Saturday, May 17, 2014

பொற்கோயில் ரணகளமான சோகக் கதை...



பஞ்சாப் பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு முதலில் சீக்கியர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முகலாயர்கள் படையெடுப்பின் காரணமாக இந்து மதத்தின் மீது நேர்ந்த தாக்கங்களின் ஒரு விளைவு சீக்கிய மதம். 'இந்து என்று யாரும் இல்லை. முஸ்லிம் என்று யாருமில்லை. கடவுள் ஒருவரே’ என்று சொல்லி சீக்கிய மதத்தைத் துவக்கி வைத்தார் குருநானக். முகலாயர்கள் ஆட்சியில் நிறைய துன்புறுத்தப்பட்டது இந்து மதம். ஒளரங்கசீப் செய்த அக்கிரமங்களைப் பொறுக்க முடியாமல், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக ஏற்பட்ட இந்த மதத்தை, போர்க்குணம் கொண்ட அமைப்பாக மாற்றி அமைத்தார் பத்தாவது குரு கோவிந்த்சிங், அவருடைய நெருக்கமான ஐந்து சீடர்களை அழைத்தார். இரும்புப் பாத்திரத்தில் சர்க்கரைத் தண்ணீர் எடுத்து கத்தியால் ஒரு கலக்குக் கலக்கி, அவர்கள் தலையில் தெளித்தார். அந்தத் தண்ணீரை (அமிர்தம்) குடிக்கச் சொன்னார். அவர்கள் புனிதமடைந்தார்கள். இனிமேல் அவர்கள் பெயர்கள் 'சிங்’ (சிங்கம்) என்று முடியும். அவர்கள் தலையையோ, முகத்தையோ மழிக்க மாட்டார்கள். தலையில் ஒரு இரும்புச் சீப்பைச் சொருகிக் கொள்வார்கள். கையில் ஒரு இரும்பு வளை அணிவார்கள், இடுப்பில் எப்போதும் ஒரு சிறு கத்தி வைத்திருக்க வேண்டும்.

இது குரு கோவிந்த்சிங் இட்ட கட்டளை, எத்தனை கூட்டத்திலும் சீக்கியர்கள் தனித்துத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அவர் விதித்த அடையாளங்கள் இவை.

இந்த 'அடையாளத்திற்காக’த்தான் (Identity) சீக்கியர்கள் முதலில் போராட ஆரம்பித்தார்கள். நம்முடைய அரசியல் சட்டம் சீக்கியர்களைத் தனி மதமாகவே கண்டு கொள்ளவில்லை. இன்று வரைக்கும், 'இந்துத் திருமணச் சட்டம்’ தான் அவர்களுக்கும். 'இந்து சொத்து உரிமைச் சட்டம்’தான் அவர்களுக்கும்.



சீக்கியர்களையும் இந்துக்களாகவே கணக்கில் எடுத்துக் கொண்டதற்கு அரசியல் காரணங்கள் உண்டு. முஸ்லிம் லீக்கின் கோரிக்கைக்கு ஏற்ப பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுப்பது என்று தீர்மானம் ஆன சமயத்தில், சீக்கியர்கள் கர்தார் சிங் என்பவர் தலைமையில் 'சீக்கிஸ்தான்’ வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எழுப்பினார்கள். மவுண்ட்பேட்டன் தனது நாட்குறிப்பில் (மே ஐந்தாம் தேதி 1947) எழுதுகிறார்; 'சீக்கியர்கள், இந்துஸ்தானத்தோடு இருக்க வேண்டுமா அல்லது பாகிஸ்தானோடு இருக்க வேண்டுமா என்பதில் நான் தன்னிச்சையாக அவசரப்பட்டு முடிவு எடுத்து விடக்கூடாது என்று கேட்டுக் கொள்வதற்காக ஒரு பிரதிநிதிக் குழு இன்று என்னைச் சந்தித்தது’.

இந்த அபாயத்தை தவிர்க்கவேண்டும் என்பதற்காக படேலும் நேருவும் இந்திய அரசியல் சட்டத்தில் இந்துக்கள் கணக்கிலேயே சீக்கியர்களையும் சேர்த்துக் கொண்டார்கள்.

இதற்கு முன்பாகவே ஆரிய சமாஜம், சீக்கியர்களைத் 'தாய் மதத்திற்கு’ அழைத்துச் செல்வதற்காக ஓர் இயக்கத்தைத் துவக்கியது. இதற்குப் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. 'ஹம் ஹிந்து நஹி ஹை’ (நாம் இந்துக்கள் அல்ல) என்பது அந்த நேரத்தில் சீக்கியர்களிடையே பரபரப்பாக விற்கப்பட்ட புத்தகம். இதுவே பின்னால் கோஷமாயிற்று.

இப்படித் தங்களைத் தனி மதமாக அங்கீகரிக்காமல், இந்துக்களோடு இணைக்க முயற்சி நடந்ததில் சீக்கியர்களுக்கு வெகு கோபம். இந்த வெறுப்பை ஆதாரமாக வைத்து அரசியல் நடத்த வந்த கட்சிதான் அகாலிதளம்.

பெரும்பான்மையான சீக்கியர்கள் இருக்கிற மாநிலமாக பஞ்சாப் மாறினால்தான் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்ட அகாலிதனம் 'பஞ்சாபி சுபா’ என்ற கோரிக்கையை எழுப்பியது. பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியப் பகுதிகளை ஒரு மாநிலமாகவும், இந்துப் பகுதிகளைத் தனியாக ஹரியானா என்று மற்றொரு மாநிலமாகவும் பிரிக்க வேண்டும் என்பது கோரிக்கையின் சாரம்.

கடைசியில் பலத்த எதிர்ப்பிற்கு இடையே பஞ்சாபி சுபா ஏற்படுத்தப்பட்டது. அகாலிதளத்திற்கு வெற்றி. இதற்காகச் சிந்தப்பட்ட ரத்தத்தையும், செய்யப்பட்ட தியாகத்தையும் காண்பித்து அகாலிதளம் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.

மாநிலம் பிரிந்ததோடு பிரச்னை முடிந்து விடவில்லை. 'தலைநகர் எது?’ என்கிற பிரச்னை எழுந்தது. முதலில் லாகூர் பஞ்சாபின் தலைநகராக இருந்தது. அது பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. அதற்குப் பதிலாக சண்டிகர் என்னும் புது நகர் உருவாக்கப்பட்டது. மாநிலம் பிரிந்த பின்னர், ஹரியானா, 'சண்டிகரை எனக்குக் கொடு’ என்று கேட்டது.

'எனக்குத்தான்’ என்று பஞ்சாப் சொன்னது. 'ஆந்திரா - தமிழ்நாடு பிரிந்தபோது, சென்னை தமிழ்நாட்டிடம்தானே கொடுக்கப்பட்டது; மகாராஷ்டிரா - குஜராத் பிரிந்தபோது, பம்பாய் மகாராஷ்டிராவிடம்தானே தரப்பட்டது; புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம்தானே புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்?’ என்பது அகாலிகளின் கேள்வி! இரண்டு பேருக்குமே வேண்டாம் என்று மத்திய அரசு சண்டிகரை யூனியன் பிரதேசமாகத் தன் வசம் வைத்துக் கொண்டு இருக்கிறது. இதிலும் அகாலிகள் மனக் காயம் பட்டிருக்கிறார்கள். இவை தவிர, தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைகள். நதி நீர்ப் பங்கீடு தாவாக்கள். வாரணாசிக்கும் ஹரித்வாருக்கும் 'புனித நகரம்’ என்று தனி அந்தஸ்தை அளித்திருக்கும் மத்திய அரசு, அமிர்தசரஸுக்கு அதை அளிக்கவில்லை. பாகிஸ்தான் உள்பட எந்த எந்த வெளிநாட்டுக்காரர்களையெல்லாமோ ஏஷியன் கேம்ஸ் போது அனுமதித்தவர்கள் எங்களை டெல்லிக்குள்ளேயே நுழைய விடவில்லை... என்றெல்லாம் சின்னச் சின்னதாக நிறைய மனக் குறைகள்.

