Tuesday, August 4, 2015

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை 2

மறுநாள் காலையில் எழுந்த விக்கிரமாதித்தன் தேவலோக நந்தவனத்திற்குப்போய் மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம், முதலான பூக்களைச்சேகரித்து, சில,பல நண்டு, நட்டுவாக்களி, தேள் ஆகிய விஷஜந்துக்களையும் சேகரித்து, அந்த விஷ ஜந்துக்களை உள்ளே வைத்து அந்தஜந்துக்கள் வெளியே தெரியாதபடி மலர்களைக்கொண்டு இரண்டுசெண்டுகள் தயாரித்தான்.

பிறகு விடுதிக்குச் சென்று காலைக்கடன்களை முடித்து, அந்தமலர்ச்செண்டுகளை எடுத்துக்கொண்டு, ஆடையாபரணலங்கிருதனாய்இந்திர சபைக்கு வந்தான். அப்போது இந்திரனும் வர, அவர்களிருவரும்பேசிக்கொண்டே சென்று அவரவர்கள் ஆசனத்தில் அமர்ந்தார்கள். அப்போது இந்திரன் விக்கிரமாதித்தனைப்பார்த்து நடனத்தைஆரம்பிக்கலாமா என்று கேட்க, விக்கிரமாதித்தனும் சம்மதித்தான். இந்திரன்சைகை காட்ட ரம்பையும் ஊர்வசியும் சபையினுள் புகுந்து அனைவருக்கும்வணக்கம் சொல்லி தங்கள் நடனத்தை ஆரம்பித்தார்கள். அவர்கள் முன்னும்பின்னும் சுழன்றும், குனிந்தும், நிமிர்ந்தும், மான்களைப்போல்துள்ளிக்குதித்தும் ஒருவருக்கொருவர் சளைக்காமலும், தாளம் தப்பாமலும்ஆடின நடனத்தைப்பார்த்த தேவர்களும், மற்றோர்களும், விக்கிரமாதித்தன்இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வி எவ்வாறு கண்டுபிடித்துசொல்வானோவென்று ஆச்சரியத்துடன் காத்திருந்தார்கள்.

அப்போது விக்கிரமாதித்தன் அந்த நடனமாதர் இருவரையும் அருகில்அழைத்து, நீங்கள் நடனம் ஆடும் சிறப்பு மிகவும் மேன்மையாக இருக்கிறது. ஆனாலும் நீங்கள் வெறும் கையால் அபிநயம் பிடித்து ஆடுவதை விட இந்தமலர்ச்செண்டை கையில் பிடித்துக்கொண்டு ஆடினால் இன்னும் சிறப்பாகஇருக்கும் என்று கூறி, அவன் கொண்டுபோயிருந்த மலர்ச்செண்டுகளைஅவர்கள் கையில் கொடுத்தான். அவர்களும் ஆஹா, விக்கிரமாதித்தமகாராஜா நமது நடனத்தை மெச்சி பரிசாக இந்தமலர்ச் செண்டுகளைக்கொடுத்தார் என்று சந்தோஷப்பட்டு அந்த மலர்ச்செண்டுகளை கையில்பிடித்துக்கொண்டு இன்னும் உற்சாகத்துடன் நடனமாடினார்கள்.

இப்படி அவர்கள் நடனமாடியதில் ரம்பையானவள் அந்தப் பூச்செண்டைலாவகமாகவும், லேசாகவும் பிடித்துக்கொண்டு ஆடினாள். ஊர்வசியோ அந்தமலர்ச்செண்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அதனுள்இருந்த விஷ ஜந்துக்கள் அவள் விரலைத் தீண்ட, அவளுக்கு விஷம் ஏறிநடனத்தில் தாளம் தப்பி, தடுமாறி கீழே விழுந்து விட்டாள். அப்போதுவிக்கிரமாதித்தன் எழுந்து ரம்பையே போட்டியில் வென்றவள் என்றுசபையோருக்கு அறிவித்தான். இந்திரன் முதலான சகல தேவர்களும்கைகொட்டி அதை ஆமோதித்தார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு விக்கிரமாதித்தன் இந்த வெற்றி தோல்வியினைஎவ்வாறு கண்டுபிடித்தான் என்று தெரிந்துகொள்ள ஆவல். இதைதேவேந்திரனே விக்கிரமாதித்தனிடம் கேட்க, விக்கிரமாதித்தன் அந்தஇரண்டு மலர்ச்செண்டுகளையும் கொண்டு வரச்செய்து அவைகளைப்பிரித்துக் காட்டினான். அவைகளுக்குள் இருந்த விஷ ஜந்துக்களைஎல்லோரும் பார்த்தார்கள். விக்கிரமாதித்தன் சொன்னான், நான் இவ்வாறுமலர்ச்செண்டுகளை காலையில் தயார் செய்து கோண்டு வந்திருந்தேன். அவைகளை இந்த நடனமாதர்களின் கையில் கொடுத்து ஆடச்சொன்னதையாவரும் பார்த்தீர்கள். ரம்பை இந்த மலர்ச்செண்டை லகுவாகப்பிடித்துக்கொண்டு ஆடியதால் இந்த விஷ ஜந்துக்கள் அவளை ஒன்றும்செய்யவில்லை. ஊர்வசியோ இந்த மலர்ச்செண்டை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அவளை இந்த விஷ ஜந்துக்கள் தீண்டி, அவள் தாளம் தப்பி ஆடினாள் என்று சொல்ல, எல்லோரும்விக்கிரமாதித்தனின் புத்தி சாதுர்யத்தை மெச்சிப் புகழ்ந்தார்கள். பிறகு சபைகலைந்தது.

