Sunday, May 11, 2014

வழிகாட்டும் சுவாமிஜி!



சுவாமி விவேகானந்தர் 150


சுவாமி கௌதமானந்தர் தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை.


ஆதி காலத்திலிருந்தே மனிதன் தனது வாழ்க்கையில் தனக்கான இலக்குகளை அடைவதற்காக இயற்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டுதான் இருக்கிறான். மனிதனுடைய அந்த இலக்குகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று புற வாழ்க்கைக்கான இலக்கு; மற்றது அகம் சார்ந்த இலக்கு.


புறவாழ்க்கைக்கான இலக்கைக் குறிக்கோளாகக் கொண்டு அமையும் போராட்டம் மற்றும் தேடலினால், அவனுடைய உலகாயத வாழ்க்கைக்கான தேவைகளை அவன் அடைய முடிகிறது. கற்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலான புறவாழ்க்கை சார்ந்த மனிதனின் இத்தகைய போராட்டங்களும் தேடல்களுமே, நாகரிகம் மற்றும் அறிவியல் சாதனை உள்ளிட்ட பல இலக்குகளை அவன் அடையச் செய்திருக்கிறது.


அகம் சார்ந்த மனிதனின் தேடலானது உணர்வுகள், சிந்தனை, புத்திக்கூர்மை, மனவெழுச்சி, மன உறுதி, ஒழுக்கம், தெய்விகத் தன்மை போன்றவற்றை அடைவதற்கான வழியை அமைத்துக் கொடுக்கிறது. இந்த அகம் சார்ந்த தேடலின் விளைவாக மனிதன் அடையக்கூடிய அம்சங்களின் ஒருங்கிணைந்த வடிவமே பண்பாடு - கலாசாரம் என்பதாகும்.




நாகரிகமா, கலாசாரமா... எது சிறந்தது?


ஒரு தேசத்தின் தனி மனித வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் இரண்டும் சிறப்பாக அமைய வேண்டுமானால், இந்த இரண்டு நிலைகளிலும் அவனுடைய தேடலானது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். நாகரிகமானது மேலே தெரியும் செடி என்றால், பண்பாடானது அதன் ஆழத்தில் இருக்கும் - அந்தச் செடிக்கு உயிர்ச் சக்தி கொடுக்கும் வேர்களைப் போன்றது. பெரும்பாலான மனிதர்கள் நாகரிகம் என்பதையே பண்பாடு, கலாசாரம் என்று தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.

அதனாலேயேதான் சுவாமிஜி (சுவாமி விவேகானந்தர்), நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்குமான வேறுபாட்டைப் பற்றிக் குறிப் பிடுகையில், 'கலாசாரம் என்பதுதான் எத்தனை எதிர்ப்புகள் வந்தா லும் எதிர்த்து எக்காலத்திலும் நிலைபெற்றிருக்கக்கூடியதே தவிர, நாகரிகம் அல்ல!’ என்று திருத்தமாகக் கூறியிருக்கிறார்.


'கிரேக்கம், ரோம் போன்ற நாடுகள் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தன. எனினும், அந்த நாடுகள் பெர்ஷியா மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளிடம் தோல்வியையே சந்தித்தன. காரணம், நாகரிக வளர்ச்சியில் கிரேக்கம், ரோம் நாடுகளைவிட பெர்சியா, மங்கோலிய நாடுகள் பின்தங்கியிருந்தாலும், பண்பாடு மற்றும் கலாசாரத்தில் அவற்றைவிட சில படிகள் உயர்ந்திருந்ததே ஆகும்’ என்று சுவாமிஜி உதாரணமும் தந்திருக்கிறார்.


நம் தேசத்தின் உயிர்ச் சக்தி!இந்தியாவைப் பொறுத்தவரை, பல தாக்குதல்களை எதிர்கொண்ட நிலையிலும் இந்தத் தேசம் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம், இந்தியாவின் உயிர்ச் சக்தி ஆன்மிகத்திலும், ஆன்மிக அடிப்படையில் அமைந்த கலாசாரத்திலும் உறைந்திருப்பதே ஆகும். ஆன்மிகத்தை அடித்தள மாகக் கொண்ட அந்தக் கலாசார மானது வேதாந்த சமயத்தின் அடிப்படையில் தோன்றியதாகும்.