அகாலிதளத்திற்கு உள்ளே வேறு சில பிரச்னைகள். அவர்கள் நினைத்த மாதிரி, மாநிலம் பிரிந்தவுடன் சுலபமாகப் பதவிக்கு வர முடியவில்லை. மாநிலம் பிரிந்ததைத் தொடர்ந்து கட்சிப் பிளவுப்பட்டது. தி.மு.க. - அ.தி.மு.க. என்று பிரிந்ததைப் போல, ஆனால் இந்தப் பிரிவுக்குக் காரணம் ஜாதி. ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர்கள், ஜாட் அல்லாத சீக்கியர்கள் என்று இரண்டு பிரிவுகள் அகாலிகளுக்குள் இயங்கி வருகின்றன. ஜாட் அல்லாத சீக்கியர்கள், காங்கிரஸின் ஆதரவாளர்கள்.

சீக்கியர்களிடையே அகாலிகள், நிரங்காரிகள் என்று முக்கிய பிரிவுகள் உண்டு. நிரங்காரிகள் ரொம்ப 'மடி’ என்று தங்களைச் சொல்லிக் கொள்வார்கள். நிரங்காரிகள் வெள்ளைத் தலைப்பாகை அணிகிறார்கள் (அகாலிகள் நீலம், அல்லது மஞ்சள்). நிரங்காரிகள் கிட்டத்தட்ட இந்து மதத்தினரைப் போன்ற நடவடிக்கைகள் கொண்டவர்கள். சீக்கியர்களின் மொழியான குருமுகிக்குப் பதிலாக சமஸ்கிருதம், இந்தி பேசுகிறவர்கள். இந்துக்களும் வாழ்கிற பஞ்சாபில் இவர்கள் மெல்ல மெல்ல செல்வாக்குப் பெறத் துவங்கினார்கள். இது அகாலிகளுக்குத் தலைவேதனையாகியது. 'மதத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்புகள்’ என்று அவர்களை ஒழித்துக் கட்டத் தொடங்கினார்கள்.

அகாலிகளுக்கு இன்னொரு பிரச்னை முளைத்தது. பசுமைப் புரட்சி ஏற்படுத்திய செழுமை, அயல்நாட்டில் குடியேறியது - இவை அவர்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தின. நாகரிகம் காரணமாகப் பலர் தலைப்பாகை அணிவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டார்கள். இளைஞர்கள் பகிரங்கமாகப் புகை பிடிக்கத் துவங்கினார்கள். (புகை பிடிக்ககூடாது. மது அருந்தக்கூடாது. மாமிசம் தின்றலாகாது. முஸ்லிம் பெண்களுடன் உறவு கொள்ளக்கூடாது என்பது குரு கோவிந்தர் விதித்த கட்டளை) இந்த அத்துமீறல்களைச் செய்தவர்கள் அகாலிதளத்தின் தலைமைப் பீடத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அதற்கு நெருக்கமானவர்கள். ஒரு பக்கம் இவர்களை அனுமதித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் 'கோடாலிக் காம்புகளுடன் போராடுவது’ என்கிற இரட்டை நிலை அகாலிதளத்தின் நாணயத்தைச் சந்தேகத்திற்கிடமாக்கியது.

இந்த அத்துமீறலைக் கவனித்துக் கொண்டு வந்த முதியவர்கள் - மெல்ல மெல்ல தங்கள் மதம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தனர். மதத்தைக் காப்பாற்றுகிற விஷயத்தில் அகாலிதளம் என்ற அரசியல் கட்சியை முழுக்க நம்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டது. மதத்தைக் 'காப்பாற்ற’ தீவிரமாகப் போராடுகிற சாமியார்களைத் தலைவர்களாக ஏற்க சீக்கியர்களில் ஒரு பகுதியினர் தலைப்பட்டார்கள். பிந்தரன்வாலே ஆதரவு பெறத்துவங்கியது இந்தக் காரணத்தால்தான்.

பிந்தரன்வாலேயைச் சுலபமாகச் சீக்கிய கோமேனி என்று சொல்லலாம். பிந்தர் என்கிற சிறு கிராமத்தில் மத போதகராக வாழ்க்கையைத் துவக்கியவர் அவர் (அதனால்தான் பிந்தரன்வாலே) இயற்பெயர் - ஜர்னைல்சிங். மதப் பிரசாரம் செய்கிறவர் என்பதால், மத நூல்களை ஆழ்ந்து கற்றவர். நிரங்காரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டவர். 1978-ல் அகாலிதளம் ஆட்சியில் இருந்தது. அப்போது 'வைசாகி தினம்’ என்ற புது வருட நாளன்று, அமிர்தசரஸில், நிரங்காரிகளுக்கும் அகாலிகளுக்கும் மோதல் நிகழ்ந்தது. நகரில் நடந்து கொண்டிருந்த நிரங்காரிகளின் கூட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பிந்தரன்வாலே கோரினார். அகாலிதள அரசு தயங்கியது. தானே 'எதிரிகள்’ மீது படையெடுத்தார். இவருடைய ஆட்களுக்கு நிறைய காயம். ஆனால், இவருக்குக் கிடைத்த புகழ் பெரிய லாபம். பொற்கோயில், முன்பு பரம்பரை டிரஸ்டிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது ஒரு கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது (சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி) இந்த கமிட்டியின் உறுப்பினர்கள், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1980-ல் நடந்த தேர்தலில், 140 இடங்களில் 136 இடங்களை அகாலிதளம் கைப்பற்றியது. மற்ற நான்கில் ஒரு இடத்தைப் பிந்தரன்வாலே பிடித்தார். அவர் அகாலிதள உறுப்பினர் அல்ல. ஆனாலும், ஜைல்சிங், சஞ்சய் காந்தி உதவியுடன் இந்த இடத்தைப் பிடித்தார். அகாலிதளத்தைப் பலவீனப்படுத்துவதற்காக அவர்கள் நிறுத்திய வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர் இவர் ஒருவர் மட்டும்தான்!

ஆனால், இந்த ஒருவர் படுத்தியபாடு... இவர் அகாலிதளத்தின் தலைவர்கள் கண்ணில் கையை விட்டு ஆட்டிய கதைகள் ஏராளம். அட்வால் என்ற டி.ஐ.ஜி பொற்கோயில் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அகாலிதளத் தலைவர் லோங்கோவால் வருத்தம் தெரிவித்தபோது, அதை வெளிப்படையாகக் கண்டித்தார். 'காலிஸ்தான்’ என்று தனி தேசம் கோரும் பிரிவினைவாதிகளுக்குப் பொற்கோயிலில் அடைக்கலம் தர அகாலிதளம் மறுத்தபோது, ''சீக்கியனாகப் பிறந்த எவனுக்கும் பொற்கோயிலில் தங்க உரிமை உண்டு. இதைத் தடுக்க நீங்கள் யார்?'' - சண்டையிட்டார். பொற்கோயில் வளாகத்தில் கோயில் பகுதியான அகாலிதளத்திற்குள் யாரும் குடி போகக்கூடாது என்ற லோங்கோவாலின் எதிர்ப்பையும் மீறி ஆயுதங்களுடன் அங்கே தங்கியிருந்தார். கடைசி நாட்களில் அகாலிதளத்திற்குத் தன் ஆதரவை விலக்கிக் கொண்டதாக அறிவித்தார். அகாலித் தலைவர் லோங்கோவால் சாதாரணமாக, மத வழக்கப்படி ஒரு சிறு கத்தி (கிர்பான்) மட்டும் அணிந்திருப்பார். பிந்தரன்வாலே, எப்போதும் துப்பாக்கி ரவைகள் கொண்ட பெல்ட் அணிந்து, ரிவால்வார் வைத்திருப்பது வழக்கம்! தனியாக வெளியிடங்களுக்குச் செல்வது கிடையாது. எப்போதும் லைட் மெஷின் கன் வைத்திருக்கும் இளைஞர் படையின் பாதுகாப்புடன் தான் செல்வது வழக்கம். லோங்கோவால் கோஷ்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிந்தரன்வாலேயை ''கோழை!'' என்று பகிரங்கமாகவே சாடியது உண்டு. பேச்சு வார்த்தைகள் மூலம் முடிந்திருக்கக் கூடிய பிரச்னைகளைப் பூதாகரமாக ஆக்கியதில் இவரது 'பங்கு’ கணிசமானது.

