விக்கிரமாதித்தனாகிய கிளி பட்டியுடன் ஊர் திரும்பியதை போன பதிவில் பார்த்தோம். பட்டி எப்படி கிளியை ராஜாவாக மாற்றினான் என்று பார்ப்போம்.
பட்டி ஊர் திரும்பியவுடன் அந்தப்புரத்திற்கு ஒரு செய்தி சொல்லியனுப்பினான். அதாவது அவர்கள் இருந்த விரதம் முடிந்து விட்டது என்றும் மகாராஜா இனி அந்தப்புரத்திற்குள் வருவதற்கு தடை இல்லையென்றும் ராஜாவிடத்தில் சொல்லிவிடுங்கள் என்பதுதான் அந்த செய்தி. அவர்களும் ஒஹோ, நமது ராஜனைப்பற்றி ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும், அதனால்தான் பட்டி இவ்வாறு சொல்லியிருக்கவேண்டும் என்று சந்தோஷப்பட்டு, அதே மாதிரி(கம்மாள) ராஜாவுக்கும் தோழிகள் மூலமாக சொல்லியனுப்பினார்கள்.
கம்மாளனும் ஆஹா, நம் நீண்டநாள் அபிலாட்சை நிறைவேறப்போகிறது என்று சந்தோஷத்துடன் ஆடைஆபரண அலங்கிருதனாய் அந்தப்புறம் நோக்கி வந்தான். அந்தப்புறம் வருவதற்கு சற்று முன்பாக சில தோழிகள் ராஜாவிடம் வந்து “இந்த மாதிரி விரதம் முடிந்து ராஜா அந்தப்புரம் வருமுன் ஒரு ஆட்டுக்கிடா சண்டை வைப்பது வழக்கம், அதில் ஒன்று ராஜாவின் கிடா என்றும், மற்றொன்று ராணிகளின் கிடா என்றும் வைத்துக்கொண்டு கிடாக்களை சண்டைக்கு விடுவோம், அதில் ராஜா கிடா ஜெயித்தால்தான் ராஜா அந்தப்புரம் வரலாம்” என்று சொன்னார்கள். ராஜாவும் அப்படியே நடக்கட்டும் என்று சொல்லி பட்டியிடம் கிடாச்சண்டைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னான்.பட்டி ஏற்கெனவே தயாராக இருந்த இரண்டு கிடாக்களை கொண்டுவந்து சண்டைக்கு விடச்சொன்னான். பட்டி அதில் தாட்டியான கிடாவை ராணிகளின் கிடா என்றும் கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் கிடாவை ராஜா கிடா என்றும் அறிவித்தான்.
இரண்டு கிடாக்களும் வீரமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதி சண்டை போட்டன. அவைகளில் ராஜா கிடா நோஞ்சானாக இருந்தபடியால் அதை ராணிகளின் கிடா முட்டி மோதி கொன்றுவிட்டது. இதைப்பார்த்த ராஜா,ஆஹா, நம் கிடா செத்துவிட்டதா என்று ஆக்ரோஷமாய் தன்னுயிரை கிடாவின் உடம்பில் புகுத்தி, கிடாவை எழுப்பி திரும்பவும் ராணிகளின் கிடாவுடன் சண்டை போடப்போனான். இதைப்பார்த்துக்கொண்டிருந்த பட்டி ஆஹா, நாம் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது என்று உடனே விக்கிரமாதித்தனாகிய கிளியைக்கொண்டு வந்து ராஜாவின் உடம்பின் அருகில் விட்டான். விக்கிரமாதித்தனும் உடனே கிளியின் உடம்பை விட்டு தன் உடலில் பிரவேசித்தான். பட்டி உடனே மல்லர்களை விட்டு கம்மாளன் பிரவேசித்த கிடாவைப்பிடித்து கொன்றுவிடச்சொன்னான்.மல்லர்களும் அவ்வாறே செய்ய கம்மாளனின் உயிர் ஒன்றுக்குமுதவாமல் போய்விட்டது.
உடனே பட்டி எல்லோருக்கும் நமது விக்கிரமாதித்த ராஜா வந்துவிட்டார் என்று பிரகடனம் செய்து அது நாள் வரைக்கும் நடந்த விருத்தாந்தங்களை எல்லோருக்கும் சொன்னான். சகல ஜனங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து, இந்த வைபவத்தை நாடெங்கிலும் கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment