உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகளை ஏற்படுத்தி பெரும் பொருளைச் செலவிட்டும் வருகின்றன. விண்கலங்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் ஏன் சூரியனுக்கும் கூட ஏவி வேவுபார்த்து வருகின்றன. தம்முள்ளே நிலவும் இராணுவப் பகைமைகளை மறந்து கூட்டு முயற்சிகள் மூலமாவது ஏதாவது பலன் கிடைக்குமா என்று பணிந்து போகின்றன விண்வெளி ஆய்வு மையங்கள்! நாடுகள் தோறும் விஞ்ஞானப் பரீட்சைகளை நடத்தி குட்டி விஞ்ஞானிகளை இனம் கண்டு கொள்கின்றன.
எனினும் இவர்களை விட வானியலைப் பற்றி அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தனர் பண்டைக்காலத் தமிழர்கள். அப்படித் தெரிந்து வைத்திருந்தவர்கள் கணியன் என்று அழைக்கப்பட்டனர். கணிக்கத் தெரிந்தவர்கள் கணியனாக இருக்கலாம். சங்க இலக்கியங்களும் தேவாரங்களும் இராமாயணமும் தனிப்பாடல்களும் அதற்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன.
சங்கத் தமிழர்கள் வான் கோள்களில் தாமே ஒளிவிடக் கூடியவற்றையும் சூரியனிடம் இருந்து கடன்பெற்று ஒளிவிடுவனவற்றையும் கண்டறிந்து நாண் மீன்கள் கோள் மீன்கள் என்று பெயர் சூட்டி அழைத்தனர்.
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோள்மீன் போல
என்று பட்டினப்பாலை என்ற சங்கநூல் இதனை அழகாகப் பேசும். அது போல வெள்ளி எனும் கோள் வடக்கு திசையில் நின்றால் மழை உண்டு என்றும் தெற்கு ஏகினால் மழை இன்மையும் ஏற்படும் என்றும் பதிற்றுப் பத்தும் சொல்கின்றது. அது போல சூரியனிலிருந்து சிதறும் துகள்களே எரி கற்கள் என்பதும் அவர்களுக்கத் தெரிந்து இருந்திருக்கிறது. இதனை வெங்கதிர் கனலி துற்றும் என்றது புறநானூறு. அது போல கோள்கள் சுற்றும் பாதைகள் பற்றியும் அவர்கள் அறிந்து இருந்தனர்.
பௌர்ணமி நாளில் சூரியனும் சந்திரனும் எதிர் எதிரே நிற்கும். ஆனால் நிலவு தோன்றும் கணத்திலேயே சூரியன் மறைந்து விடும் என்ற உண்மையையும் அவர்கள் பாடியிருக்கிறார்கள்.
உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந்து ஆங்கு
இதிலே வியப்பு என்ன வென்றால் நிலவு தோன்றும் பொது சூரியன் மறையும் என்றால் அவற்றில் ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிஎயன்றால் ஒன்றுக்கு ஒன்று எதிராக நின்ற உண்மை எப்படி அறியப்பட்டது என்பதே!
சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.
சு10ரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பாhத்து ஆராய்ந்து அறிந்த வந்த வானியல் அறிஞர்களும் எம்மிடையே இருக்கிறார்கள்.
செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
இது அவன் பாடிவைத்த பாடல். இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆயு;வு செய்யப் போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பாhத்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு தான் விடை சொல்கின்றது.
இன்று உலகம் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறது? அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. இதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம் வலவன் என்றால் சாரதி ஏவாத என்றால் இயக்காத வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட றைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும். எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏற்றிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்; என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்தால் கெலியாக இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.
கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.
மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.
விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.
இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும். உண்மைதான்! ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்வார்.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்
பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.
மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று ஒரு மந்திரியான மணிவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! பைதகரஸ் என்ற கணித மேதை மூலை விட்டத்தை அளப்பதற்கு ஒரு விதி சொன்னார். ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் வர்க்கமானது மற்ற இருபக்கங்களின் வர்க்கத்தின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாக இருக்கும் என்பது அவரின் கண்டுபிடிப்பு. இதை அவர் பிறப்பதற்கு முன்னரே ஒரு தனிப்பாடல் அதுவும் தமிழ்ப்பாடல் இப்படிச் சொல்கிறது
ஓடிய நீளம் தன்னை
ஓரெட்டுக் கூறது ஆக்கி
கூறதில் ஒன்றைத் தள்ளிக்
குன்றத்தில் பாதி சேர்த்தால்
நீடிய கரணம் தானே!
ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை. பைதகரஸ் மடடுமே வெளிச்சத்துக்கு வந்தார்.
இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும்.
வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். வள்ளுவருக்கும் வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது இஸ்ரோவுக்கும் முதல்!
இதையே இராமாயணம் பாடிய கம்பர் வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது வாலி இறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் என்று குறிப்பிடுவார்.
தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்.
அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்
ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது.
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பாhத்தால் வேற்றுக் கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.
இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப் படவுமில்லை! ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள். அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும். இருக்கத்தான் செய்யும்.
அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது சங்க இலக்கியங்கள் விஞ்ஞானிகளால் தேடிப் படிக்கப்படும்.