தேவேந்திரன் கேட்டுக்கொண்டதினால் விக்கிரமாதித்தன் மேலும் சிலதினங்கள் இந்திரலோகத்தில் தங்கினான். நான்கைந்து தினங்கள்சென்றபிறகு, விக்கிரமாதித்தன் தேவேந்திரனைப்பார்த்து, நான் என்நாட்டைவிட்டு வந்து பல தினங்கள் ஆகிவிட்டன. எல்லோரும் 
என்னைஎதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள், ஆகவே எனக்கு விடைகொடுக்கவேண்டும் என்று 
கேட்க, இந்திரனும் அப்படியே ஆகட்டும் என்றுகூறி, குபேரனைக்கூப்பிட்டு நமது 
பொக்கிஷசாலையில் இருக்கும் அந்தமுப்பத்திரண்டு பதுமைகள் வைத்த ரத்தின சிம்மாசனத்தை எடுத்து வருமாறுபணித்தான். அவனும் அவ்வாறே அந்த சிம்மாசனத்தை சபையில் கொண்டுவந்து வைத்தான். அந்த சிம்மாசனமோ மிகுந்த வேலைப்பாட்டுடனும், விலைமதிக்க முடியாத நவரத்தினங்கள் பதித்து, முப்பத்திரண்டுபடிகளுடனும், ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு பதுமையும் கூடி, கண்டோர்வியக்கும் வண்ணம் தேவலோக சிற்பி மயனால் இயற்றப்பட்டதாகும்.

தேவேந்திரன் விக்கிரமாதித்தனை பலவாறாகப் புகழ்ந்து, அந்தசிம்மாதனத்தை விக்கிரமாதித்தனுக்கு கொடுத்து, இந்த சிம்மாசனத்தைஎங்கள் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி, இந்தசிம்மாசனத்தில் நீ ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள்ஆட்சி புரிவாயாக என்ற வரமும் கொடுத்தருளினான். கூடியிருந்த மற்றதேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவ்வாறே ஆகுக என்றுவாழ்த்தினார்கள். பிறகு இந்திரன் மாதலியைக்கூப்பிட்டு, விக்கிரமாதித்தமகாராஜாவையும், இந்த சிம்மாசனத்தையும் அவருடைய நாட்டில்சேர்ப்பித்துவிட்டு வருவாயாக என்று பணித்தான். விக்கிரமாதித்தனும்எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு தேரில் ஏற, மாதலியும் சிலநொடிகளில் விக்கிரமாதித்தனின் சபை முன்பு தேரைக் கொண்டு போய்நிறுத்தினான். ராஜா தேரிலிருந்து இறங்கிக்கொண்டு பணியாட்களைக்கூப்பிட்டு முப்பத்தியிரண்டு பதுமைகள் கூடிய சிம்மாசனத்தை இறக்கிராஜசபையில் வைக்கச்சொல்லிவிட்டு, மாதலிக்கு விடைகொடுத்தனுப்பினான். அதற்குள் ராஜா வந்துவிட்ட சேதி தெரிந்து பட்டியும், மற்ற மந்திரி பிரதானிகளும் வாசலுக்கு வந்து ராஜாவிற்கு முகமன் கூறிவரவேற்று அரண்மனைக்குள் அழைத்துப் போனார்கள்.