இந்தியாவின் வேதாந்த தத்துவமானது, ஒவ்வொரு மனிதனுக்குள் மட்டுமல்லாது, சகல ஜீவன்களிலும் தெய்விகத் தன்மை இருப்பதாக நம்புகிறது. வேதாந்த சமயம்தான் மற்ற அனைத்து சமயங்களையும் புறக்கணிக்காமல் அரவணைத்துச் செல்லக்கூடியதாகத் திகழ்கிறது. 'ஏகம் சத் விப்ர: பஹுதா வதந்தி’ - அதாவது 'பரம்பொருள் ஒன்றுதான்; ஆனால், ஞானிகள் அதைப் பல பெயர்களில் அழைக்கிறார்கள்’ என்கின்றன வேதங்கள். 'வேதாந்த சமயம் போதிக்கும் அன்பு, மனிதநேயம், உதவும் மனப்பான்மை போன்ற வற்றை உலக மக்கள் பெற்றிருந்தால், சமயம் சார்ந்த சச்சரவுகளுக்கு இடமில்லாமல் போவதுடன், உலக மக்களிடையே சகோதரத்துவம் நிலைத்திருக்கும்’ என்பதே சுவாமிஜியின் முதன்மையான உபதேசமாகும்.


உலகுக்கு இன்றைய தேவை...


வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி நிலையிலிருக்கும் நாடுகளில் உள்ள மக்களின் தற்போதைய அத்தியாவசியமான தேடல் எது என்பதை சுவாமிஜி அழகாகக் கூறுகிறார்... 'பரஸ்பர அன்பு, இரக்கம், இணைந்து செயல்படுதல் ஆகிய மூன்றும்தான் இன்றைய உலக மக்களின் தேவைகள். இவையே ஒரு நாட்டை அமைதியுடனும் செழிப்புடனும் இருக்க உதவுகின்றன.’


சுவாமிஜி கொண்டிருந்த ஒரே லட்சியம், உலகம் முழுவதும் வேதாந்தத்தை உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே! சுவாமிஜி வேதாந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம்தான் என்ன? வேதாந்த சமயம்தான் மிகுந்த விவேகம் கொண்டதாகவும், பிற சமயங்களின் தத்துவங் களுக்கும்கூட உண்மையான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் திகழ்கிறது என்பதை சுவாமி விவேகானந்தர் பரிபூரணமாக உணர்ந்து அறிந்திருந்தார்.


வேதாந்தத்தின் அவசியம்


மனிதனின் பிறப்பு, இறப்பு இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஏற்படக்கூடிய சுகம், துக்கம், கஷ்டம், சோதனைகள் போன்றவற்றுக்கான காரணங்களைக் கூறுவ துடன், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் வேதாந்தம் கூறுகிறது. வேதாந்தம்தான் மனிதனுடைய ஆழ்துயரத்தை நீக்கி, பேரானந்தத்தை வழங்கும் வல்லமை உள்ளது. 'அத்யந்திகா துக்க நிவ்ருத்தி பரமானந்த அவாப்தி’ என்று வேதங்கள் கூறுகின்றன. வேதாந்தத்தின் குறிக்கோளே மனிதனின் அனைத்து ஆழ்துயரங்களில் இருந்தும் அவனுக்கு விடுதலை அளித்து, அவனை முடிவற்ற பரமானந்தத்தில் திளைக்கச் செய்வதுதான்.


சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் முக்கியமானது 'எழுமின் விழிமின்.’ சுவாமிஜியின் இந்த போதனைதான், மனிதனை அச்சம் என்பதே அறியாதவனாகவும், அளவற்ற ஞானத்தைப் பெற்றவனாகவும், பரமானந்தத்தில் திளைப்பவனாகவும் செய்யக் கூடியது. இதுதான் சுவாமிஜியின் முதன்மைக் குறிக்கோள். இதுபற்றி அவரே ஒருமுறை, 'இத்தகைய மனிதர்களை உருவாக்குவதே தமது லட்சியம்’ என்று கூறியிருக்கிறார்.




இந்திய கலாசாரத்தின் அடிப்படையான வேதாந்தத் தத்துவம், ரிக் வேத காலம் தொட்டுப் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருவதாகும். ஒவ்வொருவரும் கடவுளின் குழந்தையே என்றும், அவர்களை அன்புட னும், கருணையுடனும், இரக்கத்துடனும் நடத்தவேண்டும் என்றும் வேதாந்தம் கூறுவதால், வேதாந்த சமயத்தைக் கடைப் பிடிப்பவர்கள் சேவையையே தங்களின் லட்சியமாகக் கொள்ளவேண்டும் என்பதே சுவாமிஜியின் போதனை!


வேதாந்த சமயத்தின் உன்னத தூதர்


வேதாந்த சமயத்தின் உன்னதக் கோட்பாடு களை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்ற சுவாமிஜியின் லட்சியம் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பம், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டது. சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில், எந்த ஒரு அமைப்பினாலும் அங்கீகரிக்கப்படாமல் தன்னந்தனியராக இந்தியாவின் தூதராக, வேதாந்தத்தின் தூதராகப் பங்கேற்று, 1893 செப்டம்பர் 11-ம் நாள், வரவேற்புரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் நிகழ்த்திய உரையில் காணப்பட்ட அன்பும், சத்தியமும் வெளிநாட்டவரையும் வேதாந்தத்தை ஏற்றுக் கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் செய்தது.