பிரச்னைகளை வளர்த்ததில் இந்திரா காந்திக்கும் முக்கிய பங்கு உண்டு. அகாலிகளைத் தனி மதமாக அங்கீகரிப்பது, சண்டிகரைப் பஞ்சாபிற்குக் கொடுப்பது போன்ற நியாயமான சிறு விஷயங்களில் முதலிலேயே விட்டுக் கொடுத்து, பிரச்னையின் வேகத்தை மட்டுப் படுத்தி இருக்கலாம். இது அகாலிதளத்தைப் பலப்படுத்திவிடும் என்கிற அரசியல் காரணத்திற்காகப் பிடிவாதமாக இருந்தார் அவர். நதி நீர்ப் பங்கீடு காரணமாக, எமர்ஜென்ஸியின்போது, உருவாக்கப்பட்ட ஏற்பாட்டை அகாலிதளம் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், அதை சுப்ரீம் கோர்ட் விசாரித்துத் தீர்ப்புச் சொன்னால் அதற்குக் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டிருந்தார்கள். அதன் பேரில் ஜனதா அரசு அந்த ஏற்பாட்டை சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பியிருந்தது. 1980-ல் மறுபடி பதவிக்கு வந்ததும் இதை விலக்கிக் கொண்டு விட்டார் இந்திராகாந்தி.

அண்மைக் காலத்தில் கட்டுக்கடங்காமல் போய்விட்ட அகாலி தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க இந்திரா காந்தி எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் 'துணிச்சலான’ ஒன்றுதான். இந்த விஷயத்தில் நாடெங்கும் அவருக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால், சீக்கியர்கள் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நடவடிக்கை.

ராணுவம் நுழைந்த நிகழ்ச்சி பெரிதும் பாதித்திருக்கிறது. இந்தப் புண் புரையோடி இன்னும் பத்து வருஷத்தில் பெரிதாக வெடிக்கக் கூடும்.

பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததன் விளைவுகள் நாளை என்னவாக இருக்கும்? காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியனும் பஞ்சாபைக் கவலையோடும் கலக்கத்தோடும் கவனித்துக் கொண்டிருக்கிறான்...

    லோங்கோவால் தலைமையில் அகாலிக் குழு இந்திரா காந்தியைச் சந்திக்க வந்தபோது (அக்டோபர் 16, 1981) அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இந்திரா காந்தி. அகாலி குழு நுழைந்தவுடன் சுத்தமான பஞ்சாபியில், ''என்ன சாப்பிடுகிறீர்கள் சாமி?'' (சந்த்ஜி, துசி கி பியோகே) என்று கேட்டார். காபி, டீயில் இருந்து கரும்புச் சாறுவரை பதினோரு ஐட்டங்கள் பட்டியல் போடப்பட்டது. (பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்) அகாலிகளுடைய கோரிக்கைகள் மொத்தம் நாற்பத்தைந்து! அமிர்தசரஸிற்கு வரும் ரயிலுக்கு 'கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பது அதில் மிகச் சாதாரணமான கோரிக்கை. மாநிலத்திற்கு அதிக அதிகாரம் தர வேண்டும் என்ற 'அனந்தப்பூர் தீர்மான’த்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.

'அனந்தப்பூர் தீர்மானம் என்பது என்ன?

1973-ல் அனந்தபூர் குருத்துவாராவில் அகாலிதளம் கூடி நிறைவேற்றிய தீர்மானம் அது. அதன்படி, 'பஞ்சாபி சுபா மூலம் சீக்கியர்களுக்குக் கிடைக்க வேண்டிய 'முழுதும்’ கிடைக்கவில்லை. அதனால் ராணுவம், கரன்சி நோட்டு அச்சடித்தல், செய்தித் தொடர்பு, ரயில் ஆகியவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டு, மற்றவற்றை மாநிலத்திடம் 'ஒப்படைத்து’விட வேண்டும்.

இதைவிட ஒரு படி மேலே போய் 1982-ல் காலிஸ்தானைக் கேட்க ஆரம்பித்தார்கள் அகாலிகள். காலிஸ்தான் என்பது தனி நாடு. தனிக் கொடி.. சீக்கிய மதம் மட்டும். கிரந்த சாகிப்பில் சொல்லப்பட்டிருக்கும் சமத்துவம் அரசியல் கொள்கை. நடுநிலைமை வெளிநாட்டுக் கொள்கை. ''காலிஸ்தான் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று தனிப்பட்ட பேட்டிகளில் லோங்கோவால் சொல்கிறார். ''தைரியம் இருந்தால் வெளியில் வந்து சொல்லட்டும்'' என்கின்றனர் தீவிரவாதிகள். ''நாங்கள் கேட்கவில்லை. கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம்'' என்றார் பிந்தரன்வாலே. அடைந்தால் காலிஸ்தான். இல்லையேல் சுடுகாடு’ என்கிற தீவிரவாதிகள், தனி பாஸ்போர்ட், ஸ்டாம்ப், 'அரசியல் சட்டம்’ இவற்றோடு இப்போதும் கனடாவில் இயங்கி வருகின்றனர்.

எச்சில் தட்டு கழுவிய மகாராஜா!

பொற்கோயில் வளாகம் என்பது மூன்று பகுதிகள் கொண்டது. நட்ட நடுவில் ஒரு பெரிய குளம். குளத்தின் நடுவில்தான் பொற்கோயில் அமைந்திருக்கிறது. இதன் பொற்கூரையை அமைத்துக் கொடுத்தவர் மகாராஜா ரஞ்சித்சிங். நடுவில் சில காலம் முஸ்லிம்கள் வசம் சிக்கியிருந்த கோயிலை மீட்டுக் கொடுத்தவரும் அவர்தான். கோயிலுக்குப் போகிற நுழைவாசலில் அற்புதமான பொன் வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கதவு இருக்கிறது. இது குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலைச் சேர்ந்தது. கஜினி முகமது கொள்ளையடித்துக் கொண்டு போன இக் கதவை ஆஃப்கானிஸ்தான் வரை போய் ரஞ்சித் சிங் மீட்டுக் கொண்டு வந்தார். ஆனால், சோமநாதர் கோயில் பூசாரிகளோ, கதவு தீட்டுப் பட்டுவிட்டது என்று சொல்லி தொடக்கூட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்! பின் இந்தத் தங்கக் கதவைப் பொற்கோயிலில் பொருத்தினார் ரஞ்சித்சிங்.

பொற்கோயிலுக்கு நேர் பின்னே, குளத்தின் ஒரு கரையில் இருப்பது அகால் தக்த். இதுதான் சீக்கிய மதத்தின் தலைமைப் பீடம். அவர்களுடைய வேதப் புத்தகமான கிரந்த்த சாகிப் இதில்தான் ஒரு பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. குரு கோவிந்த்சிங்கின் கத்திகள் இங்குதான் இருக்கின்றன. முகலாய மன்னர்கள் சீக்கியர்களைக் கொடுமைப்படுத்தியதைச் சித்திரிக்கும் கொடூரமான ஆயில் பெயிண்டிங்குகள் காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு, ஒவ்வொரு தலைமுறைக்கும் போராட்ட உணர்வு ஊட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

அகால் தக்தின் அதிகாரங்கள் கடுமையானவை. இதன் கட்டளைகளை எந்தச் சீக்கியரும் மீற முடியாது. பொற்கோயிலைக் கட்டிக் கொடுத்த மகாராஜா ரஞ்சித்சிங்கேகூட இதற்குப் பணிந்து போக நேர்ந்தது. ஒரு முறை அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, பக்கத்தில் இருக்கும் இலவசச் சத்திரத்தில் எச்சல் தட்டு கழுவுவது. (பல நூற்றான்டுகள் கழித்து இதே தண்டனை, அகாலி தளத்தின் மற்றொரு பெரிய தலைவரான மாஸ்டர் தாராசிங்கிற்கு அளிக்கப்பட்டது)

கோயிலின் நேர் எதிரே, குளத்தின் மற்றொரு கரையில், குருநானக் நிவாஸ், குருராம்தாஸ் நிவாஸ் என்ற தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இதற்குப் பக்கத்தில் மூன்று மாடிகள் கொண்ட இலவசச் சத்திரம் இருக்கிறது. சாப்பாடு ஃப்ரீ. இதன் மூன்றாவது மாடியில்தான் பிந்தரன்வாலே தினமும் தனது 'மதப் பேருரைகளை’ நிகழ்த்துவது வழக்கம்.