எல்லோரும் அவரவர்கள் ஆசனங்களில் அமர்ந்தானபிறகு பட்டிஎழுந்திருந்து “தேவரீர் இங்கிருந்து தேவலோகம் சென்று திரும்பினவரையிலான செய்திகளைக்கேட்க அனைவரும் ஆவலாக இருக்கிறோம், ஆகவே அவற்றை தாங்கள் எடுத்துக்கூற வேண்டுகிறோம்” என்றுவிக்ஞாபித்தான். விக்கிரமாதித்தனும் அவ்வாறே தான் தேவலோகம் சென்றுரம்பை ஊர்வசி நடனப்போட்டிக்கு தீர்ப்பு சொன்னது, தேவேந்திரன் ரத்தினசிம்மாசனம் கொடுத்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம் 
கொடுத்துஅனுப்பியது வரையிலான விருத்தாத்தங்கள் எல்லாவற்றையும் விரிவாகச்சொன்னான். எல்லாவற்றையும் கேட்ட பட்டி, தேவரீருக்கு ஆயிரம்ஆண்டுகள் வரம் வாங்கி வந்தீர்களே, எனக்கு ஏதாவது கேட்டு வாங்கிவந்தீர்களாவென்று கேட்க, பட்டி, உன்னை மறந்தேனே, என்ன செய்வதுஎன்க, பட்டியும் போனால் போகிறது, விடுங்கள் என்று சொன்னான். அப்போது சூர்யாஸ்தமன நேரம் ஆகிவிட்டபடியால் சபை கலைந்துஎல்லோரும் அவரவர்கள் இருப்பிடங்களுக்குப் போய் சேர்ந்தார்கள்.

அன்று இரவு படுக்கப்போன பட்டிக்கு தூக்கம் வரவில்லை. நமது ராஜாஇவ்வாறு தனக்கு மட்டும் ஆயுள் வாங்கிக்கொண்டு என்னை மறந்துவந்தாரே, நாம் இருவரும் ஆயுள் பரியந்தம் ஒன்றாக இருப்பதாகஅம்மன்முன் சபதம் எடுத்தோமே, அது இப்போது வீணாய்ப்போய்விடும்போல்இருக்கிறதே என்று பலவாறாக யோசனை செய்து, எதற்கும் நமக்கு நம்மாகாளியம்மன் துணை இருக்கும்போது என்ன கவலை என்று உடனேபுறப்பட்டு உச்சினிமாகாளியம்மன் கோவிலை அடைந்தான். அப்போது இரவுமூன்றாம் ஜாமம் ஆரம்ப சமயமானதால் அம்மன் நகர்வலம் போயிருந்தாள். சரி, அம்மன் வரட்டும் என்று பட்டி அம்மனைத் துதித்துக் கொண்டு அங்கேயேஇருந்தான். சிறிது நேரத்திற்குப் பின் வந்த அம்மன் பட்டியை அங்கே பார்த்துஆச்சர்யப்பட்டு, ஏது பிள்ளாய் பட்டி, இந்த நேரத்தில் இங்கு விஜயம் என்றுகேட்க, பட்டியும் அம்மனைப் பலவாறாகத் தோத்திரம் செய்து, அம்மா, நீயல்லவோ ஏழை பங்காளன், எனக்கு உன்னை விட்டால்யாரிருக்கிறார்கள், நீதான் எனக்கு அருள் புரியவேண்டும் என்று தோத்திரம்செய்ய, பட்டியும் விக்கிரமாதித்தன் இந்திரலோகம் சென்று வந்தவிருத்தாத்தங்களயெல்லாம் கூறி அங்கு அவன் தனக்கு மட்டும் ஆயிரம்ஆண்டுகள் வரம் வாங்கிக்கொண்டு, தன்னை மறந்து விட்டு வந்ததையும்கூறினான்.
அப்போது அம்மன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, பட்டியும்விக்கிரமாதித்தன் தேவலோகத்துக்குப் போய் ஆயிரம் ஆண்டுகள் ஆயுள்வாங்கி வந்திருக்கிறான், நீ எனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ வரம்கொடுக்க வேண்டுமென்று கேட்க, அம்மன் இது என்னால் முடியாத காரியம்ஆயிற்றே என்று சொல்ல, பட்டியும் “அம்மா, உன்னால் முடியாத காரியமும்இந்த லோகத்தில் இருக்கிறதோ என்று பலவாறாக வேண்ட, அம்மன்ஏதாவது சால்ஜாப்பு சொல்லி 