'மதம் என்பது கடவுளை அடையக் கூடிய அனுபவபூர்வமான வழிமுறை; பரமானந்தத்தை அடைய வழிவகுப்பது. அதற்கு முதலில் தன்னையறிதலிலும், மற்றவர்க்குச் சேவை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆத்மனோ மோக்ஷ£ர்த்தம் ஜகத் ஹிதாயச. இத்தகைய குறிக்கோள்தான் ஒரு மனிதனை தூய்மையான, பரிசுத்தமான, தெய்விகத்தன்மைக்கு இட்டுச் செல்லும். அன்பைப் போதிக்கும் சர்வ வியாபகமான வேதாந்த மதம் மனிதநேயத்தை வளர்ப்பதுடன், நிறவெறி, இனவெறி போன்றவற்றில் இருந்தும் மனித குலத்தைக் காப்பாற்றுகிறது.


உண்மையான சமயம் என்பது உணர்ந்து அறியக்கூடியதே தவிர, மூட நம்பிக்கைகளால் ஆனதல்ல. இன்றைய உலகத்தின் அவசியத் தேவை சமய நல்லிணக்கம் மட்டும்தான். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் மனிதநேயத்து டனும் சேவை மனப்பான்மையுடனும் நடந்துகொண்டால், அதுவே அவனைத் தூய்மையுள்ளவனாகவும், தெய்வி கத்தன்மை பெற்றவனாகவும் செய்கிறது...’


சுவாமிஜியின் அன்பும் கனிவும் நிறைந்த இந்த உரையானது, அந்த அரங்கத்தில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கவனத்தை ஈர்த்ததுடன், சுவாமிஜியை லோககுரு பீடத்திலும் ஆரோகணிக்கச் செய்தது. சுவாமிஜியின் போதனைகள் மேலை நாடுகளில் பெரும் மாற்றத்தை விளைவித்தன. சுவாமிஜியின் விஜயத்துக்குப் பிறகுதான், அதுவரை வேதாந்த சமயத்தை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாட்டினர், வேதாந்தத்தின் உண்மைகளையும், இன்றைய உலகிற்கு அதன் அவசியத் தேவை பற்றியும் உணர்ந்து கொண்டனர்.


இன்றைக்கு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் வேதாந்தத்தைக் கற்க ஆரம்பித்து விட்டனர் என்று ஓர் அமெரிக்கர் எடுத்துரைக் கிறார். அமெரிக்காவில் இன்று வேதாந்த புத்தகங்கள் அனைத்துக் கடைகளிலும் அதிகமாக விற்பனை ஆகின்றன.




'ஏழை மக்களுக்குச் செய்யும் உதவிகள், மகேஸ்வர பூஜைக்குச் சமமாகும்’ என்கிற சுவாமி விவேகானந்தரின் விலைமதிப்பற்ற வார்த்தைகளானது அனைத்து உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. சில வருடங்களுக்கு முன்பு, மொரீஷியஸ் நாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே, 10,000 பேர் அமரக்கூடிய ஒரு பிரமாண்டமான அரங்கத்துக்கு 'சுவாமி விவேகானந்தா அரங்கம்’ என்று பெயர். அதன் முகப்பில், சுவாமிஜியின் மார்பளவு திருவுருவத்தின் கீழ் 'தேசம், இனம், சமயம் போன்ற எந்த வேறுபாடும் இல்லாமல், ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் உதவி செய்வதே சர்வ வியாபகமான சமயம்’ என்ற வேதாந்தத் தத்துவத்தின் மையக் கருத்து பொறிக்கப் பட்டிருந்ததைக் கண்டேன்.


பில்கேட்ஸ் ஒருமுறை இந்தியா வந்திருந்த போது, சுவாமிஜியின் 'கர்ம யோகா’ என்ற புத்தகத்தைப் படித்ததாகவும், அதிலிருந்துதான் பணக்காரர்கள் ஏழைகளுக்குத் தன்னலமற்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தான் கற்றுக் கொண்டதாகவும் கூறியதுடன், அன்றுமுதல் தன் செல்வத்தில் கணிசமான பகுதியை மக்கள் நலப் பணிகளுக்கு ஒதுக்கி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


ஆம்! சுவாமிஜியின் கருத்துக்களும் விளக்கங்களும் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை அளிக்கவல்லன. நமது தேடலைத் தெளிவுபடுத்தி, லட்சியத்தைத் துல்லியமாக்கும் மந்திரச் சொற்கள் அவருடையவை. அதன் அட்சரங்கள் ஒவ்வொன்றையும் முறையாக உபயோகித்து, வாழ்க்கை வேள்வியில் வெற்றி பெறுவோம்!

No comments:

Post a Comment