பொற்கோயிலுக்குள் நுழைகிறவர்கள் எவரும் தங்கள் தலையைக் குறைந்தபட்சம் ஒரு கர்ச்சீப்பாவது கொண்டு மூடி இருக்க வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட எதுவும் அணிந்திருக்கக்கூடாது (பெல்ட், காமிரா உரை போன்றவை). புகையிலைப் பொருட்கள் வைத்திருக்கக்கூடாது. ஆனால், உள்ளே எந்த மதத்தினரும் தாராளமாகப் போய் வரலாம்.

இதுவரை ராணுவமோ, போலீசோ பொற்கோயிலுக்குள் நுழைந்ததில்லை. 1966-ல் ஒரு முறை, பஞ்சாபி சுபா கிளர்ச்சியின் போது போலீஸ் நுழைய முயற்சித்தது. அப்போது கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு, அதன் பின் நுழைய முயற்சிகூட நடக்கவில்லை. எமர்ஜென்ஸியின் போது ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்திய கட்சி அகாலிதளம் ஒன்றுதான்! தி.மு.க., ஜனசங், ஆர். எஸ். எஸ். போன்ற எல்லா எதிர்க்கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் மிசாவில் கைது செய்யப்பட்ட அந்த நேரத்தில், அகாலிதளத்தை நெருங்க முடியவில்லை. காரணம் - அவர்கள் பொற்கோயிலுக்குள் தங்கி இருந்ததுதான். அகாலி தலைவர்கள் மட்டுமல்ல, இன்றைய பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர்கூட அப்போது அங்கே தங்கியிருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு!

பொற்கோயில் தாக்குதல்...

தீவிரவாதிகளை அடக்க பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்யப்பட்ட பிறகு 'தாக்குதல்’ எப்படி நடத்த வேண்டும் என்று மிகுந்த கவனத்துடன் திட்டம் தீட்ட வேண்டியிருந்தது. அரைகுறைத் தாக்குதல் நாடு முழுவதும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கவலைதான் காரணம்.

ராணுவத்தை இயக்கும் பொறுப்பு ஆறு கமாண்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களில் இருவர் சீக்கியர்கள். தலைநகரிலிருந்து பிந்தரன்வாலே கோஷ்டியை நேரடியாகச் சமாளிக்க கொரில்லாச் சண்டையில் தேர்ச்சி பெற்ற 500 ராணுவ வீரர்கள் ஸ்பெஷலாக விமானத்தில் வந்து இறங்கினர். 'டாங்க்’ குகளும்.. மெஷின் 'கன்’கள் பொருத்தப்பட்ட ஜீப்புகளும் பொற்கோயிலை நோக்கி நகர ஆரம்பித்தன. 5,000 வீரர்கள் பொற்கோயில் வளாகத்தைச் சூழ்ந்து கொண்டனர். கோயிலுக்குள்ளேயிருந்து வெளியே தப்பிக்கும் வழிகளெல்லாம் அடைக்கப்பட்டன. இன்னொரு 5,000 பேர் அடங்கிய படை அமிர்தரஸில் ஊரடங்குச் சட்டத்தை கச்சிதமாக நிலை நாட்டியது. கோயிலுக்குள் தண்ணீர் சப்ளை, மின் சப்ளை எல்லாம் துண்டிக்கப்பட்டன. ராணுவ வீரர்கள் தயாரானார்கள்.



அதே நேரத்தில்...