இவனை அனுப்பிவிடலாம் என்றெண்ணி, அப்படியானால் நீ போய் விக்கிரமாதித்தனுடைய தலையைவெட்டிக்கொண்டு வந்தாயானால் உன்னுடைய கோரிக்கையைநிறைவேற்றுகிறேன் என்று சொன்னாள். பட்டி சரி, அப்படியே செய்கிறேன்என்று சொல்லிவிட்டு, உடனே விக்கிரமாதித்தன் அரண்மனைக்குச்சென்றுஅவன் சயனமண்டபத்துக்குள் புகுந்து அவனை எழுப்பினான். எழுந்தவிக்கிரமாதித்தன் பட்டியைப்பார்த்து ஏது பிள்ளாய் பட்டி, இன்னேரத்தில்இங்கு வந்த காரணம் என்னவென்று கேட்க, பட்டியும் “தேவரீர் தலை ஒருகாரியமாய் அவசரமாகத் தேவைப்படுகிறது, அதற்காகத்தான் வந்தேன்” என்றான். விக்கிரமாதித்தனும் “சரி எடுத்துக்கொண்டு போ” என்று சொல்லிபடுத்துக்கொண்டான். 

பட்டி உடனே உடைவாளை உருவி விக்கிரமாதித்தன் தலையை ஒரேவெட்டாக வெட்டி தலையை எடுத்துக்கொண்டு அம்மன் கோவிலுக்குச்சென்று தலையை அம்மன் காலடியில் வைத்தான். அம்மன் திடுக்கிட்டு, ஓஹோ, இனிமேல் இவனுக்கு சால்ஜாப்பு சொல்லக்கூடாது என்று முடிவுசெய்து வாரும் பிள்ளாய் பட்டி, நான் சொன்ன காரியத்தை நீ செய்துமுடித்துவிட்டபடியால் நீ கேட்ட இரண்டாயிரம் வருடம் ஆயுளைத் தந்தோம், சுகமாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்தாள். கேட்ட வரத்தைப் பெற்றுக்கொண்ட பட்டி அம்மனைப் பார்த்து கெக்கெக்கென பலமாகச் சிரித்தான். அம்மனுக்கு இவன் சிரித்த்தைப்பார்த்ததும் கோபம் வந்து யாது பிள்ளாய் நீஇப்போது சிரித்த காரணம் யாது, உடனே சொல்லக்கடவாய் என்று கேட்கபட்டியும் கூறலுற்றான். அம்மா தாயே இதோ இருக்கும் விக்கிரமாதித்தன்தேவலோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மற்றுமுள்ள முனிசிரேஷ்டர்களும் கூடி ஆசீர்வதித்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம்கொடுத்தனுப்பி இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் என்கையால் வெட்டப்பட்டு அவன் தலை உன் முன்னால் இருக்கிறது. அப்பேர்க்கொத்த வரத்திற்கே இந்த கதியென்றால் நீ கொடுத்த வரம்எத்தனை நாளைக்கு நிற்கப்போகிறதோ என்று நினைத்துச் சிரித்தேன்என்றான்.

அம்மனும் அவன் வார்த்தைச் சாதுர்யத்திற்கு மெச்சி, வாரும் பிள்ளாய் பட்டி, நீ அப்படி சந்தேகப்படவேண்டியதில்லை, என்னுடைய வரம் என்றென்றும்நிற்கும், நீ பயப்படவேண்டியதில்லை, ஆனாலும் உன்னுடைய வாக்குச்சாதுர்யத்தை மெச்சி, விக்கிரமாதித்தனையும் உயிரூட்டுகிறோம் என்று கூறி, இதோ தீர்த்தமும் பிரம்பும் தருகிறோம், நீ இந்த தலையை எடுத்துக்கொண்டுபோய் விக்கிரமாதித்தன் உடம்பில் வைத்து தீர்த்தம் தெளித்து பிரம்பால்தட்டியெழுப்புவாயாகில் அவன் உயிருடன் எழுந்திருப்பான் என்று சொல்லிதீர்த்தமும் பிரம்பும் கொடுத்தனுப்பினாள். பட்டியும் அம்மனைப் பலவாறாகப்புகழ்ந்து தீர்த்த த்தையும் பிரம்பையும் வாங்கிக்கொண்டு, விக்கிரமாதித்தன்தலையையும் எடுத்துக்கொண்டு விக்கிரமாதித்தன் உடல் இருக்குமிடத்திற்குவந்து தலையை உடலுடன் ஒட்டி வைத்து தீர்த்தத்தை தெளித்து பிரம்பால்தட்டி எழுப்பினான்.

விக்கிரமாதித்தனும் தூக்கத்திலிருந்து எழுபவன் போல் எழுந்திருந்து, வாரும்பிள்ளாய் பட்டி, என் தலையை அவசரமாக இரவல் வாங்கிக்கொண்டு போனகாரியம் என்னவென்று கேட்க, பட்டியும் நடந்த விருத்தாந்தங்களைச்சொல்லி தான் அம்மனிடம் இரண்டாயிரம் ஆண்டுகள் வரம் வாங்கி வந்ததுவரை சொன்னான். அதைக்கேட்ட விக்கிரமாதித்தன் நல்ல காரியம்செய்தாய் பட்டி, ஆனால் ஒன்று, எனக்கு தேவேந்திரன் கொடுத்த ஆயுள்ஆயிரம் வருடம்தானே, நீ இப்போது அம்மனிடம் பெற்றுள்ள ஆயுள்இரண்டாயிரம் வருடம் ஆயிற்றே, இதற்கு என்ன செய்வது என்று கேட்க, பட்டி சொன்னான், தேவரீர் இந்திரனிடம் பெற்ற வரம், ஆயிரம் வருடங்கள்ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆட்சி புரிவதற்கல்லவா, நாம் ஒன்றுசெய்வோம், ஆறு மாதம் அரசாட்சி செய்த பிறகு ஆறு மாதம் காட்டுக்குச்சென்று வனவாசம் செய்வோம், அப்போது தேவரீருடைய ஆயளும்இரண்டாயிரம் வருடங்கள் ஆகிவிடும் என்று சொல்ல விக்கிரமாதித்தனும்பட்டியின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, ஆகா, பட்டி உன்னுடைய புத்தியேபுத்தியென்று சொல்லி அவனைப்பாராட்டி, சரி, இரவு வெகு நேரம்ஆகிவிட்டது, நீ சென்று நித்திரை கொள் என்று அவனை வழியனுப்பிவிட்டுவிக்கிரமாதித்தனும் நித்திரை போனான்.

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை1

விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்டு மக்கள் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷத்துடனும் இருந்தார்கள். நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது. புலியும் பசுவும் ஒரே துறையில் நீர் அருந்தின. கீரியும் பாம்பும் ஓடிப்பிடித்து விளையாடின. விக்கிரமாதித்தனும் நீதிநெறி தவறாமல் அரசாண்டு வந்தான். அவனுடைய புகழ் நாடு நகரமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கியது.

இவ்வாறிருக்கும் நாளில் தேவலோகத்தில் ஒரு பிரச்னை உருவாயிற்று. தேவலோகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை என்ற நான்கு நடன மங்கையர் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ் சினிமா நடிகைகள் என்று குழம்பவேண்டாம், இவர்கள் வேறு. இதில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் தொழில் போட்டி வந்துவிட்டது. தங்களில் யாருடைய நடனம் சிறந்தது என்பதில் வாக்குவாதம் தொடங்கி பெரிய சண்டையாகி தேவேந்திரனிடம் பஞ்சாயத்திற்குப் போயிற்று. அவனும் ஒரு நாள் தேவசபையில் இவர்கள் இருவரையும் நடனமாடச்சொல்லி கவனமாகப் பார்த்தான். அவனால் இவர்களின் ஆட்டத்தில் உயர்வு தாழ்வு கண்டுபிடிக்க முடியவில்லை. தேவசபையில் இருந்த எல்லோரையும் கேட்டான். ஒருவராலும் இவர்கள் ஆட்டத்தில் வேறுபாடு காண முடியவில்லை. சரி, அப்புறமாக தீர்ப்பு கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான். 

அப்போது சர்வலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் நாரதரைப் பார்த்து வாரும் நாரதரே, இங்கு நடந்ததைப்பார்த்தீர்கள் அல்லவா? இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வியைச்சொல்ல என்னால் முடியவில்லை. நீர்தான் திரிலோக சஞ்சாரியாயிற்றே, இந்தப்பிரச்னைக்கு தீர்வு சொல்லக்கூடியவர்கள் எங்காவது இருக்கிறார்களா என்று கேட்க, நாரதர் சொன்னார், பூலோகத்திலே உஜ்ஜனிமாகாளிப்பட்டினம் என்ற ஊரிலே விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா இருக்கிறான். அவன் சகல கலைக்ஞானமும், வீரதீரப் பராக்கிரமும், அதிவிவேகமும் உடையவனாய், பூலோக முழுவதும் பிரக்யாதி பெற்று விளங்குகிறான். அவனை நீர் நமது தேவலோகத் தேரை அனுப்பி வரவழைத்தீராகில் அவன் இந்தப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு பிடித்து சொல்லுவான் என்றார்.

