிகள். இளையவள் குந்தவை. ராஜராஜன் தன்னை வளர்த்த பாட்டி செம்பியன் மாதேவியின் நினை வாக ஒரு மகளுக்கு மாதேவஅடிகள் என்றும், சகோதரி குந்தவையின் நினைவாக ஒரு மகளுக்கு குந்தவை என்றும் பெயரிட்டார். இதன்மூலம் அவருடைய பாசபந்தமும், நன்றியும் தெரிகிறது.
ராஜராஜ சோழனின் புனைப்பெயர்கள்: அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருண்மொழி, அழகிய சோழன், ரணமுக பீமன், ரவிகுல மாணிக்கம், ரவி வம்ச சிகாமணி, ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜராஜன், ராஜாச்ரையன், ராஜகேசரி வர்மன், ராஜ மார்த்தாண்டன், ராஜவிநோதன், ராஜேந்திர சிம்மன், உத்தம சோழன், உத்துங்கதுங்கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கீர்த்தி பராக்கிரமன், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாத சேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், சோழ நாராயணன், சோழேந்திர சிம்மன், திருமுறை கண்ட சோழன், தெலிங்க குலகாலன், தைலகுலகாலன், நிகரிலிச் சோழன், நித்திய வினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்ரமாபரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், க்ஷத்திரிய சிகாமணி. கல்வெட்டுகளில் இருந்து இந்தப் பெயர்களை அறிய முடிகிறது.
திருப்புகள் பாடிய அருணகிரியார்: தஞ்சைப்பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் முருகப் பெருமானுக்கு தனிசன்னதி கட்டவில்லை. அவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடும் அருணகிரிநாதர் ராஜராஜன் கட்டிய பெரியகோயிலைக் காணும் ஆவலில் வந்திருக்கிறார். தனிசன்னதி இல்லாததால் கோபுரத்தில் இருக்கும் முருகனையே ""தஞ்சை மாநகர் ராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே'' என்று பாடியுள்ளார். பிற்காலத்தில் முருகப்பெருமானுக்கு பெரியஅளவில் நாயக்க மன்னர்கள் சன்னதி அமைத்துள்ளனர்.
ராஜராஜன் திருவாயில்: கேரளாந்தகன் வாயிலை அடுத்து அமைந்துள்ளது ராஜராஜன் திருவாயில். இக்கோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இந்த வாயிலின் இருபுறத்திலும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன துவாரபாலகர் சிலைகளும், 40 அடி உயரமுள்ள இரண்டு ஒற்றைக்கல் நிலைக்கால்களும் அமைந்துள்ளன. துவாரபாலக சிற்பங்களின் கீழ்ப்பகுதியில் சிவபுராணக்கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. திரிபுர தகனம், சண்டீசர் கதை, மார்க்கண்டேயன் வரலாறு, சிவபார்வதி திருமணம், வள்ளி திருமணம், அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளல், மன்மதன் தகனம், கண்ணப்பர் வரலாறு ஆகிய கதைகள் இடம் பெற்றுள்ளன. கோபுர நுழைவுவாயிலின் இருபக்கங்களிலும் சிறிய விநாயகர் சன்னதிகளும், கோபுரத்தின் உட்புறம் தென்திசையில் நாகராஜர் சன்னதியும், வடதிசையில் இந்திரன் சன்னதியும் உள்ளன. திருச்சுற்று மாளிகை தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி 2ம் சரபோஜி மன்னரால் அமைக்கப்பட்டுள்ளது.
விக்கிரமச்சோழன் திருவாயில்: அர்த்த மண்டபத்தின் தெற்கு நுழைவு வாயில் ராஜேந்திரசோழனின் இயற்பெயரால் விக்கிரமச் சோழன் திருவாயில் என வழங்கப்படுகிறது. இவ்வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. வாயிலின் கிழக்கு புறத்தில் கஜலெட்சுமியும், மேற்கு புறத்தில் சூரிய மற்றும் விஷ்ணு அநுக்கிரக மூர்த்தி சிற்பங்களும் உள்ளன. இவ்வாயில் படிக்கட்டுகளின் வெளிப்புறங்களில் திருமால், துர்க்கை, திரிபுர அசுரர்களை வதம் செய்தல், சிவ பார்வதி திருமணம் ஆகிய புராணக் காட்சிகள் அழகிய படைப்பு சிற்பங்களாக உள்ளன.
கோயிலை கட்டியவர் யார்?: கல்வெட்டில் தஞ்சைப் பெரியகோயில் ""ராஜராஜீச்சரம்'' என்று குறிக்கப்படுகிறது. இலக்கணப்படி ராஜராஜேச்சரம் என்பது சரியானதாக இருந்தாலும், கல்வெட்டுகளில் ராஜராஜீச்சரம் என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. இக்கோயிலை உருவாக்கியவர், வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன். இவருடைய பணிக்கு உதவியாக மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்பவர்களும் குஞ்சரமல்லனுக்கு துணையாக கோயில் திருப்பணிகளைச் செய்தனர்.

2 comments:

  1. ராஜராஜ சோழன் இந்து மதத்திற்க்கு ஆற்றிய சமய பணிகள் அருமையிலும் அருமை.

    ReplyDelete