கோயிலின் மணிக் கூண்டுகள் மீதும், 'வாட்டர் டாங்க்’குகள் மீதும் தீவிரவாதிகள் மெஷின் துப்பாக்கிகளுடன் நின்று தாக்குதலுக்குத் தயாரானார்கள். இதற்குள் டெல்லியிலிருந்து பிரதமர் 'புனித நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் ஹர்மந்திர் ஸாகிப் மீது ஒரு துப்பாக்கி ரவை கூடப் படக்கூடாது’ என்று ராணுவ தலைமையதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தார். இந்தச் செய்தி ராணு வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

விடியற்காலை... இருள் அகலவில்லை. ஒலிபெருக்கிகள் மூலம் கமாண்டர்கள் 'தயவுசெய்து சரணடைந்து விடுங்கள். ரத்தம் சிந்த வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிணங்கி வெள்ளைக் கொடிகளுடன் நூற்றுக்கணக்கான அகாலிகள் வெளியே வந்தார்கள். இவர்களில் லோங்கோவாலும் ஒருவர், பிந்தரன்வாலேயும், அவரைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் துப்பாக்கியை உயர்த்தி போருக்குத் தயாரானார்கள்.

(ராணுவத்துக்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரான ஜெனரல் கே. சுந்தர்ஜி 'எங்களுக்கு கோபமே வரவில்லை. மாறாக மிகுந்த வருத்தத்துடன்தான் கோயிலுக்குள் நுழைந்தோம். உள்ளே காலடி எடுத்து வைக்கும்போது எங்கள் உதடுகள் ஆண்டவன் பெயரைத்தான் முணுமுணுத்தன...'' என்று பிற்பாடு குறிப்பிட்டார்.) ஏரிக்கு நடுவில் பொற்கோயில் இருப்பதால் அங்கே செல்ல பாலம் போன்ற ஒரு நீண்ட வழி என்றுதான் உண்டு. கோயிலைச் சுற்றியுள்ள மாடங்களிலிருந்து தீவிரவாதிகளின் துப்பாக்கிகள் குறி பார்த்துக் கொண்டிருந்த நிலை. கீழேயோ ஒதுங்குவதற்கு இடமில்லை. உள்ளே நுழைந்த உடனேயே 15 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு இரையானார்கள். ''நிறைய வீரர்களை பலி கொடுக்க வேண்டியிருக்குமோ...?!’ என்று ராணுவத்தினரிடையே ஒரு லேசான தயக்கம்.

இதற்குள் ஒரு வீரர் தவழ்ந்தவாறு பாலத்தின் வழியாக நெருங்கி தீவிரவாதிகள் மீது பாய்ந்தார். பிந்தரன்வாலேயின் சகாக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். அந்த இளம் வீரரின் உடல் முழுவதும் 'டைனமைட்’டுகளை வைத்துக் கயிற்றால் கட்டி பாலத்தின் வழியாகத் திருப்பி அனுப்பி விட்டு ஃப்யூஸை அழுத்த ராணுவ வீரர்களின் கண்ணெதிரே அவர் கைவேறு, தலை வேறாக சுக்கல் சுக்கலாகப் போனார்.

இந்தப் பயங்கரத்தைக் கண்டு திகைத்துப் போன ராணுவம் மறுவிநாடி முழு வேகத்தில் இயங்கியது. பிந்தரன்வாலே ஒளிந்திருந்த அகாலி தக்த் கட்டடத்தை ஏழு டாங்க்குகள் சூழ்ந்து கொண்டு தாக்கின. சில நிமிடங்களில் தீவிரவாதிகளில் எதிர்ப்பு பொடிப் பொடியானது.

அகாலி தக்த் கட்டத்துக்குள் கமாண்டர்கள் நுழைந்தனர். உள்ளே 'பேஸ்மெண்ட்’டில் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிந்தரன்வாலேயின் உடல் கிடைத்தது. அருகிலேயே அவரது வலதுகரமாக விளங்கிய அம்ரித் சிங்... காலில் ஒருகுண்டு.’ தலையில் ஒரு குண்டு... விழுந்து கிடந்தார். வெகு அருகிலிருந்து துப்பாக்கி வெடித்திருக்க வேண்டும். இருவரும் தற்கொலை உடன்படிக்கை செய்து கொண்டிருக்கலாம். அம்ரித் சிங், பிந்தரன்வாலேயைக் கொன்றுவிட்டு பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

இதெல்லாம் ஒரு யூகம்தான்..!

சூரியன் லேசாகத் தலையைக் காட்ட, பொழுது புலரத் தொடங்கியது...

No comments:

Post a Comment