உடனே தேவேந்திரனும் தேவலோக சாரதி மாதலியைக் கூப்பிட்டு உடனே பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு போய் அங்கு அரசாண்டு கொண்டிருக்கும் விக்கிரமாதித்த ராஜாவை நாம் அழைத்து வரச் சொன்னதாய்க் கூறி அவனை நம் ரதத்தில் ஏற்றிக்கொண்டு சீக்கிரம் வருவாயாக என்று உத்திரவிட்டான். அவ்வாறே மாதலியும் தேவலோக ரதத்தில் குதிரைகளைப் பூட்டி பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு வந்தான். அந்தக்குதிரைகள் எப்படிப்பட்டவை என்றால் தேரில் பூட்டிவிட்டால் வாயு வேகம் மனோ வேகம் என்று சொல்லக்கூடிய வேகத்தில் செல்லக்கூடியவை.

மாதலி விக்கிரமாதித்தன் அரச சபையில் பிரவேசித்து ராஜாவிற்கு வந்தனம் சொல்லி தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். விக்கிரமாதித்தனும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று யாது பிள்ளாய், இவ்வளவு தூரம் வந்த காரணம் என்ன என்று கேட்க, மாதலி, மகாராஜா, தேவேந்திரன் யாது காரணமாகவோ தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று கூறினான். விக்கிரமாதித்தன் பட்டியை நோக்க, பட்டியும் ராஜாவின் குறிப்புணர்ந்து மகாராஜா, எல்லாம் நல்ல காரியமாய் முடியும், சென்று வாருங்கள் என்று கூற, விக்கிரமாதித்தனும் சர்வாபரண, ஆயுதலரங்- கிருதனாய் புறப்பட்டு மாதலியைப்பார்த்து, போகலாமா என்று கேட்டான். மாதலியும் தேரை அரண்மனை வாசலில் கொண்டு வந்து தயாராக நிறுத்தினான். விக்கிரமாதித்தனும் சபையில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை வாசலுக்கு வந்து தேரில் ஏறுவதற்காக ஒரு கையினால் தேர்க்காலைப்பிடித்துக்கொண்டு ஒரு காலைத்தூக்கி தேர்த்தட்டில் வைக்கும்போது மாதலி குதிரைகளின் லகானைச்சுண்ட, அந்தக் குதிரைகள் வாயுவேகம் மனோவேகமாக நூறு யோஜனை தூரம் சென்றன. அது ஏனென்றால், மாதலிக்கு மனதிற்குள் ஒரு மானுடனை நம் தேரில் ஏற்றிச்செல்வதா என்ற ஆணவம்.

விக்கிரமாதித்தன் தேர்க்காலை ஒரு கையில் பிடித்து ஒரு கால் பெருவிரல் தேர்த்தட்டில் இருக்க, பிடித்த பிடியும், வைத்த காலும் அப்படியே இருக்க தேரில் ஒட்டிக்கொண்ட அட்டை போல் 
அசராமல் வந்து கொண்டிருந்தான்.இதைப்பார்த்த மாதலி, ஆஹா, நாம் என்னவோ இவன் சாதாரண மானுடன் என்று எண்ணினோம், ஆனால் இவன் மிகுந்த வீரதீரப்பராக்கிரமசாலியாய் இருக்கிறானே, இவனை நாம் சரியானபடி தேவலோகம் கொண்டுபோய் சேர்க்காவிடில் நமக்கு வேலை போய்விடும் என்று யோசித்து தேரை நிறுத்தி, கீழே இறங்கி விக்கிரமாதித்தனை வணங்கி, மகாராஜா, நான் தங்களை சாதாரணமாக நினைத்து விட்டேன், என்னை மன்னிக்கவேண்டும் என்று கூறி, கைலாகு கொடுத்து விக்கிரமாதித்தனை தேரில் ஏற்றி ஆசனத்தில் உட்காரவைத்து, தேரை தேவேந்திரன் சபை வாசலில் கொண்டு போய் நிறுத்தினான். விக்கிரமாதித்தன் வருவதைப்பார்த்த தேவேந்திரன் முதலான தேவர்கள் சபையின் வாசலுக்கே வந்து ராஜனை வரவேற்று சபைக்குள் அழைத்துப்போய் தனக்கருகில் ஓர் ஆசனம் போடச்செய்து, தேவேந்திரனும், விக்கிரமாதித்தனும் உட்கார்ந்துகொண்டு பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அப்போது விக்கிரமாதித்தனும் தேவேந்தரனை நோக்கி, தேவேந்திரா, என்னை இங்கு அவசரமாய் அழைத்து வரச்சொன்ன காரணம் என்னவெனக்கேட்க, தேவேந்திரன் சொன்னான், அகோ வாரும் விக்கிரமாதித்தா, நமது இந்திர சபையில் வழமையாக நடனமாடும் நால்வரில் ரம்பை, ஊர்வசி ஆகியோருக்கிடையில் தங்கள் தங்கள் திறமையில் கர்வமுண்டாகி நான்தான் சிறந்தவள் என்று இருவரும் கூறிக்கொண்டு, தங்களில் யார் சிறந்தவள் என்று தீர்மானித்துக் கூறும்படியாய் என்னிடத்தில் வந்தார்கள். நானும் அவர்களது நடனத்தைப்பார்த்து யாருடைய நடனம் சிறந்தது என்று கூற முடியவில்லை. அப்போது நாரதர் உன்னுடைய வீரப்பிரதாபங்களையும், சகல கலைக்ஞானத்தைப்பற்றியும், நீதி தவறாத ஆட்சியைப்பற்றியும் கூறி, இந்த நடனமாதர்களின் சிறப்பை உன்னால்தான் கணித்துச்சொல்ல முடியும் என்று கூறியதால் அந்தக்காரியத்திற்காக உன்னை இங்கு வரவழைத்தோம் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் சரி, நாளைக்காலையில் அவர்கள் இருவரையும் இங்கு சபையில் நடனமாடச்சொல்லுங்கள், நான் எனக்குத்தெரிந்த வரையில் அவர்களின் ஆட்ட நுட்பத்தை அறிந்து சொல்கிறேன் என்று கூறினான்.

பிறகு இந்திரன் சில சேடிப்பெண்களைக் கூப்பிட்டு விக்கிரமாதித்த மகாராஜாவை அழைத்துப்போய் நமது அரண்மனையில் தங்க வைத்து வேண்டிய உபசாரங்களைச் செய்யுமாறு பணித்தான். அவ்வாறே பணிப்பெண்களும் விக்கிரமாதித்தனை அழைத்துப்போய் போஜனம் செய்வித்து அம்சதூளிமா மஞ்சத்தை தயார் செய்து அவனை சயனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டு ஒரு புறமாய்ப் போய் இருந்தார்கள். விக்கிரமாதித்தனும் சிறிது நேரம் யோசனையாய் இருந்துவிட்டு நித்திரை போனான்.

நாமும் நித்திரை செய்து பிறகு மீதியைப் பார்ப்போமா?

Saturday, May 30, 2015

பழந்தமிழரின் வானியல் கொள்கைகள்

உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகளை ஏற்படுத்தி பெரும் பொருளைச் செலவிட்டும் வருகின்றன. விண்கலங்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் ஏன் சூரியனுக்கும் கூட ஏவி வேவுபார்த்து வருகின்றன. தம்முள்ளே நிலவும் இராணுவப் பகைமைகளை மறந்து கூட்டு முயற்சிகள் மூலமாவது ஏதாவது பலன் கிடைக்குமா என்று பணிந்து போகின்றன விண்வெளி ஆய்வு மையங்கள்! நாடுகள் தோறும் விஞ்ஞானப் பரீட்சைகளை நடத்தி குட்டி விஞ்ஞானிகளை இனம் கண்டு கொள்கின்றன.
எனினும் இவர்களை விட வானியலைப் பற்றி அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தனர் பண்டைக்காலத் தமிழர்கள். அப்படித் தெரிந்து வைத்திருந்தவர்கள் கணியன் என்று அழைக்கப்பட்டனர். கணிக்கத் தெரிந்தவர்கள் கணியனாக இருக்கலாம். சங்க இலக்கியங்களும் தேவாரங்களும் இராமாயணமும் தனிப்பாடல்களும் அதற்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன.

சங்கத் தமிழர்கள் வான் கோள்களில் தாமே ஒளிவிடக் கூடியவற்றையும் சூரியனிடம் இருந்து கடன்பெற்று ஒளிவிடுவனவற்றையும் கண்டறிந்து நாண் மீன்கள் கோள் மீன்கள் என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோள்மீன் போல

என்று பட்டினப்பாலை என்ற சங்கநூல் இதனை அழகாகப் பேசும். அது போல வெள்ளி எனும் கோள் வடக்கு திசையில் நின்றால் மழை உண்டு என்றும் தெற்கு ஏகினால் மழை இன்மையும் ஏற்படும் என்றும் பதிற்றுப் பத்தும் சொல்கின்றது. அது போல சூரியனிலிருந்து சிதறும் துகள்களே எரி கற்கள் என்பதும் அவர்களுக்கத் தெரிந்து இருந்திருக்கிறது. இதனை வெங்கதிர் கனலி துற்றும் என்றது புறநானூறு. அது போல கோள்கள் சுற்றும் பாதைகள் பற்றியும் அவர்கள் அறிந்து இருந்தனர்.

பௌர்ணமி நாளில் சூரியனும் சந்திரனும் எதிர் எதிரே நிற்கும். ஆனால் நிலவு தோன்றும் கணத்திலேயே சூரியன் மறைந்து விடும் என்ற உண்மையையும் அவர்கள் பாடியிருக்கிறார்கள்.

உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந்து ஆங்கு

இதிலே வியப்பு என்ன வென்றால் நிலவு தோன்றும் பொது சூரியன் மறையும் என்றால் அவற்றில் ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிஎயன்றால் ஒன்றுக்கு ஒன்று எதிராக நின்ற உண்மை எப்படி அறியப்பட்டது என்பதே!

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சு10ரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.  இதையெல்லாம் நேரே போய்ப் பாhத்து ஆராய்ந்து அறிந்த வந்த வானியல் அறிஞர்களும் எம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது அவன் பாடிவைத்த பாடல். இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆயு;வு செய்யப் போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பாhத்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு தான் விடை சொல்கின்றது.

இன்று உலகம் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறது? அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. இதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம் வலவன் என்றால் சாரதி ஏவாத என்றால் இயக்காத வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட றைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும். எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏற்றிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்; என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்தால் கெலியாக இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும். உண்மைதான்! ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்வார்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்

பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று ஒரு மந்திரியான மணிவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! பைதகரஸ் என்ற கணித மேதை மூலை விட்டத்தை அளப்பதற்கு ஒரு விதி சொன்னார். ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் வர்க்கமானது மற்ற இருபக்கங்களின் வர்க்கத்தின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாக இருக்கும் என்பது அவரின் கண்டுபிடிப்பு. இதை அவர் பிறப்பதற்கு முன்னரே ஒரு தனிப்பாடல் அதுவும் தமிழ்ப்பாடல் இப்படிச் சொல்கிறது


ஓடிய நீளம் தன்னை
ஓரெட்டுக் கூறது ஆக்கி
கூறதில் ஒன்றைத் தள்ளிக்
குன்றத்தில் பாதி சேர்த்தால்
நீடிய கரணம் தானே!

ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை. பைதகரஸ் மடடுமே வெளிச்சத்துக்கு வந்தார்.

இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும்.

வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். வள்ளுவருக்கும் வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது இஸ்ரோவுக்கும் முதல்!

இதையே இராமாயணம் பாடிய கம்பர் வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது வாலி இறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் என்று குறிப்பிடுவார்.

தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்.


அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.

பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்

ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது.
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பாhத்தால் வேற்றுக் கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப் படவுமில்லை! ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள். அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும். இருக்கத்தான் செய்யும்.
அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது சங்க இலக்கியங்கள் விஞ்ஞானிகளால் தேடிப் படிக்கப்படும்.




Saturday, May 2, 2015

‘மஹா ம்ருத்யுஞ்ஜய’ மந்திரம்



‘ஓம் த்ரையம்பகம் யஜாமஹே

ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்!

உர்வாருக மிவ பந்தனான்

ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!!’

இம்மந்திரத்தை தினமும் 108 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் கூறி வந்தால், ஆரோக்கியமான வாழ்வை நிச்சயமாக அடையலாம். ஜபத்தின் எண்ணிக்கைக்கு ருத்ராட்ச மாலையைப் பயன்படுத்த வேண்டும். இதிலும் வழக்கம் போல அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.

இம்மந்திரத்தை காலை, மாலை உச்சாடணம் செய்து வருவது விரைவான பலன்களை அளிக்கவல்லது. இந்த மந்திரத்தை சுத்தத் திருநீற்றில் 48 முறை பிரயோகம் செய்து அணிந்து கொள்வது மிகவும் விசேஷமானதாகும். உடலின் எந்தப் பகுதி பாதிப்படைந்திருக்கிறதோ அந்தப் பகுதியில் மந்திர உச்சாடணம் செய்த விபூதியைப் பூசலாம்.

அத்தகைய விபூதி சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படுவதால் உடல் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பூசலாம்.

சிறிது விபூதியை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவு ஜபம் செய்து விட்டு அந்தத் திருநீற்றினை வெள்ளி அல்லது செம்பு டம்ளரில் வைக்கப்பட்ட சுத்த ஜலத்தில் போட்டு அதை அருந்தி விடலாம். இதற்கு மிக நல்ல பலன் கிடைக்கும். ஆனால், திருநீறு சுத்தமான பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.